Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

இலக்கியங்கண்ட காவலர்

புலவர் கா. கோவிந்தன்



இலக்கியங்

கண்ட காவலர்



புலவர் கா. கோவிந்தன், எம். ஏ.

முன்னாள் தலைவர்

தமிழ்நாடு சட்டப் பேரவை



தமிழ்த்தாய் பதிப்பகம்

8, மத்துவர் தெரு

சிட்லபாக்கம், சென்னை-600 064.

முன்னுரை

‘இலக்கியங் கண்ட காவலர்’ என்னும் இந்நூல் பண்டைத் தமிழ் மன்னர் சிலரின் வரலாறுகளையும், அவர்தம் தமிழ்ப் பாக்களின் கருத்துக் களையும் கூறுவதொன்றாகும். தமிழின் தொன்மை பற்றியும், சங்க இலக்கியம் பற்றியும் அனைவரும் எளிதாக உணரும் வகையில் இதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி மாணவர் நிலைக்கேற்றவண்ணம் சிறந்த நடையில் எழுதப் பெற்றுள்ளமையால், இந்நூல் மாணவர்க்கு ஏற்றதொரு துணைப்பாட நூலாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலைப் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்க கால மன்னர் களைப் பற்றி நன்கறிந்து கொள்வதுடன், சிறந்த மொழியறிவும் பெறுவர் என உறுதியாக நம்புகின்றோம்.

பதிப்பகத்தார்




பொருளடக்கம்

1. தமிழ் இலக்கியத்தின் தொன்மை

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

2. சங்க இலக்கியம்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

3. அறிவுடை நம்பி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

4. இளந்திரையன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

5. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

6. கணைக்கால் இரும்பொறை

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

7. கோப்பெருஞ் சோழன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

8. நல்லுருத்திரன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

9. நலங்கிள்ளி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

10. நெடுஞ்செழியன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

11. பசும்பூண் பாண்டியன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

12. பூதப் பாண்டியன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

13. மாக்கோதை

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

14. பெருங்கோப் பெண்டு

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

15. கிள்ளி வளவன்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .




1

தமிழ் இலக்கியத்தின் தொன்மை



தமிழ்மொழி இனிமை வாய்ந்தது என எல்லாரும் ஒப்பக் கூறுகின்றனர். அது செந்தமிழ், தீந்தமிழ், தமிழ் எனும் இனிய தீஞ்சொல் என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறது. தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாம். “தேமதுரத் தமிழ்” என ஒருவர் அதைப் பாராட்டியுள்ளார். தமிழ்மொழி இவ்வளவு இனிமை வாய்ந்திருப்பதற்குக் காரணம் யாது? அம்மொழி . அறிந்த பெரியார்கள், அவ்வப்போது ஒன்றுகூடி, மொழியை இனிமை நிறைந்ததாக ஆக்குவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து, அதை அவ்வாறு ஆக்கியுள்ளனர். இவ்வாராய்ச்சி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளது. அறிவிற் சிறந்த சான்றோர்களின் உள்ளங்களில் தோய்ந்து தோய்ந்து, தமிழ்மொழி இனிமை நிறைந்த மொழியாகிய பெருமையுற்றுள்ளது.

தமிழ் மொழி, அவ்வாறு பெற்ற அவ்வினிமைப் பண்பை, இன்று பெறவில்லை; சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே, அது அந்நிலையை அடைந்துவிட்டது. கடைச் சங்க காலமே, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். அதற்கு முன்னே, ஒவ்வொரு சங்கத்திற்கும் இடையே எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. அவ்வாறு நோக்கியவிடத்துத் தமிழ்மொழி, தன் இனிய பண்பை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்டது என்பது உறுதியாம்.

மக்கள், தங்கள் உள்ளத்தே எழுந்த எண்ணங்களைத், தாங்கள் எண்ணியவாறே, ஏனையோரும் உணருமாறு எடுத்துரைக்க வல்ல சொல் வளமும், கேட்போர் விரும்பிக் கேட்குமாறு அமைந்த சொல்லின்பமும் உடையவாய் அமைந்த ஒரு மொழியில், அழகிய இலக்கியங்கள் பல தோன்றுவதும் இயல்பே. இலக்கியமாவது உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களால் திறம்பட உரைப்பதாம். இனிய பல சொற்களைக் கொண்ட ஒரு மொழி, நாகரிகமும் நற்பண்பும் இல்லா நாட்டு மக்களிடத்தில் தோன்றி விடுவதில்லை. தக்க இன்ன, தகாதன இன்ன என உணரும் உணர்வு தகுதியுடையவரிடத்து மட்டுமே உண்டாம். தகுதியாவது யாது என்பதை உணராதார், ஒலியிலும் மொழியிலும் தகுதியைக் காண இயலாதவர். சிந்தையும் செயலும் சிறந்தனவாகப் பெற்ற மக்கள், தம்மோடு தொடர்புடைய எவையும் சிறந்தனவாக இருத்தலை விரும்புவர்; தாம் வழங்கும் மொழியும் சிறந்ததாதல் வேண்டும் என்ற எண்ணம் அவர்பாலே உண்டாம். ஆகவே, ஒரு மொழியும், அம்மொழியில்

தோன்றிய இலக்கியமும் சிறந்தனவாயின், அம்மொழி வழங்கும் மக்கள். அதாவது, அவ்விலக்கியத்தால் உணரப்படும் மக்கள், சிறந்த செயலும், சீரிய பண்பும் வாய்ந்தவராவர் என்பது உறுதி.

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்,

வாக்கினிலே ஒளி உண்டாகும்”



என்றார் பாரதியார்.

உள்ளம் தூயதாயின், சொல்லும் தூயதாம், செயலும் துயதாம். உள்ளம் தூயர், துய்மையின் நீங்கிய சொல் வழங்கலும், தூய்மையின் நீங்கிய செயல் புரிதலும் செய்யார். தீய சொல்லும், தீய செயலும் உடையாரின் உள்ளம் மட்டும் தூயதாதல் இயல்பன்று. சொல்லும் செயலும் உள்ளத்தை உணர்த்தும் உயர்ந்த கருவிகளாம். ஆகவே, உள்ளமும், உரையும், உற்ற தொழிலும் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்று நன்றாயின், ஏனைய இரண்டும் நன்றாம்! ஒன்று தீதாயின், ஏனைய இரண்டும் தீதாம். ஆகவே, உயர்ந்த மொழியும், சிறந்த இலக்கியங்களும், உயர்வும் சிறப்பும் ஒருங்குடையாரிடத்து மட்டுமே உளவாம் என்ற உண்மைகளை உறுதி செய்கின்றன. கரும்பு தோன்றுவது கழனியில், களர் நிலத்தில் அன்று.

செந்தமிழ் மொழி சிறந்த இலக்கியங்களையும், அவ்விலக்கியங்களின் பண்பினை இனிதெடுத் துரைக்கும் இலக்கணங்களையும் பெற்றுளது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்பது விதி. இலக்கியம் முற்பட்டது; இலக்கணம் பிற்பட்டது. நாய் என்ற பொருளைக் கண்ட ஒருவனே, நாய் என்பது யாது என்பதை அறிந்து கூற முடியும். அதை அறியாத ஒருவன் அப்பொருள் பற்றிக் கூறுதல் பொருந்தாது; பொருந்தாது என்பது மட்டுமன்று: அஃது அவனால் இயலவும் இயலாது. மேலும் நாய் என்ற பொருளே இல்லாதவிடத்து, அப்பொருள் பற்றிப் பேசுபவரோ, அதற்கு இலக்கணம் கூறுபவரோ இரார். ஆகவே, இலக்கணம் என்பதொன்று உளது என்றவுடனே அவ்விலக்கணத்தை உடைய ஒரு பொருள், அஃதாவது அவ்விலக்கணம் தோன்றுவதற்குக் காரணமாய ஒரு பொருள் உளது என்பது தானே பெறப்படும். தமிழ் மொழி, தலை சிறந்த இலக்கணமாகத் தொல் காப்பியத்தைப் பெற்றுளது. ஆகவே, அப்பேரிலக்கணப் பெருநூல் தோன்றுவதற்குக் காரணமாய் இலக்கியங்கள் பலவற்றையும் அம்மொழி பண்டே பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

ஒரு பொருளுக்கு இலக்கணம் கூறுவது, எளிதில் எண்ணியவுடனே இயலுவதன்று. மாடு என்ற பொருளுக்கு இலக்கணம் கூற முன் வந்த ஒருவன், முதலில் நான்கு கால்கள் உடையது மாடு என்றான். நான்கு கால்கள் குதிரைக்கும் உளவே என்ற தடை எழுந்தவுடனே, நான்கு கால்களையும் இரண்டு கொம்புகளையும் உடையது மாடு என்றான். அந்நிலையில், அவ்வியல்பு ஆட்டிற்கும் உண்டே என்று ஒருவன் கூற, நான்கு கால்களையும், இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அவ்வியல்பு யானைக்கும் பொருந்தும். ஆகவே, கூறிய இலக்கணம் நிரம்பாது என்று ஒருவன் சொல்ல, பிளவுண்ட குளம்புகளைக் கொண்ட நான்கு கால்களையும், இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான். அதுவும் அமையாது என்று கண்டவிடத்துக் கூறிய இலக்கணங்களோடு, கன்று ஈன்று, அக்கன்று உண்டு எஞ்சிய பாலை, மக்கள் பயன்கொள்ள அளிப்பது மாடு என்றான். இவ்வாறு இறுதியில் கூறிய நிரம்பிய இலக்கணத்தைக் கூற, அவனுக்கு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். மாடு ஒன்றை மட்டும் கண்ட காலத்திலிருந்து, அவன் வாழ்வில், குதிரையும், ஆடும், யானையும், பிறவும் குறுக்கிட்ட பல ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்த பின்னரே, அவ்விலக்கணத்தை அவனால் காண முடிந்தது. இலக்கண நூல்கள் எழுந்த முறை இதுவே.

தமிழ் மொழியின் தலையாய இலக்கணமாம் தொல்காப்பியம், தமிழ் மொழியின் எழுத்துக்களுக்கும், சொற்களுக்கும் இலக்கணம் கூறுகிறது; தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. பார்ப்பு பறழ் போலும் சொற்கள் இளமை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே இளமைப் பொருள் உணர்த்தும் சொற்களைக் குறிக்கின்றது. ஏறு, ஏற்றை போலும் சொற்கள் ஆண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே ஆண்மைப் பொருள் உணர்த்தும் சொற்களை வரையறுத்துள்ளது. பிடி, பெடை, பெட்டை போலும் சொற்கள் பெண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே பெண்மைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்று கூறுகின்றது. இவற்றோடு அமையாது,

“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”



என இளமை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் இளமைகளை உணர்த்தும் என்றும் குறித்துள்ளது.

“பன்றி, புல்வாய், உழையே, கவரி

என்றிவை நான்கும் ஏறெனற்குரிய”



என ஆண்மை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர் இன்னின்ன உயிர்களின் ஆண்மைகளை உணர்த்தும் என்று உரைக்கின்றது.

“பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே”



எனப் பெண்மை உணர்த்தும் பெயர்களுள் இன்னபெயர், இன்னின்ன உயிர்களின் பெண்மைகளை உணர்த்தும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு பொருள் களுக்கும், சொற்களுக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து தொல்காப்பியம் வரையறுத்து வழங்கி யுள்ளது.

அம்மட்டோ! தொல்காப்பியம் மலை, காடு, வயல், கடல் என நால்வகைப்படும் நிலத்தின் இயல்பை அறிவிக்கின்றது. ஞாயிற்றின் வெங்கதிர், வானின் தண்பெயல் என்ற இவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப, கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் எனப் பிரிவுண்டு நிற்கும் காலத்தின் இயல்பைச் சுட்டிக் காட்டுகின்றது. அவ்வந் நிலங்களில் அவ்வக் காலங்களில் பூத்தும் காய்த்தும் பயன்தரும் மரம் செடி கொடிகள், நிலத்தில் ஊர்ந்தும் தவழ்ந்தும், ஒடியும், நடந்தும், நீரில் நீந்தியும் வானத்தில் பறந்தும் வாழும் பல்வேறு உயிர் வகைகளையும், அவ்வுயிர்களின் உணவு, உறையுள் ஒழுக்கம் ஆகியவற்றின் இயல்புகளையும் தெரிவிக்கின்றது. அவ்வுயிர்களுள் ஆறறிவு படைத்த மக்கள், மணந்து மக்களைப் பெற்று மனையறம் காக்கும் மாண்புடையதாய அகவொழுக்கத்தினை விளக்குகிறது; ஊராரும், உலகோரும் ஒன்று கூடி, அவ்வக வாழ்வு அமைதி நிறைந்த நல்வாழ்வு ஆதற்கு நற்றுணையாம் பொருளீட்டு முயற்சிகளையும், அம் முயற்சி இனிது நடைபெற நின்று துணை புரியும் அரசியற் சிறப்புக் களையும் அழகாகக் கூறுகின்றது. அவ்வரசியலை அறம் பிறழாது காக்கும் அரசர்கள் மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சிகளை உணர்த்தும் புற ஒழுக்கத்தினையும் இனிது எடுத்துக் கூறுகின்றது.

இவ்வாறு தமிழ் மொழிக்கும், அம் மொழி வழங்கும் தமிழ் நாட்டிற்கும், அந்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், அன்று கூறிய இலக்கணம், இன்றும் பொருந்துவதாகவே உளது. அவ்விலக் கணத்தைச் சிறிதேனும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலை, இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இன்றும் உண்டாகவில்லை. தான் கூறிய இலக்கணத்தை அந்நூல் அவ்வளவு தெளிவாகக் குறையேதும் காணாவாறு முற்ற உணர்ந்து கூறியுள்ளது. நேற்றுக் கூறிய இலக்கணம் இன்று இல்லை என்ற நிலையற்ற இவ்வுலகில், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும், மாற்றிக் கூற வேண்டிய நிலை உளது என்ற குறை கூறாவாறு நிரம்பிய இலக்கணத்தை உணர்த்தியுளது தொல்காப்பியம். இவ்வியல்பு உலக மொழிகள் எதற்கும் இல்லாத தமிழ் மொழி ஒன்றற்கே உள்ள தனிச் சிறப்பாம்.

தொல்காப்பியர், தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் கூறிய இலக்கணத்தைத் தாம் ஒருவரே, தம் வாழ்நாள் காலத்திற்குள்ளாகவே அறிந்து உரைத்தாரல்லர். அவருக்கு முன்னர், எத்தனையோ ஆசிரியர்கள், அவை பற்றி எவ்வளவோ கூறி யுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் கூறிய அவ்விலக் கணங்களுள், அக் கால வளர்ச்சியோடு நோக்கப் பொருந்தாதனவற்றை விலக்கி, கூறாதனவற்றைக் கொண்டு கூறியதே தொல்காப்பியம். "என்மனார் புலவர் "இயல்பென மொழிப" என அவர் ஆளும் தொடர்கள் இதை உறுதி செய்ய வல்லனவாம்.

தமிழ் மொழி தோன்றிய காலத்திற்கும், அதற்கு நிரம்பிய இலக்கணம் உரைக்கும் தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்கும் இடையே, பல ஆசிரியர்கள் பல்வேறு காலங்களில் தோன்றித் தம் தம் காலத்தே தமிழ் ஒலிகளிலும், தமிழ்ச் சொற்களிலும், தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தாம் கண்ட குறைகளையும் திருத்தங்களையும் நீக்கியும் கொண்டும் இலக்கணம் கூறிச் சென்றனர். இறுதியாக அவர் கூறிய இலக்கணங் களில் செப்பம் செய்து, சிறந்த தம் நூலை அளித்தார் தொல்காப்பியனார். காடுகளில் காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழ் மக்களிடையே தோன்றி, அவர் நாகரிக நெறியில் வளர வளர, அவரோடு தானும் வளம் பல பெற்று வளர்ந்து, இனியும் வளர வேண்டா இனிய நிலைபெற்ற தமிழ் மொழியின் இறவாப் பேரிலக்கியங்களுக்குத் தொல்காப்பியர் கூறும் இலக்கணங்களும் அவ்வாறு வந்தனவே.

இலக்கியம் என்பது, அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்கள் வாழ்க்கையோடு இரண்டற இணைந்து நிற்பதாம். சிறந்தது எனத் தாம் கண்ட நிகழ்ச்சிகளைச் சிறந்த சொற்களால் சிறப்பாக எடுத்துரைப்பதே இலக்கியமாம். ஊக்கமும், உரமும், உள்ள உயர்வும், உயர்ந்த ஒழுக்கமும் உடைய மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகும். அந்நாட்டில், அன்னார் வாழும் காலத்தில் தோன்றிய அறிஞர்கள் நாட்டின் நன்னிலை கண்டு, நாட்டு மக்களின் நற்பண்பு கண்டு, அகம் மிக மகிழ்வர். எந்நாடும் அந்நாடு போலாயின, எந்நாட்டு மக்களும் அந்நாட்டு மக்களே போல்வராயின், உலகில் அமைதி நிலவும்; உலக மக்கள் உயர்நிலை பெறுவர் என அவர் கருதுவர். ஆகவே, பிற நாடுகளும், பிற நாட்டு மக்களும், இந்நாட்டையும், இந்நாட்டு மக்களையும் அறிந்து அவர் வழி செல்லுமாறு, இங்குள்ள நிலையினை எடுத்துக் காட்டுவதைக் கடமையாகக் கொள்வர். தம் காலத்தே, தம் நாட்டைச் சூழ உள்ள நாடுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் காட்டுவதோடு, தமக்குப் பின் வாழும் தம் நாட்டு மக்களுக்கும் காட்டுதல் வேண்டும் எனக் கருதுவர். கருதிய அவ்வான்றோர் தாம் வாழும் தம் நாடு, அந்நாட்டு நல்லாட்சி, அந் நல்லாட்சிக்குரியோனாய அரசன், அவன் ஆட்சி மாண்பு, அந்நாட்டு மக்கள், அவர் மனவளம், அவர் தம் வாழ்க்கை வனப்பு ஆகிய அனைத்தையும் பாட்டில் இசைத்துப் பாராட்டிச் செல்வாராயினர். அவ்வாறு அவர் பாடிய அப் பாக்களே இலக்கியங்களாம். ஆதலின், இலக்கியம், அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்களோடு ஒன்றி நிற்கும் இயல்புடையதாயிற்று.

இலக்கியத்தைக் காணின், அவ்விலக்கியத்திற் குரிய மக்களைக் காணலாம்; மக்களைக் காணின், அம் மக்களிடையே அம் மக்களின் இலக்கியங்களைக் காணலாம். அதனால் மக்கள் வளர வளர, இலக்கியமும் வளரும்; அவர் வளம் குன்றக் குன்ற, அவர் இலக்கியமும் வளங் குன்றித் தோன்றும் என்பது உறுதி. மக்களுக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள இவ்வுறவினை உட்கொண்டு தமிழ் இலக்கியங்களின் இயல்பினை ஆராய்தல் வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் தோன்றியது. அது தோன்றுவதற்குக் காரணமாய பல இலக்கண நூல்கள், அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குக் காரணமாய எண்ணற்ற இலக்கியப் பெரு நூல்கள், அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும். அவ்விலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாய்த் தம் வாழ்வை வளம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருப்பாராயின், அத் தமிழ் மக்களும், அம் மக்களின் இலக்கியங்களும் எத்துணைப் பழைமை உடையராதல் வேண்டும் என்பதை உய்த்துணர்வதல்லது, அந்தக் காலம் இந்தக் காலம் என வரைந்து காட்ட இயலுமோ? அக் காலத்தின் பழைமையினை அறிய மாட்டாமை யாலன்றோ புலவர் ஒருவர், அத்தமிழ்க் குடியின் பழைமையினை வரைந்து கூறாதே,

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன்தோன்றி மூத்த குடி”



என்று கூறிச் சென்றுள்ளார்! நிற்க.

ஒரு மொழி தோன்றி வளர்ந்தவுடனே, அம்மொழி யில் இலக்கியங்கள் தோன்றிவிடும். இலக்கியம் காலந்தோறும் தோன்றிக் கொண்டே யிருக்கும். இலக்கிய ஆசிரியர்கள் எக்காலத்திலும் தோன்றுவர். இலக்கியம் தோன்றும் காலம் இது, அது தோன்றாக் காலம் இது என்ற வரையறை வகுப்பது இயலாது.

இலக்கிய ஆசிரியன், தான் இயற்றும் இலக்கியத்திற்குத் தன் காலத்து மக்களின் வாழ்க்கை நிலைகளையே பின்னணியாகக் கொண்டு இயற்றுவன். இலக்கியம் அது தோன்றும் கால நிலையைத் தன் அடிப்படையாகக் கொண்டெழும் என்பது உண்மை. அதுவே இலக்கியப் பண்பும் ஆம் ஆனால் அவ்வாறு இலக்கிய அடிப்படையாக அமையும் மக்கள் வாழ்க்கை நிலை, என்றும் நடுநிலையில் இருப்பதில்லை. அது காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும்; நாடுதோறும் மாறிக் கொண்டே இருக்கும். இனந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். இன்று தோன்றி விளங்கும் இலக்கியங்கள் அனைத்தையும் நோக்கின், அவை பல்வேறு வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது புலனாம்.

நாகரிகம் வளர வளர, நாட்டு மக்களிடையே புதுப் புதுப் பொருள்கள் இடம் பெறும். அப் புதுப் பொருள்களைக் குறிக்க வழங்கும் புதுப் புதுச்சொற்கள், அம் மக்கள் மொழியில் இடம் பெறுவதும் நிகழும். மேலும் காலம் செல்லச் செல்லப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும், பல்வேறு மொழி வழங்கும் மக்களும், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களும், பல்வேறு பழக்க வழக்கங்களையுடைய மக்களும் ஒன்று கலந்து வாழ்வர். அம் மக்களின் பழக்க வழக்கங்களும், அம் மக்களின் மொழிகளைச் சேர்ந்த சொற்களும், அம் மக்களின் சமயக் கொள்கைகளும் ஒன்றில் ஒன்று கலந்து போவதுண்டு. அவ்வாறு கலந்த அக் கலவைக் காட்சிகள் ஒவ்வொருவர் இலக்கியத்திலும் இடம் பெறுவதும் இயல்பாம். அதைத் தடை செய்தல் இயலாது. வேண்டுமானால், அப் பொருள்களையும், அப் பொருள்களைக் குறிக்கும் பிற மொழிச் சொற்களையும், அம் மக்களின் கொள்கைகளையும் தம் மொழிக்கும் தம் பண்பாட்டிற்கும் ஏற்பத் திருத்தி மேற்கொள்வதையே செய்தல் இயலும்; அவற்றை அறவே விடுத்து வாழ்தல் இயலாது.

புதிய பொருள்களும், புதிய சொற்களும், புதிய பழக்க வழக்கங்களும் ஒருபால் இடம் பெற, தேவையற்றுப் போன பொருள்களும், அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும், பழக்க வழக்கங்களும் ஒருபால் வழக்கற்றுப் போதலும் நிகழும். உலகிய லுக்கும், உலகில் வழங்கும் இலக்கியங்கட்கும் உள்ள இவ்வுறவு முறையினை உணர்ந்தன்றோ,

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே”



என்ற விதி வகுப்பாராயினர் இலக்கண ஆசிரியர்கள்.

ஒரு மொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின், பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருத் தலை உணரலாம். இவ்வாறு பழையன கழிந்து, புதியன புகுந்து தோன்றுவதையே, ஒரு சாரார் இலக்கிய வளர்ச்சி எனக் கொள்வர். பழையன எல்லாம் பழிக்கத் தக்கன; புதியன எல்லாம் போற்றற்குரியன என் எவரும் எண்ணுதல் கூடாது. அவ்வாறே, பழையன எல்லாம் பாராட்டற்குரியன; புதியன எல்லாம் பழித்தற்குரியன என்று எண்ணுதல் கூடாது. இரு திறத்தாரும் பிழையுடையாரே யாவர். பாராட்டற்குரியனவும், பழித்தற்குரியனவுமாய பண்புகள், பழையன புதியன ஆக இரண்டிலும் உள. ஆகவே, இலக்கியங்கள் தோன்றிய கால நிலை கண்டு, அவற்றைப் பாராட்டுவதும் பழிப்பதும் செய்யாது, அவ்விலக்கி யங்கள் போற்றும் பொருள் நிலைகண்டு, அப்பொருள் களை அவை உணர்த்தும் நெறிமுறை கண்டே, அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்தல் வேண்டும்.

இலக்கியங்கட்கும் அவ்விலக்கியங்கள் தோன்றிய காலங்கட்கும் உள்ள தொடர்பு இஃதாகவே, ஓர் இலக்கியத்தின் உண்மை இயல்பினை உள்ளவாறு உணர்ந்து மதிப்பிடல், அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் சூழ்நிலையினை உணர்ந்தார்க்கல்லது இயலாது. ஆகவே, செங்கோலாட்சி புரிந்து இறவாப் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர் ஆட்சிக் காலம் முதலாகத் தமிழ் நாட்டில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் இயல்புகளை, அவை தோன்றிய காலங்களின் சூழ்நிலையோடு ஒருங்கு கண்டுணர்தலே சிறப்புடைத்தாம்.


2

சங்க இலக்கியம்

* * *



தமிழ் மொழி, நிலநூல் வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அஃது எம் மொழிக்கும் பின் தங்கிவிடவில்லை. தமிழ் இலக்கிய நூல்கள் உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. எண்ணிக்கையாலும் அது சிறந்ததாம்; தமிழ் இலக்கியம் கரை காணாப் பெருங்கடலுக்கு ஒப்பாம்.

தமிழ் நாட்டு மன்னர்களும், அறிஞர்களும் தமிழ் இலக்கியச் செல்வத்தைச் சங்கம் அமைத்து வளர்த்தனர். கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்களை அமைத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, அழகுடையவாக்கி வளர்த்தார்கள். அகத்தியனார், இறையனார், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலாம் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன் பதின்மர் முதற் சங்கத்தில் இருந்தனரெனக் கூறுவர். அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன், மாறன், துவரைக் கோமான், கீரந்தை முதலாம் புலவர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கத்தில் விளங்கினர் என்பர். சிறு மேதாவியர், சேந்தம், பூதனார், அறிவுடையரனார், பெருங் குன்றுார்க் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் முதலாம் புலவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்திலிருந்து தமிழ் வளர்த்தனர் என்பர்.

காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகவுள்ள அரசர் எண்பத்தொன்பதின்மர் தலைச் சங்கப் புலவர்களையும், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாகவுள்ள அரசர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கப் புலவர்களையும், முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈறாக உள்ள அரசர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கப் புலவர்களையும், உணவும், உடையும், உறையுளும் அளித்துப் பேணி, அவர்கள் இலக்கியம் வளர்க்க அருந்துணை புரிந்தனர்.

தலைச் சங்கப் புலவர்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்களையும், இடைச் சங்கப் புலவர்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை யகவல் முதலிய நூல்களையும், கடைச் சங்கப் புலவர்கள் நெடுந்தொகை குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலிய நூல்களையும் ஆக்கி ஆராய்ந்து, அழகிய தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தனர். தமிழில்க்கியச் செல்வங்களை ஆக்கியும், ஆராய்ந்தும் வளர்த்தற் பொருட்டுத் தோன்றிய சங்கங்கள் இருந்த தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கோள்களால் அழிவுற்றன. இக் கடல் கோள் நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரம் பாடிய சேரர் குல இளங்கோ,

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”



எனக் குறிப்பாகக் கூறினர்.

தமிழ் வளர்த்த சங்கங்களின் நிலைக்களமாகிய நகரங்கள் இரண்டும் கடல் கோளால் அழிவுறவே, அந்நகரங்களில் இருந்த தமிழிலக்கியச் சுவடிகள் பலவும் அக்கடல் வாய்ப்பட்டு அழிந்தன. அதனால் அம்முதல், இடைச் சங்கங்களில் ஆக்கப் பெற்ற அந்நூல்களைக் காணும் நற்பேறு இக்கால மக்களுக்கு இல்லாமற் போயிற்று. அவ்வாறு அழிந்தன போக, இன்று எஞ்சி நிற்பன பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆய பதினெட்டு இலக்கியங்களும், தொல்காப்பியம் என்ற இலக்கணமும், திருக்குறள் போன்ற சில நூல்களுமே யாம். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் என்ற பத்து இலக்கியங்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெறும் நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற இவ்வெட்டு இலக்கியப் பெரு நூல்களும் எட்டுத் தொகை எனப் பெயர் பெறும். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற இவ்வரிசைக்கண் வந்த நூல்கள் மட்டும் நானூற்று அறுபத்தெண்மர்க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் பாடிய இரண்டா யிரத்து நானூற்றுப் பத்துப் பாக்களைக் கொண்டுள்ளன.

மக்கள்பால் கிடந்து மாண்பு தரும் பண்பாடு களைப் பார்த்துப் பாராட்டி, அப்பண்பாடுகளைப் பிற நாட்டாரும், பிற்காலத்தில் வாழ்வாரும் அறிந்து மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற வேட்கையின் விளைவால், பாட்டிடை அமைத்து இசைப்பனவே இலக்கியங்களாம். ஆதலின், சங்க கால இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை ஆராய்ந்து காண்பதன் முன்னர், அவ்விலக்கியம் தோன்றற்காம் வாழ்க்கை யினை மேற்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மக்களின் பண்பாட்டியல்பினை ஆராய்ந்து காண்பதே அமைவுடைத்து. ஆகவே, இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை, அவ்விலக்கியச் செல்வங்கள் எழுவதற்குக் காரணமாய மக்களின் மாண்புகளோடு ஒருங்கு வைத்து ஆராய்தலை மேற்கொள்ளுவோமாக.

சங்க காலம், தமிழக வாழ்வில் தலை சிறந்த காலம். தமிழ் நாட்டு வாணிகம், தமிழகத்தோடு நில்லாது, கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவித் தமிழகத்து வளத்தை, வாழ்வை வனப்புடையதாக்கிய காலம். சோழ நாட்டுப் புகாரிலும், பாண்டிய நாட்டுக் கொற்கையிலும், சேர நாட்டு முசிறியிலும் வாணிகம் கருதி வந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் பெருந்திரளாக வாழ்ந்த காலம்.

தமிழ் நாட்டு அரசர்கள், தமிழகத்தின் பெருமை யினைப் பிற நாட்டாரும் உணருமாறு வெற்றி கண்டு வாழ்ந்த காலம் சேரருள் சிறந்த செங்குட்டுவனும், சோழருள் சிறந்த கரிகாற் பெருவளத்தானும், பாண்டியருள் சிறந்த நெடுஞ்செழியனும் ஆட்சி புரிந்த காலம் அது. தமிழ் வேந்தர் கொண்டாடிய விழாவிற்கு இலங்கைவாழ் அரசன் கயவாகுவும், வடநாடு வாழ் நூற்றுவர் கன்னரும் வந்து சிறப்பித்த வளமார் காலம். காவிரியில் கரிகாலன் கட்டிய கரையாலும், கல்லணையாலும், "சோழ வளநாடு சோறுடைத்து” என்ற சொல் பிறக்க வளம் பெருகிய காலம். ஆட்சி நலமும், அரும் பொருள் வளமும், வேலி ஆயிரமாக விளைந்த விளைவுச் சிறப்பும் பெற்றமையால், மக்கள் பசியும், அது காரணமாய்ப் பிணியும், அது காரணமாய்ப் பகையும் அற்று வாழ்ந்த காலம். அன்பும் ஆண்மையும், அருளும் ஆற்றலும், காதலும் கடமையும், உரனும் உடையார் பேரொழுக்கமும் உடையராய் வாழ்ந்த வனப்புமிக்க காலம். ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர், அரசனும், அவன்கீழ் வாழ் மக்களும் அறவழி நடவாது, மறவழி செல்லாது வாழ்வதற்காய அறிவுரை பல வழங்கி, வழிகாட்டிகளாய் வாழ்ந்த காலம்.

கண்ணாரக் கண்ட காட்சிகளும், காதாரக் கேட்ட நிகழ்ச்சிகளும், அவற்றைக் கண்டதாலும், கேட்டதாலும் எழுந்த உணர்ச்சிகளுமே, கருத்து நிறைந்த கவிகளாக வெளிப்படும். ஆதலின், அன்று பாடிய புலவர்கள் எல்லாரும், தம் பாடற் பொருளாகத் தமிழகக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையுமே மேற் கொண்டனர். அதனால், அன்று தோன்றிய தமிழ்ப் பாக்கள் தாயன்பு, தந்தை கடன், கன்னியர் கற்பு, காளையர் கடமை, அரசர் செங்கோல், அமைச்சர் நல்லுரை, ஆன்றோர் அறம், வீரர் வெற்றி என இவை பொருளாகவே தோன்றியுள்ளன.

வணிகர் வேளாளர் வழியிலும், குயவர் கொல்லர் குலத்திலும், மருத்துவமும், நெசவும் அறிந்தார் மனைகளிலும், மறவர், எயினர் மரபிலும் பிறந்த ஆடவர் பெண்டிர் ஆய இருபாலரிலுமாக்ப் புலவர் பலர் தோன்றித் தமிழ்ப் பாக்களைப் பாடியுள்ளனர். எஞ்ஞான்றும் புலவரொடு வாழ்ந்த புரவலரும் கல்வியறிவில் சிறந்தவர்களாகத் திகழ்ந்தனர். புலவர் கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோற் போற்றி வந்தனர். எனவே, தமிழ் மன்னர்கள் கல்வியின் பெருமையுணர்ந்து, அதனைப் போற்றினர். பொருளின் சிறப்புணர்ந்து, அதை நல்வழியில் ஈட்டி, அறவழியில் செலவழிக்க வேண்டுமென அறிந்திருந்தனர். மானத்தின் பெருமையினையும் அம்மானம் இழந்தவழி வாழாமையால் வரும் உயர்வையும் உணர்ந்திருந்தனர். சுருங்கக் கூறின் அக்கால மன்னர்கள் அறிய வேண்டுவன வெல்லாம் அறிந்திருந்தனர்.

அறிவு நலத்திற் சிறந்த தமிழ் மன்னர்கள் புலமை நலமும் சிறப்பாகப் பெற்றுப் பாவல்ல காவலராயும் திகழ்ந்தனர். அவர்கள் பல தமிழ்ப் பாக்களைப் பாடி யுள்ளனர். அப் பாக்கள் சங்க காலத் தமிழ் நூல்களில் இடம் பெற்று இறவாப் புகழுடையனவாக விளங்கு கின்றன. அம் மன்னர்களிற் சிலருடைய வரலாறு களையும், அவர்தம் பாக்களில் கூறிய விழுமிய கருத்துக்களையும் இந்நூலில் அறிந்து கொள்வோமாக.


3

அறிவுடை நம்பி



பாண்டிய நாடு முத்துடைத்து என்ற பெருமைக்குரிய பெருநாடு. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமையும் அந்நாட்டிற்கே உரித்து. அந்நாடாண்ட பாண்டிய மன்னர் பலராவர். அவருள் அறிவுடை நம்பி என்பானும் ஒருவன். அறிவுடை நம்பி, கற்க வேண்டிய அறிவு நூல்களை யெல்லாம் பிழையறக் கற்ற பேரறிவுடையான். கற்றதோடு அமையாது, கற்றுவல்ல பெரியோர்களைப் பேணி, அவர் உரைக்கும் அறிவுரைகளைப் பலகாலும் கேட்டுக் கேட்டுப் பெற்ற கேள்விச் செல்வமும் உடையவன். அவன் அரசவை இருந்து, அவனுக்கு அறம் உரைத்து வந்தார் பலராவர். அவனுக்கு அவர் உரைத்த அறங்களோ மிகப் பலவாம்.

அவ்வாறு, அவன் அரசவை இருந்து அறம் உரைத்தாருள் ஒருவர் பிசிராந்தையார். பாண்டி நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரிற் பிறந்தவர்; ஆந்தை எனும் இயற்பெயருடையவர்; பெரும் புலவர். அரசன் அவைக்கு நாள்தோறும் சென்று, அவனுக்கு அறவழி காட்டிவரும் அவர் அவனுக்கு உரைத்த அறவுரை பலவற்றுள்ளும், அரசன் ஒருவன் அவன் குடிகளிடத்தில் வரி வாங்கும் வகை குறித்துக் கூறிய அறவுரை அருமையும் பெருமையும் வாய்ந்த அறிவுரையாகும்.

“நெல் விளையும் நிலம், மா எனும் அளவினதாகி நனிமிகச் சிறிதாயினும், அச்சிறு நிலத்தையும் நன்கு பயிரிட்டு, அது தரும் நெல்லைப் பேணி வைத்து, நாளொன்றிற்கு இவ்வளவு என முறை வகுத்துக் கொண்டு பங்கிட்டுத் தரின், அச்சிறு நிலத்தில் விளைந்த சில நெல்லே, ஒரு யானையின் பல நாள் உணவாய் அதன் பசி போக்கத் துணை புரியும். ஆனால், அளந்து காண இயலாது, பயிர்வேலி எனக் கூறத்தக்க பரந்த நிலத்தில் நெற் பயிரை விளைவித்துவிட்டு, அது நன்கு வளர்ந்து நிற்கும் காலத்தில் அப் பயிரினிடையே யானையொன்றை அவிழ்த்துவிட்டு, அது தன் விருப்பம்போல் உண்ணுமாறு செய்து விடின், பல யானைகளுக்குப் பல ஆண்டுகட்கு உணவாகப் பயன் அளிக்கவல்ல அப்பரந்த நிலத்தின் நெற்பயிரெல்லாம், ஒரே நாளில் ஒரே நாழிகையில் பாழாகிவிடும். யானையின் வாயுட் புகுந்து உணவாகிப் பயன்படும் நெல்லிலும் அதன் காற்கீழ்ப் பட்டுப் பாழாகும் நெல் நனிமிகப் பலவாம். அதைப் போலவே, நாடாளும் அரசர், அரசியல் அறிவுடையராகித் தம் குடிகளின் பொருள் நிலை அறிந்து, எவ்வளவு பொருள்களை அவர்களால் தர இயலும், அப் பொருள்களை அவர் வருந்தாவாறு பெறுவது எவ்வாறு என்பனவற்றை எண்ணிப் பார்த்து, ‘ஆறில் ஒன்று’ என்பதுபோல் ஒரு வரையறை வகுத்துக் கொண்டு, அவ்வொழுங்கு முறையில் பிறழாது, வரி வாங்குவாராயின், நாட்டு மக்கள், அரசர்க்குத் தாம் தர வேண்டிய வரிகளைத் தவறாது தருவர்; தந்து தாமும் வாழ்வர்; தம் அரசர்க்கும் வாழ்வளிப்பர். இவ்வாறன்றி, அரசர் தாமும் கொடுங்கோலராய்க், குடிமக்களிடம் உள்ள எல்லாப் பொருள்களையும் தமக்குப் பொருள் வேண்டும் போதெல்லாம், அக் குடிகள் அழ அழக் கொள்ளையடித்து வாழ்வதே கோமகன் செயலாம் என, வரி பல வாங்குவதை வழக்கமாகக் கொள்வராயின், அந்நாட்டுக் குடிகள், வரிச் சுமை தாங்க மாட்டாது வருந்துவர். ஆகவே, மக்கள் நிலை அறிந்து, அவர் அளிக்கத் தக்கன பெற்று வாழ்வதே பேரரசாம்; பெருமைசால் நல்லரசாம்.” அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அளித்த அரசியல் அறிவு இது. அறிவுடை நம்பி கேட்ட அரசியல் அறங்கள் இவைபோல் எண்ணற்றனவாம்.

அறிவுடை நம்பி அறநூல்கள் பல கற்றதோடும், அறிவுரைகள் பல கேட்டதோடும் நின்றானல்லன். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என ஒதியதற்கிணங்க, கற்ற நூல்களும், கேட்ட அறவுரைகளும் அறிவித்த வழியே வாழ்ந்து வழிகாட்டியாக விளங்கினான். ஆடவர்க்கு அமைய வேண்டிய அருங்குணங்கள் பலவும் அவன்பால் அமைந்து கிடந்தன. இவ்வாறு, அவன் பேரறிவும் பெருங்குணமும் பெற்று வாழ்ந்தமையால், அவன் கால மக்கள், அவனுக்கு அறிவுடை நம்பி என்ற அழகிய பெயரளித்துப் போற்றினர். இறுதியில், அவன் பெற்றோர் அவனுக்கு இளமையில் இட்டு வழங்கிய இயற்பெயர் மறைந்து போக, மக்கள் அளித்த அம் மாண்புடைப் பெயரே, அவன் பெயராய் வழங்கலாயிற்று.

அறிவுடை நம்பி ஆண்ட நாடு அமைதி நிலவும் நல்லாட்சியுடைய நன்னாடாம் என அக்காலப் பெரியோர் பலர் பாராட்டியுள்ளனர். அவன் நாடு வளம் பல நிறைந்திருந்தது; அதனால், வறுமை அவன் நாட்டில் வாழமாட்டாது மறைந்து போயிற்று. வறுமை இன்மையால், மக்கள் வயிறார உண்டு பசியறியாப் பெருவாழ்வுடையராயினர். வயிற்றில் பசித் தீ இன்மையால், மக்கள் ஒருவரோடொருவர் பகைத்து வாழ்வதை அறியாராயினர். பகையில்லாமையால், அது காரணமாகத் தோன்றும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் முதலாம் கொடுமைகளும், அக்கொடுங் குணங்களையுடையாரும் அவன் நாட்டில் இலராயினர். இவற்றிற்கு மாறாக அன்பும், அருளும், அறமும், ஒழுக்கமும் அங்கு நிலவின. அவன் நாட்டு மக்கள் அனைவரும் அக் குணங்களால் நிறைந்த ஆன்றோராயினர். நாடு செல்வத்தால் செழித்துச் சிறப்புற்றதோடு, அறிவுடை நம்பியும், அறமல்லன. எண்ணாது ஆண்டான். அந்நாட்டிற்குத் தன் அண்டை நாடுகளால் அழிவு நேராவண்ணம் நின்று காக்கும் ஆண்மையும் உடையவனாயினான். அதனால், பகைவரால் உண்டாம் தீங்கும் அவன் நாட்டார்க்கு இல்லையாயிற்று. எனவே, அவன் நாட்டில், எங்கும், எக்காலத்தும் அமைதியே நிலவிற்று. அவன் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அமைதி நிலவிற்று. வீட்டில் உள்ளார் அனைவரும் ஒத்த உளம் உடைய ராயினர். ஒருவர் எண்ணுமாறே ஏனையோரும் எண்ணுவராயினர். அவரவர், அவரவர் கடன் அறிந்து வாழத்தொடங்கினர். மனைவியர் மனைமாண்புகளால் மாட்சிமையுற்று விளங்கினர். மக்கள் மனையறத்தின் நன்கலங்களாய்த் திகழ்ந்தனர். இதனால், அவன் நாட்டில், மக்கள் தம் மனத்தில் கவலையில்லாது வாழ்ந்தனர். கவலையற்ற அவர்கள், பிணியற்றவ ராயினர். பிணியற்ற வாழ்வுடைமையால், ஆண்டு முதிர்ந்த பெரியோர்களும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் போல் காட்சியளித்தனர். மக்கள் நரை திரை பெறா நல்லுடல் பெற்று நீண்ட பெருவாழ்வுடையராய் விளங்கினர். அறிவுடை நம்பியின் அரச அவைக்கு நாள்தோறும் சென்று நல்லறம் உரைத்து வாழும் இயல்பினராய பிசிராந்தையாரே அவன் நல்லாட்சி யின் இந்நனி சிறப்பினைத் தாம் பாடிய பாட்டொன்றில் நாவாரப் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அறிவன அறிந்தும், ஆன்றோர் காட்டிய அறவழி நின்றும் நாடாண்ட நம்பி, அறநெறிகளைத் தான் மட்டும் அறிந்திருப்பது போதாது; அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும்; அவர்களும் அறம் நிறைந்த உள்ளத்தவராதல் வேண்டும்; அது தன் ஆட்சிக்குப் பெருந்துணையாம் என எண்ணினான். எண்ணிய தோடு நின்றானல்லன்; அவர்க்கு அறம் பல உரைத்தற்கு ஆவன மேற்கொண்டான்; அறம் உரைக்கும் அப்பணியினை அறிவுடை நம்பி, பிறர்பால் ஒப்படைத்தானல்லன். அதைத் தானே மேற் கொண்டான். அவ்வாறு அவன் உரைத்த அறங்கள் அளவிறந்தனவாம். அவை இலக்கியத்தில் இடம் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று, மக்கள் பேற்றின் மாண்புபற்றி அவன் உரைத்ததாகும்.

மக்கட் பேற்றின் மாண்பினை உணர்ந்தவர் பழங்கால மக்கள். கருத்தறிந்த கணவனும், மனையற மாட்சிமிக்க மனைவியும் கூடி நடாத்தும் இல்லறத்திற்கு நல்ல அணிகலனாய் அமைந்து, அழகு தருவது நன்மக்கட் பேறே என்றார் ஆன்றோர் ஒருவர். அறிவறிந்த மக்கட்பேறல்லாது, பொருள், புகழ் முதலாம் பிற பேறுகள் உண்மைப் பேறுகள் ஆகா. ஆகவே தன் பொருள் என்று, தாம் பெற்ற மக்களையே மதிப்பர் மாண்புடையோர். மக்களைப் பெறாத வாழ்வு மாண்புடைய வாழ்வாகாது; மக்கள்தம் மழலை மொழி கேட்டு மகிழாதார் மக்கட் பண்புடையராகார். கொடுவாள் பிடித்துக் கொலைத் தொழில் மேற்கொண்ட கொடியோனையும் குழைவிக்கும் ஆற்றல் குழந்தைகட்கு உண்டு. அவர் அன்பு முகம் கண்டு மகிழாதார், அவர் அழுகுரல் கேட்டு உள்ளம் அசையாதார் உலகத்தில் இலர் பற்றறத் துறந்த முனிவரும் மக்கள்பால் மாறா அன்பு காட்டுவர். அம் மக்களைப் பெறுதற்கு உலகோர் மேற்கொள்ளும் அறநெறிகள், அம்மம்ம ! நம்மால் எண்ணிக் காணமாட்டா அத்துணைப் பலவாம்.

“மக்கட்பேறு மாநிதிப் பேற்றினும் மாண் புடைத்து! மக்களைப் பெறாதார் மாண்புடையராகர், ஆகவே மக்களைப் பெறாமுன் மாண்டு மறைந்து போகாதீர்; போர்க்களம் புகும் வீரருள் மக்கட் பேறிலாதார் யாரேனும் இருப்பின், படைத் தலைவர்காள்! அவர்களைப் போர்க்களம் போக்கன் மின்,” எனப் பறையறைந்து மக்கட் பேற்றினைப் போற்றினர் அக்கால அரசர்கள். பகைத்துப் படைகொண்டு புகும் பகையரசனும், “பகைவர்காள்! தும்மிடையே மகப் பெறாதார் உளரேல், எம் படைக்கலம் வந்து பாய்வதன் முன்னர்க் களம் விட்டு அகலுங்கள்.

பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்,”



எனக் கூறி, அவரை அழிக்காது விடுத்தனன் என்றால், அக்கால அரசர்கள் மக்கள் பேற்றினை எத்துணை இன்றியமையாததாகக் கருதினர் என நோக்குங்கள்.

மக்கட் பேற்றின் மாண்பினை, அக்கால அரசர்கள் அறிந்திருந்ததைப் போன்றே, அறிவுடை நம்பியும் அறிந்திருந்தான். அதைத் தான் அறிந்ததோடு நின்றானல்லன். தன் நாட்டு மக்கள் எல்லாரும் அதை அறிதல் வேண்டும் அறிந்து அதன் வழி நடக்க வேண்டும் என விரும்பினான். உடனே தன் நாட்டு மக்களிடையே சென்றான். “அறிவாண்மையற்று, மதிக்கத்தக்க மாண்பிலாதாரையும், மதிக்கச் செய்யும் பேராற்றல் வாய்ந்தது பொருள் என்றும், மணந்து மனையறம் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை விருந்தினரை வரவேற்று, அவருக்கு அன்போடு அறுசுவை உணவளித்துப் போற்றுவதனாலேயே பொலிவுறும் என்றும் கூறுவர் பெரியோர்; அவ்வாறே கோடி கோடியளவான பொருளைக் குவித்து வைத்து, நாள்தோறும் விருந்தினர் பலரோடு இருந்து உண்ணும் பெருவாழ்வு பெற்ற பேறுடையான் ஒருவனுக்கு, மக்கட் பேறு இல்லையாயின், அவன் பெற்ற பெரும் பொருளும், பெருவாழ்வும் பயனுடையவாகா. அத்தகையான் வாழ்வு பெரு வாழ்வு எனப் போற்றப்படுவதில்லை; பயனிலா வாழ்வு என்றே பழிக்கப்பெறும்,” என அம்மக்கட்பேற்றின் மாண்பினை, அவர் உணரும்வகை எடுத்து உரைத்தான்.

“பெற்ற தம் மக்கள், பையப் பைய அடியெடுத்து வைத்துக் குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய தம் கைகளை உண்ணும் கலத்துள் இட்டு, உணவை எடுத்துத் தரையில் இட்டும், அவ்வுணவினைத் தாமே தோண்டித் தோண்டிப் பிசைந்தும், தம் வாயிலிட்டுக் கவ்வியும், மறுவலும் கலத்திலிட்டுத் துழாவியும், மீண்டும் வழித்தெடுத்துத் தம் உடலெலாம் பூசிக் கொண்டும் நிற்பதைக் கண்டு பேரின்பம் கொள்ளாத பெற்றோரும் உளரோ? அம் மக்கள் தம் அழகால், அவர்தம் ஆடலால், அவர்தம் மழலையால் மனம் மகிழ்ந்து அம்மகிழ்ச்சியின் மிகுதியால் அறிவு மயங்காப் பெற்றோரும் உளரோ?” எனக்கூறி, மக்கட் பேற்றின் மட்டிலா மகிழ்ச்சியினையும் அவர்க்கு அறிவித்தான். இவ்வாறு மக்கட் பேற்றினால் உண்டாம் மாண்பு, அதனால் அடையும் மகிழ்ச்சி ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிவித்து, அறிவுடை நம்பி எழுதிக் காட்டிய ஓவியம் எக்காலத்திலும் எந்நாட்டு மக்களும் போற்றும் நல்லதோர் இலக்கிய ஓவியமாய் அமைந்திருத்தலை அறிந்து அகமகிழ்வோமாக!


4

இளந்திரையன்



‘சான்றோர் உடைத்து’ என்ற சிறப்பினை உடையது தொண்டை நாடு. தொண்டை நாடு என்ற பெயரால் அந்நாடு அழைக்கப் பெறுதற்கு முன்னர், அஃது, அருவா நாடு, அருவாவடதலை நாடு என இரு கூறுபட்டுக் கிடந்தது. அந்நாட்டில் அன்று வாழ்ந்த மக்களும் அருவாளர் என்றே அழைக்கப் பெற்றனர். அருவா நாட்டின் தலைநகராய் அமைத்து. சிறப்புற்றது காஞ்சிமா நகரம். அந்நாட்டின் வடக்கே வடவெல்லை யாய் அமைந்து வளம் பல தந்தது வேங்கடமலை.

அருவா நாட்டிற்குத் தொண்டை நாடு எனப் பெயரளித்துப் பாராண்ட அரசர் தொண்டையராவர். சேரர், சோழர், பாண்டியர் என்ற அரச இனத்தாரைப் போன்றே, தொண்டையர் என்பாரும் ஊராண்ட ஒர் அரச இனத்தவராவர். அந்த அரச இனத்தில் வந்து தொண்டை நாடாண்ட அரசர்களுள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவன் திரையன்.

சோழ நாட்டின் தலைநகராய், கடல் வாணிகம் மிக்க கடற்கரைப் பட்டினமாய்ச் சிறப்புற்ற புகார் நகரத்துக் கடற்கரைக்கண் உள்ள புன்னை மரச் சோலையில் உலாவிவரும் இயல்புடையனாகிய கிள்ளி வளவன் ஒருநாள் ஆங்கு வந்திருந்த பீலிவளை என்ற நாக நாட்டரசன் மகளைக் கண்டு மணந்து கொண்டு மகிழ்ந்திருந்தான். மன்னனை மணந்த அவள், ஒரு திங்கள்வரை அவனோடிருந்து விட்டுத் தன்னாடடைந்தாள். ஆங்குப் பிறந்த தன் மகனை, அந்நாட்டிற்கு வாணிபம் கருதிவந்த சோணாட்டு வணிகன் கம்பளச் செட்டியோடு கலத்தில் ஏற்றிச் சோணாட்டிற்கு அனுப்பினாள். அனுப்புங்கால், அவன் தன் மகன் என்பதை அரசனுக்கு அறிவித்தற் பொருட்டு, அவனுக்குத் தொண்டைக் கொடி யணிந்து அனுப்பினாள். அம்மகனைப் பெற்றுக் கொண்ட வணிகன் கலமேறிச் சோணாடு திரும்பினான். ஆனால், அந்தோ இடைவழியில் அக்கலம் கவிழ்ந்து போயிற்று. கப்பலில் சென்றார் பலர் கடலுக்கு இரையாயினர். ஒரு சிலரே பிழைத்து ஊர் அடைந்தனர். அவ்வாறு பிழைத்தாருள் ஒருவன் துணையாம், அரசிளங்குமரன் அரசனை அடைந்தான். தன் மகன், திரையொலிக்கும் கடல்வழி வந்ததால், அரசன் அவனுக்குத் திரையன் எனப் பெயரிட்டுப் போற்றினான். தொண்டைக் கொடி அணிந்து வந்தமையால், அவன் வழிவந்தோர் தொண்டையர் என அழைக்கப் பெற்றனர். அவர் ஆண்ட அருவா நாடும், அன்று முதல் தொண்டை நாடு என அழைக்கப் பெற்றது. திரையனும், தொண்டையரும், தொண்டை நாடும் தோன்றிய வரலாறு இது. வேறு வகையாகக் கூறுவாரும் உளர்.

திரையன் ஆண்ட தொண்டை நாடு நிலவளம் பெற்றது; நீர் வளம் உற்றது. அந்நாட்டில் பல்லாண்டு கட்கு முன்னர் விளைந்த பண்டங்கள் தின்ன மாட்டாமல் மண்டிக்கிடக்கும். அவ்விளை பொருள்கள் இட்டு வைக்கப் பெற்ற கூடுகள், அந்நாடு முழுவதும் நின்று காட்சி தரும். ஆண்டு பல கழிந்தமையால், அக் கூடுகள் அழிவுறினும், அக் கூடுகளில் இட்டு வைக்கும் உணவுப் பொருள்கள் மட்டும் அழிவுறாமலே கிடக்கும். திரையன் ஆண்ட தொண்டை நாடு அத்துணை வளம் செறிந்தது.

அவன் நாட்டு நிலங்கள், விளைநிலம் பல பெற்று விளங்கியதைப் போன்றே, அந்நாட்டில் வாழ்ந்த மக்களும் மனவளம் நனிபெற்று விளங்கினர். அவன் நாட்டிற் பிறந்து, சிற்றுார் வாழ்வினராய ஆனோம்பி வாழும் ஆயர்குல மகளிர், பொழுது புலர்வதற்கு முன்னரே எழுந்து, தயிர் கடைந்து முடித்து, மோரும், நெய்யும் கொண்ட கூடையுடன், அண்மையில் உள்ள பேரூருட் புகுந்து, அவற்றை விற்றுப் பணமாக்குவர். அவற்றுள், மோர் விற்றதனால் பெற்ற சில காசுகட்குத் தமக்கும், தம் வீட்டார்க்கும் வேண்டும் உணவுப் பொருள் வாங்குவர். நெய் விற்றுப் பெற்ற பொருள், கை நிறைந்த பெரும் பொருளாதல் கண்டு, தம் வாழ்க்கை வளம் பெருகப் பால் முதலாம் பயன் அளித்துத் துணைபுரியும் பசு, எருமைக் கன்று ஆகியவைகளை வாங்கி வருவர். என்னே தொண்டை நாட்டுப் பெண்டிர் உள்ளம் !

திரையன் பேராண்மை மிக்கவன். தன்னாட்டை அடுத்துச் சிற்றரசும், பேரரசும் கொண்டு வாழ்ந்த அரசர் பலரையும் வென்று பணி கொண்டான். பகைவர், தம் பேராண்மை கண்டு அஞ்சிப், பகை மறந்து, பணிந்து திறை தர முன்வரினும், அதை ஏற்றுக் கொள்ளாது, அப் பகைவர்தம் அரண்களை அழித்து, அவர்தம் ஆற்றலை ஒடுக்கி, மணிமுடிகளைக் கைப்பற்ற எண்ணும் போர்வெறி மிக்கவர் தொண்டையோர். ஆனால், அவர் வழிவந்த திரையன், அச் செயல் பகை வளர்க்கும் அறிவில்லாத செயலாம் என உணர்ந்தான். அதனால் பணிந்து திறை தர இசைந்த அரசர்பால் சினம் ஒழிந்து, அவரைத் தன் ஆட்சிக்கு அடங்கிய அரசராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதனால் அவன் அரசவையில், திறை தரவந்த வேந்தர்களும், நட்புடையராய் நாடாண்ட முடிவேந்தர்களும், தம் பகைவரை வென்று வாழ்வளிக்க வல்ல படைத் துணை வேண்டி வந்த மண்டில மாக்களும் வந்து குவிந்து கிடப்பர்.

இவ்வாறு பகைத்தாரைப் பணிய வைத்தும், பிற அரசுகளை அன்பால் அணைத்துக் கொண்டும் அரசோச்சி வந்தமையால், திரையன் ஆண்ட தொண்டை நாட்டு மக்கள், பகைவரால் பாழுறல் அறியாது, அச்சம் ஒழிந்து, அகம் மகிழ்ந்து வாழ்ந்தனர். பகை அழித்து, அப் பகைவரால் உளவாம் கேடொழித்து ஆண்ட திரையன், நாட்டில் உள்ளார்க்குப் பகைவரால் கேடுண்டாதலைப் போன்றே, அந்நாடாள் அரசனாலும், அவன்கீழ்ப் பணிபுரிவாராலும், அணங்குகளாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் கேடுண்டாதலும் கூடும்; ஆகவே, நாட்டு மக்கட்கு, அவற்றான் உளவாம் கேட்டினையும் ஒழித்து உறுதுணை புரிதல் நல்லரசின் நீங்காக் கடமையாம் என உணர்ந்தான். உணர்ந்த திரையன், காட்சிக் கெளியனாய், ஆன்றோர், அமைச்சர்களோடு அரசவையிலிருந்து, வலியரான் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், விளைவின்மை, வறுமை முதலியவற்றான் வருந்திக் குறை கூறி வந்தாரும் கூறுவ கேட்டு, முறையளித்தும், குறை போக்கியும் குடியோம்புவானாயினன். அதனால், அவன் நாடு அல்லன. அகன்று, நல்லன வாழும் வல்லரசாய் விளங்கிற்று. வழிப்போவாரை, இடை வழியில் அவர் அஞ்சுமாறு தாக்கி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து கொண்டு கொடுமை செய்யும் ஆறலைக் கள்வரை, அவன் நாட்டில் காண்டல் இயலாதாயிற்று. அத்துணைக் காவல் நிறைந்து விளங்கிற்று அந்நாடு. மேலும், நாட்டு மக்களை இடி இடித்தும், மின்னல் மின்னித் தாக்கியும் துயர் செய்வதில்லை. அந்நாட்டுப் புற்றுவாழ் பாம்புகள் மக்களைக் கடித்து மாளச் செய்வதில்லை; காட்டில் வாழும் கொடிய விலங்குகளாகிய புலி முதலாயின, தம் கொடுமை மறந்து கூடிக் குலவின. அத்துணை அறம் நிறைந்த நாடாய் நின்று விளங்கிற்று அவன் நாடு. அதனால், அவன் நாட்டில் புதியராய்ப் புகுந்து வாழும் பிற நாட்டார், அரண்மிக்க இடந்தேடி அலையாமல், தம் கைப் பொருள்களோடு, தாம் விரும்பும் இடங்களில், தாம் விரும்பியவாறே இருந்து இளைப்பாறிச் செல்வர். அத்துணை நன்மை மிகுந்த நல்லாட்சி, திரையனின் நாட்டாட்சி!

திரையன், இவ்வாறு, ஆண்மையும் ஆற்றலும், அன்பும் அருளும், அரசியல் அறிவும் உடையவனாய் நாடாண்டனன். ஆதலின் அவன் முரசு முழங்குதானை மூவேந்தரினும் சிறந்தோனாயினன். அவன் ஆண்ட தொண்டை நாடு, அம்மூவேந்தர்க்குரிய சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் சிறந்தது எனப் புலவரும், பிறரும் போற்றிப் புகழ்வராயினர். திரையன் ஆண்ட தொண்டை நாடு, அந்நாட்டுத் தலைநகர் காஞ்சி, அந்நாட்டில் நின்று சிறக்கும் வேங்கடமலை, அந்நாட்டு நிலவளம், நீர்வளம், அந்நாடு வாழ் மக்கள் மனவளம், அவன் அரசியல் நெறிவளம் முதலாம் பல்வேறு வளங்களும் தோன்ற, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற கடைச்சங்கப் புலவர் பெரும்பாணாற்றுப் படை எனும் பெயருடையதொரு பெரிய பாட்டைப் பாடிப் பாராட்டியுள்ளார்.

அல்லன கடிந்து, அறம் புரிந்து ஆட்சி புரியவல்ல திரையன், தன்னைப் போன்றே பிற அரசர்களும், நல்லாட்சி புரியும் நல்லோராயின், நாட்டில் பகை நீங்கும், பண்பு வளரும் என உணர்ந்தான். அதனால், நாட்டில் நல்லாட்சியை நிலவுவது எவ்வாறு என்ற அரசியல் உண்மையினை உலக அரசர் அனைவரும் அறிந்து கடைப்பிடிக்குமாறு அதை விளங்க உரைக்கும் அறப்பணியினையும் அவனே மேற்கொண்டான்.

சாலையில் ஊர்ந்து செல்லும் வண்டியொன்று, கேடுற்று, அழிவது, அவ்வண்டியின் திண்மை இன்மையாலும் அன்று; செல்லும் வழிக் கேட்டாலும் அன்று; ஒரு வண்டியின் கேடு, கேடின்மைகளுக்கு, அவ்வண்டியின் திண்மையின்மையும், திண்மை யுண்மையும் காரணங்களாகா, செல்லும் வழியின் சீர்கேடும், சீரும் காரணங்களாகா, அவற்றிற்கு அவ்வண்டியை ஒட்டுவோனே காரணமாம். ஒட்டு கின்றவன் வண்டி ஒட்டும் தொழிலில் வல்லனாயின், அவ்வண்டியினை ஈர்த்துச் செல்லும் எருதுகளை அடக்கி ஆளத்தக்க ஆற்றலும், செல்லும் வழியின் இயல்பறிந்து ஒட்டும் அறிவும் வாய்க்கப் பெற்றோனாயின், திண்மையில்லா வண்டிகளையும், வழியிடையே கெடுத்துப் போக்காது ஒட்டிச் சென்று ஊர் அடைவான். அவன்பால் அவ்வாற்றலும், அறிவும் இன்றாயின், அவன் ஒட்டும் வண்டி, கல்போலும் திண்ணிதேயாயினும், பள்ளத்தில் வீழ்ந்து பாழாகியும், சேற்றில் சிக்குண்டு சிதைந்தும் கேடுறும். ஆற்றல் உடையான் ஒட்டும் வண்டி ஊறு இன்றி ஊர் அடைதல் மட்டுமன்று; அவ்வண்டியில் ஏறிச் செல்லும் மக்களும், அதை ஒட்டிச் செல்லும் அவனும், எண்ணிய இடம் அடைந்து இன்புறுவர்; அதற்கு மாறாக ஆற்றலிலான் ஒட்டும் வண்டி, இடை வழியில், உடைந்துபோதலோடு, அதில் ஏறிவந்த மக்களும், அதை ஒட்டி வந்த அவனும் எண்ணிய இடத்தை அடைய மாட்டாமையோடு, இடை வழியில் வீழ்ந்து இன்னலுக்கும் உள்ளாவர்.

அதைப் போன்றே, ஒர் அரசின் வாழ்வும் தாழ்வும் அவ்வரசினை நடத்துவோர் தம் அறிவு, அறிவின்மை களினாலேயே உண்டாம். அதன் வாழ்வும் தாழ்வும், அதைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தலைவனின் ஆற்றல் ஆற்றலின்மைகளினாலேயேயாம். ஆளும் அரசன் அரசியல் அறிவும், ஆண்மையும் ஆற்றலும் உடையனாயின், எத்துணைச் சீர்கேடுற்ற அரசும் சீர் பெற்று உயரும்; அவ்வரசின் கீழ் வாழும் மக்களும், மனநிறை வாழ்வினராவர். அவனும் நிறை உடையவனாவன்.

சிற்றரசு பேரரசாகிப் பெருமை கொள்வதும், பேரரசு சிற்றரசாகிச் சிதைவதும், அவ்வக் காலங்களில் அவ்வரசியல் தலைமைக்கண் நிற்பார்தம் அறிவு, அறிவின்மைகளினாலேயே ஆகும் என்ற அரசியல் உண்மையினை உலக அரசர்கட்கு உரைக்க வந்த திரையன், உருளையும், பாரும் கோக்கப் பெற்று, எவ்வகை நிலத்தினும் விரைந்தோட வல்ல உறுதி வாய்ந்த வண்டி, அதை ஒட்டுவோன் அத்தொழிலறிந்த உரவோனாய வழி, கேடின்றி ஓடி, உன்னிய இடம் சென்று அடையும்; வண்டி ஒட்டும் வன்மை அதை ஒட்டுவோன்பால் இன்றாயின், அவ்வண்டி நெறியல்லா நெறி சென்று, சேற்றிலும் மணலிலும் சிக்கிச் சீரழியும் என ஒடும் வண்டியின் இயல்புரைப்பான்போல், உலக அரசுகளின் உண்மை யியல்பினை உள்ளவாறு உரைத்துள்ளான். இக் கருத்தமைந்த பாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் உள்ள 185ஆம் செய்யுளாக உள்ளது.


5

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி



சோழன் கரிகாலன் முன்னோர், காற்றின் இயல்பறிந்து கடலில் கலம் ஒட்டக் கற்றிருந்தனர். கரிகாலன், கலம் செலுத்திக் கடல் கடந்து சென்று, ஈழநாட்டை வென்றான். இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன் கடலிடையே வாழ்ந்து நெருக்கித் திரிந்த கடம்பு மரக் காவலரை வென்று அழித்தான். பழந்தமிழ்ப் பாண்டியன் ஒருவன் உரோம் நாட்டு அரசன் அவைக்கு அரசியல் தூதுவனை அனுப்பியிருந்தான். பண்டைத் தமிழர்கள், மேற்கே எகிப்து, கிரீக், உரோம் முதலாம் நாடுகளோடு வாணிக உறவு மேற் கொண்டிருந்தனர். கிழக்கே சுமத்ரா, ஜாவா, சீனம் முதலாம் நாடுகட்கும் வாணிகம் கருதிச் சென்று வந்தனர். தமிழ் நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் வந்திருந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் எண்ணற்றவராவர். இவ்வாறெல்லாம் பழந்தமிழ் நூல்கள் பகரும் சான்றுகளால், கடலில் கலம் செலுத்தி வாழும் வாழ்க்கையினைப் பழந்தமிழ் மக்கள் பண்டே மேற்கொண்டிருந்தனர் என்பது உறுதியாம்.

இவ்வாறு, வெற்றி குறித்தும், வாணிகம் கருதியும் கடல் கடந்து செல்லுங்கால் இடைவழியில் கலம் சில கவிழ்ந்து போதலும், அவற்றில் சென்ற மக்கள் ஆண்டே ஆழ்ந்து அழிந்து போதலும் உண்டு. கடலிடையே கலம் கவிழ்ந்த காட்சிகளைத் தம் பாட்டிடை வைத்துப் பாராட்டிய புலவர்களும் உளர்.

அத்தகைய கடற்செலவு ஒன்றில், கலங் கவிழ, அழிந்துபோன அரசருள் இவ்வழுதியும் ஒருவனாவன். ஆதன், இரும்பொறை, குட்டுவன் எனும் பெயர்கள் சேரரைக் குறிக்கவும், கிள்ளி, சென்னி, வளவன் எனும் பெயர்கள் சோழரைக் குறிக்கவும் வழங்குவதேபோல், செழியன், மாறன், வழுதி எனும் பெயர்கள் பாண்டியரைக் குறிக்க வழங்கும். ஆகவே, வழுதி எனும் பெயருடைய இவன், பாண்டியர் குடியில் பிறந்தவனாவன் எனத் தெரிகிறது. பாண்டியர் குடியிற்பிறந்து, கடலில் கலங் கவிழ மாண்டு மறைந்து போனமையால், "கடலுள் மாய்ந்த வழுதி" என அழைக்கப் பெற்ற இவன், இளமைக் காலத்திலேயே கற்பன எல்லாம் கற்றுக் கல்விக் கருவூலமாய், பேரருள் பெற்ற பெரியார்களும் பாராட்டத் தக்க அறிவுக் களஞ்சியமாய் விளங்கினமையால், அக்கால மக்கள், அவன் ஆண்டின் இளமையும், அறிவின் பெருமையும் ஒருங்கே தோன்றுமாறு கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எனப் பெயரிட்டு அழைத்தனர்.

பண்டு, கண்ணிற் கண்ட உயிர்களைக் கொன்று தின்னும் கொடுமையே நிறைந்த மக்களைக் கொண்டிருந்த உலகம், இன்று ஒன்று கூடி உள்ளம் கலந்து, அன்பு காட்டி வாழும் மக்களைப் பெற்றுக் காட்சியளிக்கிறது; அந்நல் வாழ்வு மேலும் மேலும் வளர்தல் வேண்டும்; உலக மக்கள் இறவா இன்ப நெறி பற்றி வாழ்தல் வேண்டும் என எண்ணிய பெரியார் களுள் நம் பெருவழுதியும் ஒருவன். பெருவழுதி அவ்வாறு எண்ணியதோடு நில்லாது, உலகின் நிலை இது அவ்வுலகிற்கும் பெரியார்க்கும் உள்ள தொடர்பு இது அப்பெரியாரின் இயல்பு இது எனக் கூறுவான் போல், எல்லாரும் பெருமை உடையவராகுங்கள், பெருமை உடையவராகி உலகியல் வாழ உறுதுணை புரியுங்கள் என உலக மக்கட்கு ஒர் அரிய அறவுரை அளித்துள்ளான்.

உலகம் தோன்றிய நாள் முதலாக, இன்று வரை அவ்வுலகில் பிறந்து வாழ்ந்து இறந்த உயிர்களை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது. எத்தனையோ உயிர்கள் தோன்றின; எத்தனையோ உயிர்கள் மறைந்தன. பிறந்து இறந்த மக்கள் எத்துணையரோ! இவ்வாறு, பலகோடி உயிர்கள், பலகாலும் பிறந்து பிறந்து அழியவும், அவ்வுயிர்கள் பிறந்து இறத்தற்கு நிலைக்களமாய இவ்வுலகியல் மட்டும் மறையாது தொன்று தொட்டே வாழ்ந்து வருகிறது. உயிர்கள் அழிய, உலகியல் அழியாது இருப்பது எவ்வாறு? அதை அழியாவண்ணம் நின்று காப்பார் யாவர்? அதன் அழியாமைக்குக் காரணமாயது எது?

“நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை,” என்ப. உலகியல் அழியாது இயங்குவது, உலகில் பண்புடைப் பெரியார்கள், நல்ல பல குணங்களான் நிறைந்த ஆன்றோர்கள், அவ்வப்போது தோன்றித் தோன்றி, மறம் அழித்து, அறம் வளர்த்து வந்தமையினாலேயே ஆகும்.

உலகியல் அழிவுறாவண்ணம், அரணாய் அமைந்து காக்கவல்ல அச்சான்றோர் யாவர்? அவர் பண்பு யாது? அவர்பால் காணலாம் அருங்குணங்கள் யாவை? இல்லிருந்து நல்லறமாற்றுதல், வருவிருந் தோம்பி வாழ்வதற்கேயாகும். விருந்தினர் வயிற்றுப் பசியால் வருந்தியிருக்க, வயிறார உண்பான் வாழ்க்கை வனப்புடையதாகாது. வளம் கெட்டு அழியும். ஆதலின், அவ்விருந்தினரை உண்பித்தன்றித் தாம் உண்டல் கூடாது. உண்ணும் உணவு கிடைத்தற்கு அரியதாய், ஒருவர்க்கே போதுமானதாயினும், அதையும், அவரோடு இருந்து பகிர்ந்துண்டலல்லது, தாமே தனித்துண்டல் தகாது. இந்தப் பண்பினைத் தலைமை சால் பண்பாகக் கொண்டு போற்றுவார் யாரோ அவரே பெருமையுடையவர்.

தினை விதைத்தால் தினை விளையும். ஆகவே, தினை வேண்டுவோர் தினையே விதைத்தல் வேண்டும். தன்பால் யாவரும் அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புவான், எல்லாரிடத்தும் தான் அன்பு காட்டுதல் வேண்டும். மாறாகப் பிறர்பால் வெறுப்புக் காட்டின், அவரும் அவனை வெறுப்பார். ஆகவே, எவரையும், எப்பொருளையும் வெறுக்காது விழைவு காட்டும் பண்பு, பெரியோர்க்கு மிக மிக வேண்டுவதாம்.

அஞ்ச வேண்டிய பழிபாவங்களைக் கண்டு அஞ்சாமை அறிவுடைமையாகாது. ஆகவே, அறமல்லாச் செயல் கண்டு அஞ்சும் உள்ளம், அவ்வான்றோர்க்கு இன்றியமையாது வேண்டும். உலக வாழ்விற்கும், தாழ்விற்கும் தம் வாழ்வு தாழ்வுகளையே காரணமாக உடையார் பெரியர். அன்னார் ஊக்கம் குன்றி, உறக்கம் கொண்டு விடுவராயின், உலகம் அழியும். ஆகவே, அவ்வான்றோர்பால், மடியும் சோம்பலும் நில்லாது மடிதல் வேண்டும்.

உயிர், பொருள், புகழ், பழி இவற்றுள் உயிரும் பொருளும் அழியும் தன்மைய நிலையா இயல் புடையன. புகழும் பழியும் அழியா இயல்புடையன; நிலைபேறுடையன. அழிவன கொடுத்து அழியாதன பெறுதலே அறிவுடைமை. ஆகவே நிலையற்ற உயிர் கொடுத்து, நிலைபேறுடைய புகழ் பெறுதலைப் பேண வேண்டும். அதுவே அறிந்தார் செயலாம்; அவர் அறிவிற்கு அழகு தருவதாம். நிற்க. அழியாத் தன்மை யுடைமையால் பழியும் புகழும் ஒத்த இயல்பினவே என்றாலும், பழி பாராட்டத்தக்க பண்புடையதன்று: பேணத்தக்க பெருமையுடையதன்று. ஆகவே, அதைப் பெறுதல் பெரியார் செயலாகாது. அதிலும் நிலையற்ற பொருளிற்காக, உலகம் உள்ளளவும் அழியாது நிலை பெற்று நிற்கும் பழியை மேற் கொள்ளுதல், அறிவின்மை யினும் அறிவின்மையாம். அஃது ஆன்றோர் அறமாகாது. -

பிறர் உழைக்கத் தான் பயன் துய்த்தல் அறநெறி யாகாது. உழுது உழைத்து ஊரார்க்கு உணவளித்து உழவெருதே போல், தான் உழைத்துப் பிறரைப் பேணலே பேராண்மையும் பேரறமும் ஆம்.

“பல்லார் பயன்துய்க்கத் தான்வருந்தி வாழ்தலே

நல்லாண் மகற்குக் கடன்.”



ஆகவே, மக்கள் ஒவ்வொருவரும், தமக்கென வாழாது, பிறர்க்கென வாழும் பேருள்ளம் உடையராதல் வேண்டும்.

ஈண்டுக் கூறிய ஒவ்வொன்றும் மிக உயர்ந்த உண்மையாம். அவற்றுள் ஒன்றையோ, ஒரு சிலவற்றையோ உடையோராகாது, அவை அனைத் தினையும் ஒருங்கே கொண்ட உரவோர், உலகோர் போற்றும் உயர்ந்தோராவர். அத்தகைய உயர்ந்தோர் வாழ்வதனாலேயே உலகியல் அழியாது உயிர்பெற்று இயங்குகிறது! இந்த அரிய அறவுரையினை, அழகிய செய்யுள் வடிவில் அமைத்து ஆக்கித் தந்துள்ளான், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. கடலுள் மாய்ந்தும், கருத்தில் மாயாத அவன் உரைத்த அறம் வாழ்க! வளர்க!


6

கணைக்கால் இரும்பொறை



தமிழரசர் மூவருள் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவோர் சேர வேந்தராவர். மூவேந் தரைக் குறிப்பிடுங்கால், சேர, சோழ, பாண்டியர் எனச் சேரரை முதற்கண் வைத்து வழங்குவது தொன்று தொட்ட வழக்கமாதல் அறிக. சங்க காலச் சேரவேந்தர் இருபிரிவினராவர். ஒரு கிளையினர், தம் இயற்பெயரை அடுத்துச் சேரல், ஆதன், குட்டுவன் என்ற சிறப்புப் பெயர்களுள் யாதேனும் ஒன்றினை மேற்கொள்வர். மற்றொரு கிளையினைச் சார்ந்தார் ஒவ்வொருவரும் அச்சிறப்புப் பெயர்களோடு, "இரும்பொறை" என்ற பிறிதொரு சிறப்புப் பெயரையும் தவறாது மேற்கொள்வர். சேர அரசர் இரு கிளையினராகப் பிரிந்து வாழ்வதைப் போன்றே, அவர் ஆண்ட நாடும், இரண்டாகப் பிரிந்தே கிடந்தது. முன்னவர், வஞ்சிமா நகரம் எனப் பெயர் பூண்ட உள்நாட்டு ஊராகிய கருவூரைத் தலைநகராகக் கொண்டு உலகாண்டு வந்தனர். இரும்பொறை மரபினர், தொண்டி, மாந்தை, தறவு முதலாம் பேரூர்களைக் கொண்ட கடற்கரை நாட்டைத் தொண்டியிலிருந்து ஆண்டு வந்தனர். அவ்வாறு ஆண்ட அரசர்களுள், கணைக்கால் இரும்பொறை என்பானும் ஒருவன். அவன் கணையன் - எனவும் அழைக்கப் பெறுவன்.

கணைக்கால் இரும்பொறை பழகுதற்கினிய பண்புடையவன். நல்லோரை நண்பனாக்கிக் கொள்ளும் நல்லியல்புடையவன். தன் தலைநகராம் தொண்டியில் வாழ்ந்து வந்த பொய்கையார் என்பார், பெரும் புலமையும், பொருட் செல்வமும் வாய்க்கப் பெற்றவராதல் அறிந்து அவரைத் தன் ஆருயிர் நண்பராக மேற்கொண்டான்.

கணைக்கால் இரும்பொறை பேராண்மை மிக்கவன். வேலேந்திப் போரிட வல்ல பெரிய படையுடையவன். படைவலியோடு, சிறந்த உடல் வலியும் உடையவன். ஒருநாள், அவன் படையைச் சேர்ந்த யானை ஒன்று, மதங்கொண்டு, பாசறை எங்கும் திரிந்து, அங்குள்ளார்க்கும், அவர் உடைமைக்கும் ஊறு பல விளைக்கத் தொடங்கிற்று. அதனை அடக்கி ஒரு நிலைக்குக் கொணர்தல், அவன் வீரரால் இயலாது போயிற்று; அவரெல்லாம் அஞ்சி, ஒருபால் ஒடுங்கினர். அஃது அறிந்த கணைக்கால் இரும்பொறை, ஆங்கு விரைந்து சென்று, யானையின் மதம் அடங்கப் பற்றிப் பிணித்தான். அதன் பின்னரே, ஆங்குள்ளோர் அச்சம் ஒழிந்து உறங்கினர்.

கணைக்கால் இரும்பொறையின் காலத்தில், சேர நாட்டை அடுத்த ஒர் இடத்தே, மூவன் எனும் பெயருடைய வீரன் ஒருவன் இருந்தான். அவனும் இரும்பொறையும் ஏனோ பகைத்துக் கொண்டனர். கணைக்கால் இரும்பொறை அவனை வென்று கைப்பற்றினான். அவன் ஆண்மை அடங்குமாறு அவன் பற்களைப் பிடுங்கினான். அவனை வென்ற தன் ஆற்றற் சிறப்பினைப் பின்னுள்ளோரும் அறிந்து போற்றுமாறு, அப்பற்களைத் தன் தொண்டி நகர்க் கோட்டையின் வாயிற் கதவில் அழுத்தி வைத்தான். கணைக்காலிரும்பொறையின் இவ்விரு பேராண்மை களையும், அவன் நண்பரும், அவன் அவைக்களப் புலவருமாய பொய்கையார், தாம் பாடிய பாட் டொன்றில் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், அக்காலை சோணாடாண்டிருந்த செங்கணான் என்பான், கணைக்காலிரும்பொறை யோடு பகை கொண்டான். தமிழ்நாடு, பண்டு பெற்றிருந்த பெருமை இழந்து, சிறுமையுற்றதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும், தமிழரசர் மூவரும், தம்மிடையே ஒற்றுமை கொண்டு உலகாள்வதற்கு மாறாகப் பகை கொண்டு, ஒருவரை யொருவர் அழித்து வந்தமையே தலையாய காரணமாம் சேர, சோழ பாண்டியராய அம்மூவேந்தர் குடிகளுள், ஒரு குடியில் வந்த ஓர் அரசன், தன் அறிவு, ஆண்மை, கொடை, குணம் இவற்றால் சிறந்துவிடுவானாயின், ஏனைய இரு பேரரசர்களும் அவன்பால் பொறாமை கொண்டு, தம் நாடுகட்கு இடையிடை இருந்து அரசோச்சி வந்த பல சிற்றரசர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு, ஒன்று கூடிச் சென்று, போரிட்டு அச்சிறந்தானை அழிப்பதும், ஆற்றல் மிக்க அரசன், தன்போலும் வேந்தர்கள், தன் ஆண்மையை அறிந்து மதித்தற் பொருட்டு வென்று அடக்குவதும், இவ்வாறு, ஒரு குடியிற் பிறந்த ஓர் அரசன், ஏனைய குடிகளைச் சார்ந்த அரசர்களை அழிப்பதோடு அமைதி கொள்ளாது, ஒரு குடியிற் பிறந்தவர்களே, தம்முள் பகைகொண்டு போரிடுவதும், ஒரு வயிற்றில் பிறந்தவர்களே பகை கொண்டு போரிட்டு ஒருவரையொருவர் அழிப்பதும், மகன் தந்தைமீதே படை கொண்டு போவதும் அக்கால நிகழ்ச்சிகளாம்.

அக்கால வழக்கத்திற் சிறிதும் தவறாதார் போலவே சேரமான் கணைக்கால் இரும்பொறையும், செங்கணானும் பகை கொண்டனர். கணைக்கால் இரும்பொறைக்குக் கழுமலம் என்ற இடத்தில் காவல் மிக்க கோட்டை ஒன்றிருந்தது. யானைப் படை மிக்க அக்கோட்டையினை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலாம் படைத் தலைவர்கள் காத்து நின்றனர். கணைக்கால் இரும்பொறையின் வெற்றிச் சிறப்பிற் கெல்லாம் கழுமலக் கோட்டையே காரணமாம் என்பது உணர்ந்த செங்கணான், பெரும் படையோடு சென்று, அக்கோட்டையைத் தாக்கினான். சோழர் படைக்குப் பழையன் என்பான் தலைமை தாங்கிச் சென்றான். ஆண்மையில், ஆற்றலில் மிக்கோனாய அவன், அரும்போர் ஆற்றி, அக் கோட்டையைக் காத்து நின்ற படைத் தலைவர்களைப் பாழ்செய்தான்.

சேரர் படையின் சிறந்த யானைப்படை பெரும் அழிவுக்குள்ளாயிற்று. கழுமலம் எங்கும் பிணமலை களே காட்சியளித்தன. ஒரு குளத்தின் கரையின் கீழ் அக்குளத்திற்கு நீர் வருவான் வேண்டி அமைத்த நீர்த் தூம்பின் வழியே புது வெள்ளம் புகுந்து பாய்ந்து ஒடுவதே போல், வீரரால் வெட்டுண்டு வீழ்ந்த யானையொன்றின் உடலின் கீழ்க் கிடந்த, இருபுறமும் போர்த்திருந்த தோல் கிழிந்து போன முரசின் ஊடே வீரர்களின் உடலினின்றும் ஒழுகிய செந்நீர் ஒடும் காட்சி ஒருபால்.

ஆடு மாடுகளின் கால்பட்டு ஒடிந்து, கீழ் மேலாய் வீழ்ந்து கிடக்கும் காளான்கள் போல் குதிரைகளின் காலால் தாக்குண்டு, காம்பொடிந்து, தலைகீழாய்க் கவிழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகள் ஒருபால்.

வெண்திங்களைக் கரும்பாம்பு தீண்டி நிற்பது போல் காம்பற்று வீழ்ந்து கிடக்கும் வேந்தர்களின் வெண் கொற்றக் குடையின் கீழ், வீரர்கள் வெட்டி வீழ்த்திய யானையின் கை வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

சிவந்து தோன்றும் அந்தி வானின் இடை யிடையே, கருமுகிற் கூட்டங்கள் காணப்படுவன போல், செந்நீர் வெள்ளத்தால் சிவந்து தோன்றும் அப் போர்க்களத்தின் இடையிடையே யானையின் உடல்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

பேய்க்காற்று வீசிய பனங்காட்டில், பனங்காய்கள் சிதறிக் கிடப்பனபோல், போர்க்களமெங்கும் வீரர் களின் வெட்டுண்ட தலைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

ஐந்தலை நாகத்தைத் தன் வாய் அலகுகட் கிடையே பற்றிப் பறக்கும் கருடனைப்போல், ஐந்து விரல்களும் அறுபடாதிருக்க, அறுந்து வீழ்ந்த வீரர் தம் கைகளைக் கவ்விக்கொண்டு, பருந்துகள் பறக்கும் காட்சி ஒருபால்.

இவ்வாறு களம் காட்சி தர, தன் படையையும், படைத் தலைவரையும் பழையன் பாழ் செய்வது அறிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை கடுஞ்சினங் கொண்டு, களம் புகுந்து, பெரும் போராற்றிப் பழையனைக் கொன்றான். தன் படைத் தலைவன் பட்டான்; அவனை மாளப் பண்ணினான் கணையன் என்பது கேட்டுச் செங்கணான் விரைந்து களம் புகுந்தான்; கடும் போராற்றினான்; கணைக்கால் இரும்பொறை களைத்திருக்கும் சமயம் நோக்கிக் கைப்பற்றிக் கொண்டு போய்க் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான்.

சிறை வைக்கப் பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறை, ஒருநாள் சிறைக் காவலரை விளித்துத் தண்ணிர் தருமாறு பணித்தான். அவர்கள், அவனும் ஒரு கைதியே என்ற எண்ணம் உடையவர். ஏனைக் கைதிகள்பால் நடந்து கொள்வதே போல், அவன் கேட்ட அப்போதே தண்ணிர் கொண்டு வந்து தராது, காலம் கடந்து சென்று தந்தனர். தரும்போதும், அவன் ஒர் அரசன் என்ற எண்ணம் அற்றுப் பணிவின்றித் தந்து சென்றனர். சிறைக் காவலர் தம் செயல் கண்டு சேரன் வருந்தினான். அவர் செய்த இழிவு, அவன் உள்ளத்தை உறுத்திற்று. தந்த நீரை உண்ணாது ஒருபால் ஒதுக்கி விட்டான்; அவன் உள்ளம் ஆழ்ந்த சிந்தனையுள் ஆழ்ந்து விட்டது.

“வென்று விழுப்புகழ் பெறாது, பகைவனால் பற்றப்பட்டு, அவன் சிறையகத்து வாழ்வது இழிவாம். அந்நிலையில் பகைவன் பின் சென்று, பணிந்து, பல்லைக் காட்டி வாழ்வது அதனினும் இழிவாம். அந்நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை வெறுத்து, உயிர் துறந்து விடுதல் உயர்ந்தோர் போற்றும் உரனுடையார்க்கே உண்டாம். தம் நிலை தளரும் காலம் வந்துற்றக்கால், மானத்தை இழந்து, உயிர் வாழ எண்ணாது, உயிரை விட்டு, மானத்தைக் காப்பர் மாண்புடையார். ஆனால், அந்தோ! என் நிலை யாது: போரில் தோற்றேன்; உயிர் போயிற்றிலது. பகைவனால் பற்றப்பட்டேன்; என் உயிர் பிரிந்திலது. சிறையில் வாழ்கிறேன்; சிந்தை நொந்தேனல்லேன்; உயிர் துறக்கத் துண்iந்தேனல்லேன். உண்ணாமை மேற்கொண்டே னல்லேன். மாறாகப் பகைவர் தாமே தராதிருக்கவும், உண்ணும் நீரை யானே இரந்து வேண்டினேன். அவர் அரசன் என்ற மதிப்புத்தானுமின்றி, இகழ்ந்தளித்த தண்ணிர் இதோ! இதை உண்டு உயிர் வாழ்வதோ உயர்வு ?” என்றெல்லாம் எண்ணி, இறுதியில் உண்ணாது உயிர் துறப்பதே நன்று என அவன் துணிந்தான்.

மானத்தின் மாண்புணர்ந்த அவன் உள்ளத்தி னின்றும் பிறந்தது ஓர் அறவுரை இறக்கத் துணிந்த அவன், தான் அனுபவித்தறிந்த அவ்வறவுரையினை, உலக மக்கள் அனைவரும் அறிந்து பயன் கொள்ளுதல் வேண்டும் என எண்ணினான். உடனே, அவ்வறவுரை யினை அழகிய ஒரு செய்யுளாக்கினான்; ஆக்கிய அச் செய்யுளை ஓர் ஏட்டில் எழுதினான். எழுதிய ஏட்டைத் தன்னருகே வைத்தான்; உடல் சோர்ந்து வீழ்ந்தான்; உறங்கி விட்டான்.

“போர்க்களம் புகுந்து போரிட்டு, வாள்வடுப் பெற்றவரே, வானுலகம் சென்று மேனிலையுறுவர். இறந்து பிறந்த குழந்தையும், உருவற்றுப் பிறந்த ஊன்தடியும் அவ்வாறு வாள் வடுப்பெறும் வாய்ப்புப் பெறுவதில்லை. ஆதலின், வானிலை பெறும் வாய்ப்பு அவற்றிற்குக் கிட்டுவதில்லை. ஆனால், அவற்றையும் வானுலகம் அனுப்புதல் வேண்டும் என எண்ணும் அன்புள்ளம் உடையராய ஆன்றோர்கள் அவற்றைத் தருப்பைப் புல்மீது கிடத்தி, வெற்றிப் புகழ் பெற்ற வீரர் சென்றவாறே, இவையும் வானுலகம் செல்க!” என வாழ்த்தி, வாளால் வெட்டிப் புதைப்பர். இஃது அரசர் பண்பு. அத்தகைய அரசர் பிறந்த குடியிலே பிறந்து, சங்கிலியால் பிணிக்கப் பெற்று இழுத்துச் செல்லப்படும் நாய்களே போல், பகைவரான் பற்றப்பட்டு, அவர் சிறையகத்தே யான் வாழ்ந்தேன். அவர் அளிக்கும் உணவினை உண்ணேன் என மறுத்து உயிர் விடுவதற்கு மாறாக, வயிற்றுப் பசி தீர, வாய் திறந்து இரந்து கேட்டு, அவர் இகழ்ந்தளித்த நீரை உண்ணும் இழிவுடையே னாய் என் போலும் இழிபிறப்பாளர் பிறவாராக!” இவ்வாறு அவன் ஏட்டில் எழுதி வைத்தான்.

சேரமான் கனைக்கால் இரும்பொறை செங்கணானால் சிறை வைக்கப் பெற்றுளான் என்ற செய்தி கேட்டார் பொய்கையார். உடனே விரைந்து சென்று, செங்கணானைக் கண்டார்; கழுமலப் போர்க்களத்தே, செங்கணான் செய்த போர்ப் பெருமையினைப் பாராட்டிக் களவழி நாற்பது என்ற நூலைப் பாடினார். பாடல் கேட்டு மகிழ்ந்த செங்கணான், புலவர் வேண்டியவாறே, சேரனைச் சிறை வீடு செய்து சிறப்பித்தான்.

“மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே!”



“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று”



என்ற ஆன்றோர் மொழிக்குச் சான்றாய் நின்று, மானத்தின் மாண்புரைக்கும் அறம் உரைத்த அரசன் வாழ்க! .


7

கோப்பெருஞ் சோழன்



காவிரிக்குக் கரையமைத்த கரிகாற் பெருவளத் தான் காலத்திற்குப் பிறகு, சோழ நாடு இரு கூறுபட்டு, இரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்று, புகார் நகரைத் தலைநகராகக் கொண்ட கடற்கரை நாடு, மற்றொன்று, உறையூரைத் தலை நகராகக் கொண்ட உள்நாடு, கரிகாலனுக்குப் பிறகு உறையூரும், உறையூர்ச் சோழருமே சிறந்து விளங்கினர். உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன்.

நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். உயர்ந்த நண்பர்கட்கு உள்ளம் ஒத்தல் ஒன்றே போதும்; அவர்கள் ஒரே நாட்டில், ஒரே ஊரில் பிறந்து ஒன்று கூடி வாழ்ந்து, என்றும் பிரியாது பழகுதல் வேண்டுவதின்று. இந்த உண்மையினை உலகறியக் காட்டிய சிறப்பு கோப்பெருஞ் சோழனுக்கே உரித்து. ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர் பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்”



என்ற திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், “இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்,” என விளக்கவுரை எழுதிக், கோப்பெருஞ் சோழனின் நட்பின் பெருமையினை நாடறியச் செய்துள்ளமை அறிக.

கோப்பெருஞ் சோழன், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போன்ற புலவர் பெருமக்கள் போற்ற, உறையூர்க்கண் இருந்து உலகாண்டிருந்தான். அப்போது பாண்டிய நாட்டில், பிசிர் என்னும் ஊரில், ஆந்தையார் என்ற பெயருடைய புலவர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்த பாண்டிய நாடு, அறமல்லன அற்று, அறம் விளங்கும் நாடு ஆதலாலும், அவர் ஊர், ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் பலர் வாழும் சிறப்புடையது ஆதலாலும், அவர் வீடு, மனைமாட்சியிற் சிறந்த மனையாளையும், அறிவன அறிந்த மக்களையும், குறிப்பறிந்து கடனாற்றும் ஏவலர்களையும் பெற்றுள்ளமையாலும், கவலையற்ற பெருவாழ்வு கொண்டிருந்த காரணத்தால், ஆண்டு பல ஆகியும், அவர் நரை திரை பெறா நல்லுடல் பெற்றிருந்தார். இத்தகைய பெருவாழ்வு பெற்றிருந்த பிசிராந்தையார்பால், கோப்பெருஞ் சோழன் பேரன்பு கொண்டான். அவரைத் தன் ஆருயிர் நண்பராகக் கொண்டு போற்றினான். “நண்பருட் சிறந்த நண்பர் பிசிராந்தையார்!’ என்று பாராட்டினான். "பிறர் பழிசுறாப் பெருங்குணக் குன்று பிசிராந்தையார்! இன்சொல் வழங்கும் இயல்புடையார்! என் உயிரையும்; உள்ளத்தையும் ஒருங்கே பிணித்த உயர்ந்த நட்புடையார்! ஒரு பொய் கூறின், உலகுள்ளளவும் நிற்கும் உறுபுகழ் வரும் எனக் கூறுவார் உளராயினும் அப்பெரும் புகழ் கருதியும் சிறு பொய்யும் கூறாச் சிறப்புடையார் ! நின் பெயர் யாது?’ என வினவுவார்க்கு என் பெயர் கோப்பெருஞ்சோழன் என என் பெயரைத் தம் பெயராக் கொள்ளும் தனியன்புடையார்! அவர், என் சோணாட்டின் பகை நாடாய பாண்டிய நாட்டில், மிகமிகச் சேய்மைக் கண்ணதாய பிசிர் எனும் ஊரில் வாழ்பவரே எனினும், அவரே என் உயிர் நண்பர்! உண்மை நண்பர்!" எனப் பிசிராந்தையார் புகழ் பாடும் பெருங்குணமுடையனாய் வாழ்ந்திருந்தான்.

கோப்பெருஞ் சோழனைப் போன்றே, பிசிராந்தையாரும் அவன் புகழ் பாடுவதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தார். எங்கும் எப்போதும் "கோப்பெருஞ்சோழன்! கோப்பெருஞ்சோழன்!" என அவன் புகழே கூறிக் கொண்டிருந்தார். “என் நண்பன், உறையூரிலிருந்து உலகாளும் உரவோன், கோப்பெருஞ் சோழன் எனும் பெயருடைய கோவேந்தன். புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போலும் புலவர் சூழ வாழும் பெரியோன்!” என்றெல்லாம் கூறிப் பெருமை கொள்வார். ஒரு நாள் மாலைக் காலத்தே, தம் மனையகத்தே இருந்து வெளியைப் பார்த்திருந்த போது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் அன்னப் பறவைகளைக் கண்டு, “குமரியாற்று மீன் உண்டு இமயம் நோக்கிச் செல்லும் அன்னப் பறவைகாள்! செல்லும் வழியில், இடையே சோழநாடு என்ற நாடொன்றுளது; அதன் தலைநகர் உறையூர்க் கண், என் உயிர் நண்பன் கோப்பெருஞ் சோழன் உளன்; அவ்வூர்ச் சென்று, அங்குள்ள அரசன் கோயிலுள், எவரையும் கேளாதே புகுந்து, அரசனைக் கண்டு, யாம் ஆந்தையாரை அறிவோம்; அவர்பால் மாறா அன்புடையேம்! என்று கூறின், அவன்தும் மனைவியர் அணியத்தக்க அழகிய அணி பல அணிவித்து அனுப்புவன். அத்துணை அன்புடையானைக் கண்டு செல்வீரோ?” என்று கூறிய கூற்று, பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழன்பால் கொண்டிருந்த நட்பின் பெருமையினை நாடறியச் செய்வது காண்க.

இவ்வாறு புலவர் போற்ற, நட்பின் பெருமை யினை நாவாரப் புகழ்ந்து கொண்டிருந்த கோப்பெருஞ் சோழன் வாழ்வில், குறையொன்று நிகழ்ந்தது. “தந்தையர் ஒப்பர் மக்கள்” என்ற முதுமொழியைப் பொய்யாக்கும் மக்கள் இருவர் பிறந்தனர். பிறந்த மக்கள், பழியுடை மக்களாயினர்; தகாவொழுக்க முடையராயினர். தந்தை இருக்கும்போதே, தாம் நாடாளத் துணிந்தனர். மக்கள் மாண்பிலராதல் கண்ட கோப்பெருஞ் சோழன், அவர்பால் அரசுரிமையை அளிக்க அஞ்சினான்; அவர் ஆட்சியில், நாட்டு மக்கள் அல்லல் பல அடைவர்; நாட்டு மக்கள் நலியத் தன் மக்கள் தனியரசு செலுத்துவதை வேந்தன் உள்ளம் வெறுத்தது. அதனால் மக்கள் விருப்பத்தினை மதிக்க மறுத்தான்; அவன் செயல் கண்டு சினந்த அவன் மக்கள், அவன்மீது படையெடுத்து வந்தனர்; படையொடு வந்தார் தன் வயிற்றில் பிறந்தாரே யாயினும், பிழையொழுக்கம் உடையராதலின், அவரை வென்று அடக்கல் அறநெறியேயாகும் எனக் கொண்ட கோப்பெருஞ்சோழன், எதிர்த்தாரை அழித்தொழிக்கத் தானும் படை திரட்டுவானாயினன்.

குடிமக்கள் நலம் குறித்துக் கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு நன்றே யாயினும், ‘கோப்பெருஞ் சோழன், பெற்றெடுத்த மக்களையே பகைவராகக் கொண்டான்!’ என்ற குன்றாப் பழி வந்து நிற்குமே என அஞ்சினர். அவன் அவைக்களப் புலவராய புல்லாற்றுார் எயிற்றியனார், அவனை அப்பழியி னின்றும் காத்தல் தம் தலையாய கடனாம் எனக் கொண்டார்; உடனே, கோப்பெருஞ் சோழன்பால் விரைந்து சென்றார். “வேந்தே! உன்னோடு பகை கொண்டு, போரிட வந்து நிற்கும் அவர்கள் நீ பிறந்த சோழர் குலப் பகைவராய பாண்டியர் குடியில் வந்தவரோ, சேரர் குடியில் வந்தவரோ அல்லர். உன்னைப் போலவே, அவர்களும் சோழர் குடியிற் பிறந்தவர்களே. அவர்களைப் பகைத்து நிற்கும் நீ, அவர்கள் குலப் பகைவராய பாண்டியனோ, சேரனோ, அல்லை; நீயும் சோழர் குலத்து வந்தவனே! ஒரு குலத்தில் பிறந்தவர்களே பகைத்துப் போரிடல் பழிக்கத் தக்கதன்றோ? மேலும் அவரோ நின் மக்கள். நீயோ அவரைப் பெற்றெடுத்தோன். நீ தேடி வைக்கும் செல்வத்தினை ஆளப் பிறந்தவர்கள் அவர்கள்; அவர்கட்கு ஆட்சிச் செல்வத்தினைத் தேடிவைக்கும் கடமையுடையாய் நீ இருந்து ஈடிலாப் புகழ் பெற்று வாழ்ந்த நீ இறந்த பின்னர் இவ்வரசினை அடைதற் குரியார் அவரேயன்றோ? இவற்றை எண்ணிப் பாராது பெற்ற மக்கள் மீதே போர் கொண்டு எழுதல் அறிவுடைமையாகுமோ? களத்தில் நீ பெற்ற இக் காளையர் இருவரும் இறக்க, நீ வெற்றி பெறுகின்றனை என்றே கொள்வோம். அவ்வாறாயின், நினக்குப் பின்னர், இந்நாட்டாட்சியினை எவர்பால் அளிப்பாய்! நினக்குப் பின், இந்நாடு, ஆள்வோரைப் பெறாமல் அழிய விடுதல் அறமாமோ? அதற்கோ இத்துணைப் பாடு? மேலும் களம் புகுந்தார் இருவரும் வெற்றி கோடல் காணக்கூடாத காட்சியாம். ஆக இரு திறத்தாரும் வெற்றி கோடல் இயலாது. நின்னோடு பகை கொண்டு வந்திருப்பார் இருவராயும் இளைஞராயும் இருக்க, நீ தனிமையும் முதுமையும் உடையையாதலின் ஒரு வேளை, அவர் வெற்றி பெற, நீ தோற்று நிற்பையாயின், அது நினக்குப் பெரும் பழியாமன்றோ? இவற்றை யெல்லாம் எண்ணிப் பாராது போர் கொண்டு எழுதல் அறிவுடைமை ய்ாகாது. மேலும், அடைந்தாரைக் காக்கும் அருளும், பிழைத்தாரைத் தெளிவிக்கும் அறிவும் உடைய பெரியோனாய நீ, வானுலகோர் வாழ்த்தி வரவேற்க விண்ணுலகம் செல்ல வேண்டுமேயன்றி, மக்களைப் பகைத்து மாண்டான் எனப் பிறர் பழிக்க இறத்தல் கூடாது. ஆகவே, போர் ஒழித்துப் பேரறம் புரிய இன்னே எழுக!” என அவன் உள்ளம் கொள்ளும் அறவுரையினை அழகாக எடுத்துக் கூறினார்.

புலவர் கூறிய பொன்னுரை கேட்ட கோப் பெருஞ்சோழன், போர் புரியும் எண்ணத்தைக் கை விட்டான். ஆயினும், மக்கள்தம் மாண்பிலாச் செயலால் மனம் வருந்தினான்; பெற்றவனைப் பகைக்கும் மக்களைப் பெற்றவன் என்ற பழிச்சொல் கேட்டு நாணினான்; அவன் உள்ளம் மானம் இழந்து வாழ மறுத்தது. தனக்கு நேர்ந்த அப்பழிச் சொல் தன் பகையரசர் காதுகளில் சென்று புகு முன்னரே, உயிர்விடத் துணிந்தான்.

தன் அவைப் புலவர்களை அழைத்தான்; தன் அகத்தெழுந்த கருத்தினைத் தெரிவித்தான்; வடக்கிருந்து உயிர்விடத் துணிந்ததை வகுத்துரைத்தான். அரசன் கொண்டது அறநெறியே யாயினும், அவன் போலும், சிறந்த அரசனை இழக்க அவர் விரும்பினாரல்லர். புலவர், தன் கருத்திற்கு இசையாராதல் அறிந்த அரசன், அரிய ஒர் அறவுரையினை அவர்க்கு அளித்தான். "அன்பும் அறிவும் உடைய புலவர் பெருமக்களே! யானை வேட்டை மேற்கொண்டு சென்றவன், தான் சென்றவினையைத் தப்பாது முடித்து, யானையோடு வருதலும், யார்க்கும் எளிதாய சிறிய பறவை வேட்டை மேற்கொண்டு சென்றவன், அதில் தோற்றுப் பறவை பெறமாட்டாமல் வறிதே வருதலும் உலகில் உண்டு. ஆகவே எண்ணும் எண்ணமெல்லாம் மிக உயர்ந்த எண்ணமாகக் கொண்ட பெரியோர்க்கு ஆகும் காலம் உண்டாயின், அவர் எண்ணியன எல்லாம் எளிதே கைவரப்பெறுதல் உண்டாம். அத்தகையர், விண்ணுல கடைந்து எண்ணிலா இன்பம் அடைதலும், அவ்விண்ணுலகத்தினும் மேலாம் வீட்டுலகம் அடைந்து, பிறவாப் பெருநிலை அடைதலும் எய்துவர். ஒருவேளை அத்தகைய பேரின்ப நிலையினைப் பெறுதல் இயலாது போயின், உலகுள்ளளவும் அழியாது நிற்கும் உயர்ந்த புகழ் பெறுதல் உறுதி. ஆகவே அறிவுடையார், நல்வினையினை எண்ணியபோதே, எண்ணியாங்கே, விரைந்து செய்வர். அத்தகைய நல்லறிவு நன்கு வாய்க்கப் பெறாதாரே, நல்வினை செய்ய வேண்டுமோ? செய்யும் வினையெல்லாம் நல்லவினையாகவே இருத்தல் வேண்டுமோ? ஒரு சில நல்வினை மட்டும் செய்தால் போதாவோ? செய்யும் நல்வினை, செய்ய நினைத்த, இப்,ோதே செய்து முடித்தல் வேண்டுமோ? சின்னாள் கழித்துச் செய்தல் கூடாதோ?’ என்றெல்லாம் ஐயங் கொண்டு, அவற்றில் தெளிவு பெற மாட்டாது அழிவர். யான், அவர் போலும், தெளிவிலா அறிவுடையேனல்லேன். நல்லதன் நலனும், தீயதன் தீமையும் தெளிய உணர்ந்த யான், வடக்கிருந்து உயிர்விட்டு, வாரா நெறியடையும் நல்வினையினை இன்றே புரியத் துணிந்தேன். ஆகவே புலவர்காள்! அதற்கு ஆவன புரிவீராக!” என அறவுரை கூறி வேண்டி நின்றான்.

அரசன் அறிவித்த அறவுரையினைப் புலவர்களும் அறிவர். ஆதலின், வடக்கிருக்கத் துணிந்த வேந்தனைத் தடை செய்யாது, அவனோடு தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர். ஆனால், அவருள் பொத்தியார்தம் அருமை மனைவியார், அக் காலை மகப்பெறும் நிலையில் உள்ளார் என அறிந்த அரசன், அந்நிலையில் அவர் அவளுக்குத் துணையாக இருப்பதை விடுத்து, வடக்கிருந்து உயிர் விடுதல் அறமாகாது என உணர்ந்து, அவரை மட்டும், அது கழிந்து வந்து வடக்கிருக்குமாறு வேண்டிக் கொண்டான். உடனே அவர் நீங்கவுள்ள அனைவர்க்கும், காவிரியாற்றின் இடையே, ஆற்றிடைக் குறையொன்றில், வடக்கிருத்தற்காம் இடம் வகுப்பாராயினர்.

அந்நிலையில், ஆங்கு இடம் அமைக்கும் பணி மேற்கொண்டிருந்தார்.பால், கோப்பெருஞ் சோழன் சென்று, இடம் அமைக்குங்கால், தனக்கு அமைக்கும் இடத்தை அடுத்துத் தன் ஆருயிர் நண்பராய பிசிராந்தையார்க்கும் இடம் அமைக்குமாறு வேண்டினன். ஆங்கிருந்த புலவர்கள் அது கேட்டு, “வேந்தே ! ஆந்தையார், உன் புகழும், பெயரும் அறிந்தவரேயன்றி, உன்னைக் கண்டு பழகியவர் அல்லர். மேலும், நீ அவரை நண்பராகக் கொண்டதும், அவர் நின்னை நண்பராகக் கொண்டதும், எத்தனையோ ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதுவரை ஒரு முறையேனும் உன்னைக் காண வந்தாரல்லர். மேலும் அவர் உள்ள இடமோ பாண்டிய நாட்டில், நனிமிகச் சேய்மைக்கண்ணது. இந்நிலையில் நின்னிலை அறிந்து இப்போது வருவதோ, வந்து வடக்கிருந்து உயிர் விடுவதோ இயலுவதன்று. ஆகவே, அவர்க்கென ஒர் இடம் வகுத்தல் வேண்டுவதில்லை,” என்றனர்.

புலவர் கூறுவன கேட்ட கோப்பெருஞ் சோழன், “அறிவுடைப் பெருமக்களே! பிசிராந்தையார் மிகச் சேய்மைக்கண் உள்ளார் என்பது உண்மையே. என்றாலும் அவர் வருவர். இன்று வரை ஒருமுறையும் வந்திலர் என்பதும் உண்மையே. என்றாலும் இப்போது வருவர். துன்பம் நேர்ந்த காலத்து வாராது இருந்தனர் என்ற பழிச்சொல் கேட்க அவர் செவி நாணும். யான் அரசனாய் ஆண்டிருந்த அக்காலை வாராத அவர், அரசிழந்து, உயிர் துறக்கத் துணிந்து நிற்கும் இன்று வாராதிரார்; உறுதியாக வருவர்; ஆகவே, வருவாரா, வரினும் இப்போது வருவாரா என்ற ஐயம் உங்கட்கு வேண்டாம். அவர்க்கும் ஒர் இடம் அமைத்து வையுங்கள்,” என்றான். கோப்பெருஞ்சோழன் கூறியவாறே, ஆந்தையார்க்கும் ஒர் இடம் அமைத்து விட்டு, அனைவரும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கினர்.

தன் ஆருயிர் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு உற்றது அறிந்தார் ஆந்தையார் உறையூருக்கு ஒடோடி வந்தார். ஆனால் அந்தோ! அவர் வருவதற்கு முன்னரே அரசன் வடக்கிருந்து நோற்றலை மேற்கொண்டது அறிந்து வருந்தினார். வருந்தி என்ன பயன்! தாமும் அவனோடு வடக்கிருக்கத்துணிந்தார். அரசன் கருத்தும் அஃதே ஆதல் அறிந்து மகிழ்ந்தார். அவன் ஒதுக்கிய இடத்தே இருந்து உயிர்விட்டார். “வருவார்” என்று கூறிய வேந்தன் சொல் வன்மையினையும், அவன் சொல் பழுதாகாவண்ணம் வந்து வடக்கிருந்த புலவர் பேரன்பினையும் வியந்து வியந்து பாராட்டினர் மக்கள்.

கோப்பெருஞ் சோழன் தந்தை யாரோ? பிசிராந்தையார் தந்தை யாரோ? அவன் தாய் யாரோ? அவர் தாய் யாரோ? அவன் பிறந்த - இடமோ சோழ நாடு; அவர் பிறந்த இடமோ பாண்டிய நாடு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவர் அல்லர்; ஒருவரோ டொருவர் பழகினாரல்லர்; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டன; அவ்வளவே. இந்நிலையில் இருவர் உயிரும் ஒன்று கலக்கும் உயரிய நண்பராகிவிட்டனர். இதுவன்றோ உண்மை நட்பு! இவ்வாறு உயர்ந்த உண்மை நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய வேந்தன் உரைத்த விழுமிய அறத்தின் வழிச்சென்று வாழ்வு பெறுவோமாக!


8

நல்லுருத்திரன்



சோழர் குடியிற் பிறந்து, செந்தமிழ் வளர்த்த அரசர்களுள் நல்லுருத்திரனும் ஒருவன். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றிப் புகழப்படும் கலித்தொகைக்கண், முல்லைத் திணை குறித்த பாக்கள் பதினேழு பாடிய புலவன், நம் நல்லுருத்திரன். அதில், காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்து மக்களாகிய ஆயர்களின் அகவாழ்க்கையினை அழகுறப் பாடிப் பாராட்டியுள்ளான்.

ஆயர்கள் ஆடு, மாடு, எருமை முதலாயின காத்தல், வரகு போன்ற புன்செய்ப் பொருள்களைச் செய்தல் ஆய தொழில்களை மேற்கொள்வர். ஆயர்கள் தம் வாழ்க்கையினை வகுத்துரைப்பார்போல், அவ்வாயர் மகளிர் தம் கற்பு மாண்பினைக் காவியப் பொருளாக்கிப் பாடுவதே முல்லைத் திணையாம். முல்லைத் திணையைப் பாடிய உருத்திரன் மரம் பல செறிந்த முல்லை நிலக் காட்சியைக் காட்டுகின்றான். தந்தை நிரை மேய்ப்பான்; தாய் தினை கொய்வாள்; அண்ணன் பயிர் செய்வான்; மகள் நிரை மேய்க்கும் தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு செல்வாள்; புனத்துள மகனுக்கு உணவு கொண்டு செல்வாள்; தினை அரிதாள் மேயும் கன்றும் காப்பாள் என்று அவ்வாயர் மேற்கொள்ளும் தொழில்களை அழகு படக் கூறியுள்ளான்.

ஆயர் மகளிரின் கற்பு நெறியின் திறம் வியந்து, அவர் கற்பு நிற்க, அவ்வாயர் மேற்கொள்ளும் ஏறு தழுவற் பெரு விழாவினை விரிவாகக் கூறியுள்ளான். ஏறு தழுவல் ஆயர் குலத்திற்கே உரிய ஒரு விழா. ஆயர் ஆடு, மாடு, எருமைகளோடு வாழ்பவர். இவற்றுள் ஆணேறு மிகவும் ஆற்றலுடையது. ஆனேற்றை அடக்கி ஆள்தல் அரியதொரு செயலாகும். அதனால் உயிர் துறந்தாரும் உளர். ஆகவே மகளைப் பெற்ற ஆயன், எத்துணைக் கொடிய காளையையும் அடக்கியாளும் ஆற்றல் தன் மகளை மணப்போனுக்கு உண்டா என அறிந்தே மணம் செய்து தருவான். அம் மணமகனைத் தேர்ந்தெடுக்கும் விழாவே ஏறு தழுவல் விழாவாகும். நல்லுருத்திரன் பாடிய கலிப்பாக்கள் ஏறு தழுவலை நன்கு விளக்குகின்றன.

நல்லுருத்திரன், நாட்டு மக்கட்கு அளித்த நல்ல அறவுரை ஒன்று உளது. “ஊக்கம், உயர்வே உள்ளள் ஆகிய விழுமிய குணங்கட்கு நிலைக்களமாய் நின்றவன் நல்லுருத்திரன்; அவன் உயர்ந்தோர் போற்றும் உரன் மிகு உள்ளம் உடையான்!” என்ற உண்மையினை உணர்த்தி நிற்கும் உயர்வுடையது.

மக்கள், ஒருவரோடொருவர் கூடி வாழும் இயல்புடையவர். பழக்கத்தின் விளைவால், ஒருவர் பால் காணலாம் ஒழுக்கத்தினைத் தாமும் மேற்கொள்ளும் இயல்புடையவர். மக்கள் அனைவரும் ஒத்த பண்புடையவர் அல்லர், நற்பண்பு நிறைந்த நல்லோரை ஒரு சிலராகவும், தீயொழுக்கம் மிக்க தீயோரை மிகப் பலராகவும் கொண்டு இயங்குவதே உலகின் இயற்கை நல்லோரும், தீயோரும் கலந்துறையும் உலகில், தனித்து வாழ இயலாது, கூடி வாழ வேண்டியவராய மக்கள், மிகவும் விழிப்புடையராதல் வேண்டும். நல்லோர் கூட்டுறவால் தீயோர் நல்லவராதல் அரிது; ஆனால் தீயோர் கூட்டுறவால் நல்லோர் தீயராதல் எளிது. ஆகவே, ஒருவரை நண்பராக மேற்கொள்வதன் முன், அவர் தம் உண்மை இயல்புகளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல் வேண்டும். நண்பன் ஒருவனை நாடிச் செல்லும் ஒருவனுக்கு, நண்பனாகத் தேர்ந்தெடுக்கத் தக்கவன் யாவன் தகாதவன் யாவன்? என்பது குறித்து நல்லுருத்திரன் கூறும் நல்லுரை அரிய பெரிய அறவுரையாகும்.

“உழவர்கள், நிலத்தை உழுது பயிர் செய்ய, நெல் விளைந்து முற்றிக் கதிர் வளைந்து நிற்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தும், அவ்வுழவர் அறியாவண்ணம், தன் வளையினின்றும் இராக்காலத்தே வெளிப் போந்து, அக்கதிர்களைச் சிறுகச் சிறுகக் கடித்துக்கொண்டுபோய் வளையினுள்ளே சேர்த்துவைக்கும் இயல்புடையது எலி. தன்னை வருத்தும் பெரும் பசியைப் போக்கிக் கொள்வான் வேண்டிக் கொழுத்த காட்டுப் பன்றி யொன்றை எதிர்த்துத் தாக்க, அது தன் இடப் பக்கத்தே வீழ்ந்து, இறந்தது கண்டு, இடப்பக்கம் வீழ்ந்ததனை உண்ணாத உறுதி, உள்ளத்தை உரன் செய்யப் பசி தன் வயிற்றைக் கொடுமை செய்யவும், அதைப் பொருட்படுத்தாது, வீழ்ந்த பன்றியை உண்ணாதே விட்டுச் சென்று, மறுநாள் தன்முழையினின்றும் வெளிப்பட்டுப் பெரிய ஆண் யானை ஒன்றை எதிர்த்துத் தாக்கி, அதை வலப்பக்கத்தே வீழுமாறு வீழ்த்தி உண்டு, தன் பசி போக்கும் பேராண்மை யுடையது புலி.

“உலகில் வாழும் மக்களிலும் எலிபோல இழிவுள்ளம் உற்றாரும், புலிபோலப் பேருள்ளம் பெற்றாரும், ஆகிய இருவகையினர் உளர். எலி யொத்த இயல்புடையார், தம் தோள்வலியால் வாழ எண்ணாது, அதன் வண்மையில் நம்பிக்கையற்றுப் பிறர் பெரும் பாடுபட்டுச் சேர்த்து வைக்கும் பொருளை அவர் அறியாவாறு சிறிது சிறிதாகக் களவாடிக் கொண்டுபோய், அதையும் தம் வயிறார உண்டு வாழ எண்ணாது, உண்ணாதே சேர்த்து வைப்பர். புலிநிகர் மாந்தரோ என்றால், தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளையன்றிப் பிறர் தேடி வைத்த பொருளை மனத்தாலும் தீண்டா மாண்புடையராவர். பொருள் தேடும்பொழுதும், தம் புகழ் கெட வரும் செல்வம், அளவிடற்கரியதாம் பெருஞ்செல்வமே யாயினும், அதைப் பொருளென மதியாது, அறநெறி வரும் பொருளையே போற்றும் பெருமைசால் உள்ளமுடைய ராவர். இவ்விருவகை மாந்தருள், எலியனையார், உள்ள உயர்வும், ஊக்கமும் அற்றவர்; ஈட்டிய பொருளை இழக்காமல் காக்கும் ஆற்றலும் அற்றவர். அத்தகையார் பெரும் பொருள் உடையார்போல் தோன்றினும், அவரோடு உறவு கொள்வதை உயர்ந்தோர் மேற்கொள்ளார்; பழியும், பாவமும் பண்ணிச் சேர்த்த பெரும் பொருளினும், பழி, பாவம் அறியா வறுமை வாழ்வே விழுமிய வாழ்வு ஆதலின், புலியன்னார், பெரும் பொருள் இலராயினும், அன்று அன்று வேண்டும் பொருளை அன்று அன்று தேடிப் பெறும் வறுமை வாழ்வினரே யாயினும், ஊக்கமும், உரனும், உயர்ந்த நோக்கமும் உடைய அன்னார் நட்பினையே, அறிவுடையார் நாடுவர். ஆகவே, உலகீர்! எலி யன்னார் இல்லம் புகாது, புலி யன்னார் தொடர்பினைப் போற்றிக் கொள்ளுமின்! உழைக்காது, பிறர் உழைப்பை அவர் அறியாது கவர்ந்து உண்ண எண்ணன்மின்! உள்ளத்தே ஊக்கம் கொள்ளுமின்! பெரும்பழி விடுத்து உறுபுகழ் தேடுமின்!” என அவன் உரைக்கும் அறவுரையினை நாமும் கடைப்பிடித்து, ஊக்கமும், உரனும், உயர்ந்த உள்ளமும் கொண்டு உய்வோமாக!


9

நலங்கிள்ளி



காடழித்து நாடு கண்டவன் கரிகாலன். வாணிகம் வளர்த்து வளங்கொழித்தவனும் அவனே. வாணிகத்தால் வளம் பெற வேண்டுமாயின், கடல் வாணிகத்தில் கருத்துன்ற வேண்டும் எனக் கருதிய கரிகாலன், அது வளர்வதற்கு வழி செய்வான் வேண்டிக், கடற்கரைக்கண் அமைத்த பெருநகரே புகார். கடல் வாணிகத்தால் வளம் பல பெற்ற புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியைக் காத்து இருந்தவன் நலங்கிள்ளி.

நலங்கிள்ளி நாட்டாசை கொண்டவன்; தன் போலும் வேந்தர்கள் தனியரசு செலுத்துவதை அவன் உள்ளம் பொறாது. அவ்வேந்தர்களின் வெண் கொற்றக் குடைகளெல்லாம் தாழ்ந்து பின்னே நிற்கத் தன் குடை ஒன்றே உயர்ந்து முன்னிற்றலை விரும்புபவன். வேந்தர்களின் வெற்றிப் புகழ் விளங்க விடியற்காலையில் முழங்கும் வெண்சங்கு, தன் அரண்மனை ஒன்றில் மட்டுமே முழங்குதல் வேண்டும்; பிற வேந்தர்கள்பால் உள்ள வெண் சங்குகளெல்லாம் முழங்கப் பெறாமல், வறிதே அவர் அரண்மனையின் ஒருபால் கிடத்தல் வேண்டும் என்ற விழைவுடையான்.

அத்தகைய நாட்டாசையும், போர் வேட்கையும் உடைய அவன்பால், அவற்றைக் குறைவற நிறைவேற்றித் தரவல்ல, நனிமிகப் பெரிய நாற்படையும் இருந்தது. நலங்கிள்ளியின் நாற்படைப் பெருமை அதை நேரிற் பார்த்தார்க்கல்லது, பிறர் கூறக் கேட்டார்க்குத் தெரியாது. அப்படை, பகைவர் நாடு நோக்கிச் செல்லுங்கால், ஒரு பனந்தோப்பின் இடையே நுழைந்து செல்ல வேண்டி நேரின், அப்படையின் முற்பகுதியில் செல்வார் பனை நுங்கு உண்டு செல்வர். படை வரிசையின் இடைப் பகுதி ஆண்டு வருங்கால், பனங்காய் முற்றிப் பழமாய் மாறிவிடும். ஆதலின், அவ்விடைப் பகுதியில் வரும் வீரர், பனம்பழம் உண்டு செல்வர். படை வரிசையின் ஈற்றில் நிற்பார் ஆண்டு வருங்கால், பழக்காலம் பழங்காலமாய்க் கழிய, கிழங்குக் காலமாம்; ஆக, படையின் ஈற்றுப் பகுதியில் வருவார் பனங்கிழங்கு உண்டு களிப்பர். நலங்கிள்ளியின் நாற்படை அத்துணைப் பெரியது. அவன் படை பெரிது என்பது மட்டுமன்று; ஆண்மையில், ஆற்றலில், போர் வேட்கையில், அது, அவனிற் குறைபாடு உடையதன்று. பகைவர் நாடு, காடும் மலையும், ஆறும் ஊரும் இடையே கிடக்க, மிக மிகச் சேய்மைக் கண் உளது; அவ்விடம் சென்று சேர்வது எவ்வாறு எனச் சோர்ந்து போகாது, போர் என்றவுடனே உள்ளம் பூரிக்கும் ளைக்கம் உடையது. வெற்றிப் புகழ்பால் வேட்கையும், அதைக் குறைவற நிறைவேற்றும் நாற்படையும் உடைய நலங்கிள்ளி, படைகளோடு வாழும் பாசறை வாழ்வினையே எப்போதும் விரும்புவான்; நகர வாழ்வில் அவன் நாட்டம் செல்வதில்லை. நலங்கிள்ளியின் நாட்டாசையினையும், அவன் படைப் பெருமையினையும் நன்கு அறிந்த பிற அரசர்கள், அவன் எந்நேரத்தில் தம் நாட்டின்மீது படைதொடுத்து விடுவானோ என்ற அச்சத்தால் உறக்கம் அறியாது உறுதுயர் உற்றுக் கிடப்பர்.

பெரும் படையும், பேராண்மையும், போர் வேட்கையும் உடையவனாய் நலங்கிள்ளி நாடாண் டிருந்தான். அக்காலை, உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டின் ஒரு பகுதி, அரசிழந்து விட்டது. அஃதறிந்த நலங்கிள்ளி உறையூர் அரியணை யில் அமரும் ஆர்வம் உடையனாயினான். நலங்கிள்ளி நாடாண்டிருந்த காலத்தே, அச்சோழர் குடியிற் பிறந்த நெடுங்கிள்ளி என்பானொருவன் ஆவூர்க்கோட்டைக்கு உரியோனாய் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். உறையூர், அரசனை இழந்து அல்லல் உறுகிறது என்பதறிந்த அவனும், அதன் ஆட்சித் தலைமையினைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்தான். அஃது அறிந்தான் நலங்கிள்ளி. பகைவன் படை திரட்டிப் பலம் பெறுவதற்கு முன்னர் அவனைப் பாழ் செய்வதே போர் துணுக்கமாம் என உணர்ந்தவன் நலங்கிள்ளி. பகைவரை நெருங்க விடாது, நெடுந் தொல்ைவிலேயே நிறுத்தி அழித்து விடுவதே ஆண்மைக்கு அழகாம் என்பதை அறிந்த அவன், நெடுங்கிள்ளி உறையூர் செல்லாவாறு, அவனை அவன் வாழும் ஆவூர்க் கோட்டையிலேயே அழித்துவிடத் துணிந்தான். அவ்வாறே, பெரும்படை யொன்றும் புகாரினின்றும் புறப்பட்டுச் சென்று, ஆவூர்க் கோட்டையினைத் திடுமென வளைத்துக் கொண்டது. நலங்கிள்ளியின் நினைப்பறியாத நெடுங்கிள்ளி, அவன் படை எதிர்பாரா நிலையில் தன் ஆவூர்க் கோட்டையினை முற்றிக் கொண்டதறிந்து, செய்வதறியாது திகைத்தான்: நலங்கிள்ளியின் நாற்படையினை எதிர்த்து நிற்பது தன் படைக்கு இயலாது என்பதறிந்த அவன், ஆவூர்க் கோட்டையினுள்ளே அடங்கியிருந்தான். உள்ளிருப் பார்க்கு நெடுநாளைக்கு வேண்டும் உணவு முதலாம் இன்றியமையாப் பொருளைப் பெற மாட்டாது நெடுங்கிள்ளி வெளிப்படுவன் என நலங்கிள்ளி எதிர் நோக்கி முற்றியிருந்தான். அவன் எதிர்பார்த்தது எய்தி விட்டது. உள்ளிருப்போர்க்கு ஒன்றும் கிடைத்திலது. உணவும், உண்ணும் நீரும் பெறாது யானைகள். வருந்தின. பால் கிடைக்கப் பெறாது குழந்தைகள் கதறின; மகளிர் மகிழ்ச்சி அற்றனர்; வறுமை வாட்டிற்று; மக்கள் மனம் குன்றினர். இந்நிலையினை அறிந்தார் கோவூர்க் கிழார் என்ற புலவர். அரணுள் புகுந்து அரசனைக் கண்டார். “அரசே! ஆற்றல் இருந்தால் பகைவனை அழித்து வெற்றி கொள்; அதற்கு வாய்ப்பு இல்லையேல், வந்தானுக்கு வழிவிட்டு வெளியேறு; இரண்டும் செய்யாது இங்குள்ளார் வருந்த அடைத்திருத்தல் ஆண்மையோ, அறமோ ஆகாது!” என்று அறவுரை கூறினார். புலவர் நல்லுரை கேட்ட நெடுங்கிள்ளி, அரணைக் கைவிட்டு வெளியேறினான். அழிவு சிறிதும் நேராதே, ஆவூர்க் கோட்டை நலங்கிள்ளியின் உடைமையாயிற்று.

நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையினைக் கை விட்டுச் சென்றானேனும், உறையூர்க் கோட்டைபால் அவன் உள்ளம் கொண்ட வேட்கையினை விட்டானல்லன். உடனே விரைந்து சென்று, வேண்டும் பொருள்களோடு உறையூர்ப் புகுந்து, வாயிற் கதவடைத்துக் கொண்டு உள்ளிருப்பானாயினன். நலங்கிள்ளி, உறையூர் அரியணைபால் சென்ற உள்ளமுடையேனேயன்றி ஆவூர்க் கோட்டைபால் ஆசையுடையானல்லன். அதனால், ஆவூர்க் கோட் டையை விடுத்து அடங்கியிருப்பான்போல நடந்து, உறையூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்ட நெடுங்கிள்ளியின் செயல் கண்டு கடுஞ்சினம் கொண்டான். உடனே, பெரும் படையோடு, ஆவூர் விட்டெழுந்து, உறையூர் அடைந்து அரணைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் மீண்டும் பகைத்தெழுந்ததைக் கோவூர்க் கிழார் கண்டார். ஆவூர்ப் போரைத் தடுத்து அழிவு நிகழாவண்ணம் காத்து வெற்றி பெற்ற அவர், உறையூர்ப் போரையும் ஒழித்து உயர்வு பெற எண்ணினார். உறையூருக்கு விரைந்து சென்றார். கோட்டையை முற்றி நிற்கும் நலங்கிள்ளியைக் கண்டார். “நலங்கிள்ளி! நீ வளைத்து நிற்கும் இவ்வரணுள் வாழ்வோனைச் சென்று கண்டேன். அவன் கழுத்தில் சேரனுக்குரிய பனை மாலையோ, பாண்டியனுக்குரிய வேம்பு மாலையோ இருக்கக் கண்டிலேன்; ஆத்தி மாலையினையே அவன் கழுத்தில் கண்டேன். அவன் அகத்திருக்க, வளைத்து நிற்கும் நின்னைக் கண்டேன்; நின் கழுத்தில் இருக்கும் மாலை, உள்ளிருக்கும் சோழனின் பகைவருக்குரிய பனை மாலையாகவோ, வேம்பு மாலையாகவோ இருக்கும் என எதிர் நோக்கினேன். ஆனால், நின் கழுத்திலும் அவ்வாத்தி மாலையே இருக்கக் காண்கின்றேன். இதனால் நீங்கள் இருவருமே சோழர் குடியில் வந்தவர் என்பது விளங்கிற்று. ஆக, இப்போது ஒரு குடியிற் பிறந்தார்களே பகை கொண்டுள்ளீர்கள். இஃது உங்கட்குப் பெரும்பழியாம். மேலும் இருவர் போரிடின், இருவரும் வெற்றி கோடல் இயலாது. ஒருவர் வெற்றி பெறின் பிறிதொருவர் தோற்றல் வேண்டும். உங்கள் இருவரில் யார் தோற்பினும், தோற்றவன் சோழர் குடியிற் பிறந்தவனே! தோற்றது சோழர் குடியே! தோற்றது சோழர் குடி என்ற சொல் உங்கட்குப் பழியும், உங்கள் பகைவர்க்குப் பெருமிதமும் தருமன்றோ? பிறந்த குடிக்குப் பழி தேடித் தருவதோ உங்கள் பிறவிக் கடன்? ஆகவே நலங்கிள்ளி! உறையூர்க் கோட்டைபால் கொண்ட உன் ஆசையை விட்டு அகல்வாயாக!” என்று எத்துணையோ எடுத்துக் கூறினார்.

ஆனால், அந்தோ! இவர் உரைத்த அறவுரை அதற்குரிய பயனைப் பெறாது போயிற்று. நலங்கிள்ளி புலவர் தம் பொருள் பொதிந்த அறவுரைகளைப் பொன்னே போல் போற்றும் இயல்புடையனே யாயினும், உறையூர் அரசுரிமையினை அடைவதில் அவன் கொண்டிருந்த ஆர்வத்தால், புலவர் சொல்லை. ஏற்க மறுத்து விட்டான். உறையூர்க் கோட்டையை விடாது முற்றி, உள்ளிருப்போனை வென்று அழித்து விட்டு உறையூர் அரியணையில் அமர்ந்து உள்ளம் அடங்கினான்.

இவ்வாறு பேரரசுகள் எல்லாம் பணிந்து திறைதரப் பாராண்ட பெருவேந்தனாய நலங்கிள்ளி, பெற்ற பேரரசைப் போற்றிக் காக்க வல்ல ஊக்கமும் உரனும், அப்பேரரசில் வாழ்வார் அனைவரும், “அறநெறி பிறழா அன்புடையான் எம் அரசன்!” எனப் போற்றிப் புகழ நாடாளும் நன்னெறியும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நல்லோனாவன். நாட்டவர் போற்ற நெடிது ஆண்ட அவன், அவ்வாறு, ஆளற்காம் நல்லறிவும் நன்கு வாய்க்கப் பெற்றிருந்தான். அத்தகைய நல்லறிவினைத் தான் பெற்றிருந்ததோடு, அதை நாடாளும் உரிமை பெற்றார் ஒவ்வொருவரும் உணர்ந்து உயர்வடைதல் வேண்டும் எனும் உள்ளமுடையனாய்த் தான் பெற்ற அந்நல்லறிவினை நயமிக்க பாட்டொன்றில் அமைத்து அளித்துள்ளான்.

உழைத்துப் பொருள் தேடி உண்ண எண்ணாது, தலைமுறை தலைமுறையாகத் தன் முன்னோர் ஈட்டி வைத்த பொருளை இருந்து உண்ண ஒருவன் எண்ணு வானாயின், அவ்வாறு உண்டல் நீண்ட நாள் நிகழாது. நீண்ட நாள் உண்டல் நிகழாது என்பது மட்டுமன்று; இறுதியில் உள்ளது அற்று, ஊறுபல உற்று, உயிர்க் கேடுறுவது உறுதி உழைக்காது உண்டு வந்தமையால் உள்ளது குறைந்து போம். உழைத்து அறியாதவன் ஆதலாலும், உண்டு பழகியவன் ஆதலாலும், உள்ளது அற்ற விடத்துப், பிறர் உழைப்பைப் பறித்துத் தின்னத் துணிவான். அதனால், அவன் உயிர் வாழ்விற்கே ஊறு நேர்த்துவிடும்.

அத்தகையான் ஒருவன், தன் முன்னோர் போற்றிக் காத்து வந்த பேரரசை அடைவானாயின், வருவாய் வளர்தற்காம் வழிவகைகளைக் காண எண்ணாது, வாழும் மக்களிடம் வரி பல வாங்கி வாழ எண்ணுவான். வரி மேல் வரியென வழங்கி வழங்கி, மேலும் வழங்க மாட்டாது, வறுமையுற்ற மக்களை வாட்டி, அவர்பால் உள்ளன பெற்று உண்ணத் துணிவான். அந்நிலையில், செய்வதறியாது சினங் கொண்ட மக்கள் அவன் ஆட்சியையே எதிர்த்து எழுவர். மக்கள் எழுச்சியை அடக்கமாட்டாது அடங்கி, அம்மக்கள் மன்றத்தில் மண்டியிட்டு மடிவான்.

உழைத்துப் பெற்ற உணவன்றிப் பிற உண்டறியா உரவோன் ஒருவன், பிறரை எதிர்நோக்கி வாழ்வதோ, எதிர் நோக்கியது எய்தாது போக, இழிவு தரும் வழிகளால் வாழ எண்ணுவதோ, அதனால் இடர் பல உறுவதோ இலன், அதற்கு மாறாக ஓயாத உழைப்பால் உறு பொருள் பல சேர்த்து, உயர்ந்தே விளங்குவான். அவனுக்கு வாழ்வு ஒரு பாரமாகத் தோன்றுவது மில்லை.

அத்தகையன்பால், ஒரு நாட்டின் அரசுரிமை செல்லின், அவன் உள்ளது போதும் என அடங்கி யிராது, தன்னாட்டு வளம் வளர்தற்காம் வழிபல வகுப்பான். ஆதலின், அவன் நாடு வளம் அறுவதோ, அதனால் மக்கள் வாடுவதோ, வாடிய மக்கள் மன்னனை எதிர்த்து எழுவதோ நிகழா. மாறாக, நாட்டு வளம் வளர்தலின், நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமக்கு அந்நல்வாழ்வு நல்கும் அரசன் நெடிது நாள் ஆள வாழ்த்துவர். அத்தகையானுக்கு அரசியல் ஒரு பாரமாகத் தோன்றாது. கோடையால் உலர்ந்து ஒடிந்து வீழ்ந்த சிறு சுள்ளியைப் போல் நனிமிக எளிமை யுடையதாம்.

ஆகவே, பிறர் உழைப்பில் பெருவாழ்வு வாழ எண்ணும் பேதையோன்பால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஒப்புவிக்காது, உழைத்து உறுபயன் காணும் உரவோனிடத்திலேயே ஒப்புவித்தல் வேண்டும். இவ்வாறு நலங்கிள்ளி நாடாளும் திறம் குறித்துச் சிறந்த அறவுரை நல்கினான்.

நலங்கிள்ளி கொடைத் திறமும், படைத் திறமும் உடையவன். அவன் பாடிய புறப்பாடலொன்று அவன் உள்ளத்தின் உயர்வையும், வீரத்தையும், புலமையின் சிறப்பையும் நன்குணர்த்துகின்றது.

“என் அரசைப் பெற விரும்பும் என் பகையரசன் மெல்ல வந்து, என் அடி பணிந்து, நின் அரசுரிமை யினைத் தந்தருள்க! என்று இரந்து நிற்பானாயின், அவற்கு இவ்வரசையே யன்றி என் உயிரையும் தருவேன். அவன் தூங்கும் புலியைக் காலால் இடறிய குருடனைப் போல, ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத் தலைவர் முதலாயினோரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்வானாயின், அவன் அழிந்து போதல் உறுதி. அன்னோன் யானையின் காலால் மிதியுண்ட மூங்கில் முனையைப் போல் அழியுமாறு அவன் நாடு சென்று வெற்றி கொள்வேன்!” என்று வீரவுரை கூறியிருக்கின்றான்.


10

நெடுஞ்செழியன்



பாண்டிய அரசர்களுள், நெடுஞ்செழியன் என்ற பெயருடையார் பலராவர். நம்பி நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர்களை நோக்குங்கள். அறம் உரைத்த நம் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என அழைக்கப் பெற்றுள்ளான்.

வெற்றிவேற் செழியன் என்ற பெயர் பூண்ட மகன் கொற்கையில் இருந்து துணைபுரிய, கோப்பெருந்தேவி யார் எனும் பெயருடையளாய, மாண்புமிக்க மனைவி யார் உடனிருக்க, நெடுஞ்செழியன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு, நாடாண்டிருந்தான். நெடுஞ்செழியன் நீதி தவறா நெறியுடையான்; அறம் தவறாவாறு ஆட்சிபுரியும் அரசியல் முறை அறிந்தவன். அவன் நாட்டில், அந்தணர் வீதிகளில் எழும் அருமறை ஒலி கேட்குமே யல்லது, வலியரால் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், வறுமையால் வாடிக் குறை கூற வந்தாரும், தாம் வந்ததை வேந்தனுக்கு அறிவிப்பான் வேண்டியடிக்கும் மணியொலி என்றுமே கேளாது. முறை கெடாவாறும், குறை நேராவாறும் நின்று காக்கும் நல்லாட்சி, நெடுஞ்செழியன் நாட்டாட்சி. நெடுஞ்செழியன் ஆட்சி நல்லாட்சியாதலின், அவன் மக்கள் நலம் கருதும் மன்னவனாதலின், அவனைப் பழிதுாற்றும் அவன் குடிகளையோ, அவர் அவனைத் தூற்றும் பழியுரைகளையோ காணலும், கேட்டலும் இயலா. அவன் ஆற்றல் கண்டு அடங்கிப் பணியாது, பகைத்துப் போரிட வந்தார் நாடுகளுள் புகுந்து, அவரை வென்று அழிக்க, அதுகண்டு, அப்பகைவர் தூற்றிக் கூறும் பழிவுரைகளையே கேட்டல் கூடும். இவ்வாறு அறமும் ஆற்றலும் விளங்க நாடாண் டிருந்தான் நெடுஞ்செழியன்.

ஒருநாள் அரசவையுள், அவன் அரியணைமீது அரசமா தேவியோடு அமர்ந்திருந்தான். வழக்கம் போல் நிகழும் கூத்தும், பாட்டும் அன்றும் நடைபெற்றன. அன்று ஆடிய மகளிர் ஆட்டமும், அவர் பாடிய பாட்டும் என்றும் இல்லாச் சிறப்புடையவாய் அமைந்து விட்டன. அதனால், அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருந்த மன்னன் தன் அறிவு மயங்கினான். அரசன் நிலையை அறிந்தாள் அரசமாதேவி. தான் அருகிருப்பவும், அரசன் ஆடல் பாடல்களில் அறிவு மயங்கினான்; ஆகவே, அவன், தன்னைக் காட்டிலும், அவற்றிடத்திலேயே பேரன்புடையான் என எண்ணினாள்; அந்நிலையே அவளுக்கு ஆறாச் சினம் பிறந்தது; அரசனை விடுத்து, அரசவை நீங்கித் தன் அரண்மனை நோக்கிச் சென்று விட்டாள். நெடுஞ்செழியன் அஃதறிந்தான். அவனோ மனைவியைப் பிரிந்தறியா மாண்புடையான். அவனால் அரசமாதேவியின் பிரிவைப் பொறுக்க முடியாது போயிற்று. மேலும், அவள் வறிதே பிரியாது, பெருஞ்சினம் கொண்டு பிரிந்து போனாள். ஆகவே அவள் சினம் போக்கி, அவள் அன்பைப் பெறும் விழைவோடு அவள் அரண்மனை நோக்கி விரைந்து சென்றான்.

அரசன் அரசியாரின் அரண்மனை வாயிலுட் புகும் அந்நேரத்தில், ஆங்கு, அரசர்க்கு அணிகலன் ஆக்கித் தரும் பொற்கொல்லன் வந்து வீழ்ந்து வணங்கினான். அரசன் வினவா முன்னரே, “அரசே! நம் தேவியாரின் காற்சிலம்பைக் களவாடிய கள்வன், சிலம்போடு என் இல்லின்கண் உள்ளான். அதை உணர்த்தவே ஓடோடி வந்துள்ளேன்,” என உரைத்தான். அரசியாரின் ஊடலைத் தீர்க்க விரும்பும் ஆர்வத்தோடு செல்லும் அரசன் அவ்வார்வ மிகுதியாலும், ஊடல் தீர்க்கச் செல்லும் தனக்குக் காணாமற் போய்க் கிடைக்கும் அவள் காற்சிலம்பு நல்ல துணையாம் என எண்ணிய எண்ணத்தாலும், அறிவு மயங்கி, ஊர்க் காவலரை அழைத்து, “இவன் கூறும் கள்வன் கையில் காற்சிலம்பு இருக்குமேல், அவனைக் கொன்று, அச் சிலம்பினைக் கொணர்க” எனப் பணித்து விட்டான்.

காவலரைக் கூட்டிச் சென்ற பொற்கொல்லன், தன் மனையில் தங்கியிருந்த கோவலனை அவர்க்குக் காட்டி, அவனே கள்வன் என்று கூறி, அவனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு செல்லுமாறு செய்துவிட்டான். கோவலன் கொலையுண்டான்; கண்ணகியின் காற்சிலம்பு மன்னவன் மனைவியால் சென்று விட்டது. இடையே நடந்தன அறியாத நெடுஞ்செழியன் அரண்மனையில் மனைவியின் ஊடல் போக்கி உவந்திருந்தான்.

கணவனைக் கள்வன் எனக் கூறிக் கொலை செய்து விட்டனர் என்பதைக் கண்ணகி அறிந்தாள்; கண்ணிர் விட்டுக் கலங்கினாள்; கடுந்துயர் உற்றாள்; ஓடினாள், ஒடிக் கணவனைக் கண்டாள்; கண்ட அக்கணமே கணவன் கள்வனல்லன் என்பதை நாடறியச் செய்ய வேண்டிய கடமை காத்திருப்பது உணர்ந்தாள். உடனே அரசன் கோயிலை விரைந்து அடைந்தாள், வாயிற்காவலன் வழியே, வருகையினை அவனுக்கு உணர்த்தினாள்.

யார் எந்நேரத்தில் வரினும், அவரை வரவேற்று அவர் குறைகேட்டு முறை செய்யும் கோலுடையனாய நெடுஞ்செழியன், கண்ண்கியை அழைத்து வருமாறு காவலனைப் பணித்தான். எஞ்சிய ஒற்றைச் சிலம்பு கையிற் கிடக்க, கண்களில் நீர் ஒழுக வந்து நின்றாள் கண்ணகி. கண்ணிர் ஒழுக நின்ற கண்ணகியைக் கண்டவுடனே கலங்கினான் காவலன். அவன் கண்களுக்கு, அவள் கண்ணிரே முதற்கண் தோன்றிற்று. ஆகவே, “நீ யார்? யாது நின் குறை?” என வினவினான். அது கேட்ட கண்ணகி, “காவல! புகார், யான் பிறந்த ஊர். என் காற்சிலம்பை விற்றற் பொருட்டு வந்து, நின்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயர்” என உரைத்தாள். கோவலன் கள்வனே; அவன்பால் இருந்தது, அரசியார் காற்சிலம்பே என்பதை உண்மையாக நம்பிய நெடுஞ்செழியன், “பெண்ணே! களவிற்குக் கொலையே தண்டம் என நீதி நூல்கள் நவில்கின்றன. ஆதலின் கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. ஆகவே கவல்வது விட்டுச் செல்க,” என்றான். கண்ணகி அதனைக் கேட்டாள்: “அரசே, என் கணவனா கள்வன்? என் காற்சிலம்பை விற்ற என் கணவனா கள்வன்? அவன் விற்றது என் காற்சிலம்பன்றோ? அச் சிலம்பினுள் உள்ளது மாணிக்கப் பரலன்றோ? ஏதும் அறியாது கூறுவது என்னையோ?” என்று வெகுண்டுரைத்தாள். அதுகேட்ட அரசன், “நீ உரைத்தது நன்று. அரசியார் காற்சிலம்பில் உள்ளது முத்துப் பரலே,” என்று கூறிக்கொண்டே, அரசியார் பால் அன்றளித்த அச் சிலம்பினைக் கொணரப் பணித்தான். வந்தது சிலம்பு; வாங்கி உடைத்தாள் கண்ணகி உள்ளிருந்த மாணிக்கப் பரல் மன்னவன் வாயிற் சென்று தெறித்தது.

மணியைக் கண்ட மன்னவன் மதி மருண்டான். “பொன்செய் கொல்லன் புன்சொல் கேட்ட யானே கள்வன். அந்தோ! யானும் ஓர் அரசனோ? அறம் பிறழா ஆட்சியை அழித்து விட்டேனே! தென்னவர் தவறு செய்யார்; பாண்டியர் பிழை புரியார் என்ற புகழ்ச்சொல் என்னால் கெட்டுவிட்டதே! இனியும் என் உயிர் வாழ்வதோ! இன்னே நெடுக என் உயிர்!” என்றான். அங்ங்னமே அரசன் மயங்கி வீழ்ந்தான்; மறைந்தது அவன் உயிர் என்னே மன்னன் மாண்பு! பாண்டியர் செங்கோல் பிழைபட்டது என்ற பழிச்சொல், பகைவர் செவிகளுள் சென்று புகாமுன்னரே, வளைந்த செங்கோலை, வீழ்ந்து உயிர்விட்டு நிமிர்த்திய நெடுஞ்செழியன் பெருமையே பெருமை! அம்மட்டோ மன்னன் மாண்டான் என்பதை அறிந்த மாதேவியாரும், கணவன் இறக்க உயிர் வாழேன் எனும் கருத்துடையராய், அரசன் வீழ்ந்த அவ்வரியணை மீதே தாமும் வீழ்ந்து உயிர் துறந்தார். என்னே கணவன் மனைவியர்தம் காதல் வாழ்வு: நெடுஞ்செழியன் நெறி தவறான்; நெறிதவறின் உயிர் வாழான். இவ்வாறு, தன் அறியாமையால் அழிந்த அறத்தினைத் தன் உயிர் கொடுத்து உயிர்ப்பிக்கும் உரவோனாதல் அறிந்தன்றோ, அவன் பகை வேந்தனாய சேரன் செங்குட்டுவன்,

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”



எனக் கூறிச் சிறப்பித்தான்!

உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட உயர்ந் தோனாய நெடுஞ்செழியன், இறவாது நாடாண்டிருந்த காலத்தே நாட்டு மக்கட்கு நல்கிய நல்லுரை, நாவாரப் பாராட்டும் பெருமை வாய்ந்தது.

ஒரு நாடு நல்லாட்சி பெற்ற நாடாய், நனி சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாடு, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலரைத் தன்பால் கொண்டிருத்தல் வேண்டும். நாட்டில் சான்றோர். பலர் தோன்ற வேண்டுமாயின், கல்வியில் நாட்டம் உடையார் மிகப் பலராதல் வேண்டும்; அதற்குக் கல்வியின் சிறப்பும், கல்லாமையின் இழிவும் அம்மக்கள் உள்ளத்தே ஊன்றிப் பதியுமாறு எடுத்துக் கூறும் தொண்டு எங்கும், எப்பொழுதும் நடைபெற்ற வண்ணம் இருத்தல் வேண்டும். இந்த உண்மையினை உணர்ந்தவன் நெடுஞ்செழியன். அதனாலன்றோ, கற்றார் பெறும் பெரும் புகழ் இது, கல்லார் பெறும் பெரும்பழி இது, “கற்க கசடறக் கற்பவை, என்ற பொருள் நிறைந்த பொன்னுரையினைப் புகட்டும் அவ்வறப் பணியினைத் தானும் மேற்கொண்டான்.

“பெற்றெடுத்த மக்கள் அனைவரையும் ஒத்த அன்பே காட்டி வளர்க்கும் உயர்வுடையவள் தாய். அவ்வியல்புடையளாய தாயும், தன் மக்கள் பெற்றிருக்கும் கல்வியின் ஏற்றத் தாழ்வுகளுக் கேற்ப, நிறையக் கற்ற மகன்யால் பேரன்பு காட்டலும், கல்லாத மகன்பால் அன்பு காட்ட மறுத்தலும் செய்வள்.

“ஒரு குடியிற் பிறந்தார் அனைவரும் ஒத்த சிறப்புடையார் ஆதலின், அவர் அனைவரையும் ஒரு தன்மையராகவே மதித்தல் வேண்டும். ஆனால், அக்குடியில் பிறந்தாருள் மூத்தவன் கல்லாது காலம் கழிக்க, இளையோன் கற்றுத் துறைபோய பெரியோனாயின், அவ்விருவருள் மூத்தோனை ‘வா!’ என வாய் திறந்து அழைக்கவும் நானும் மக்கள், அவன் இளையோன் ஆட்டியாங்கு ஆட முன் வருவர்.

“பிறப்பினாலேயே நால்வகைப் படுவர் மக்கள். எனப் பிரித்து, அவருள் ஒருவர் பிறவியினாலேயே உயர்ந்தவராவர்; ஒருவர் பிறவியினாலேயே தாழ்ந்த வராவர்” எனச் சில அறநூல்கள் கூறுகின்றன. ஆனால், அந்நாற்குலத்துள், உயர்குலத்தில் பிறந்தான் ஒருவன் கல்லாதவனாக, இழிகுலத்தில் பிறந்தான் ஒருவன் கற்று வல்லோனாயின், கற்ற அவ்விழிகுலத்தான் காலின்கீழ்க் கல்லாத மேற்குலத்தான் வீழ்ந்து பணியாற்றக் கடமைப்பட்டவனாவான். ஆகவே, ஒருவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும், அவர் பிறந்த உயர்குலமும், இழிகுலமும் காரணங்களாகா; அவர்தம் கல்வி கல்லாமையே காரணங்களாம். ஆகவே உலகிற் பிறந்தார். ஒவ்வொரு வரும் கற்றல் வேண்டும்.”

“கல்வி காசு கொடுத்து வாங்கும் பொருளன்று. ஒருவர், தம் ஆட்சியைக் காட்டி, ஆணையிட்டு அடிமை கொள்வதும் ஆகாது. கலை பல கற்றுப் பெற்ற அறிவுடையார், தாம் கற்ற கல்வியைப் பிறர்க்கு விரும்பிக் கொடுத்துழியே, அதைப் பெறுதல் பிறர்க்கு இயலும். ஆகவே, பிறர்பால் உள்ள பேரறிவைப் பெற விரும்பும் ஒருவன், அதை விரும்பிக் கொடுக்கும் நல்லுள்ளம் அக்கல்வி உடையார்க்கு இயல்பாகவே உண்டாமாறு ஆவன புரிதல் வேண்டும். உள்ளம் ஆணைக்கு அடங்காது; அச்சம் காட்டி அதை ஆட்கொள்வதும் இயலாது; அன்பிற்கே அஃது அடிபணியும். மனம் இயல்பாகவே மாறுதல் வேண்டும்; அம்மாற்றம், உண்டாகுமாறு அவர் உவப்பன செய்தல் வேண்டும்; அத்தகைய மனமாற்றம், கற்றுவல்ல அப்பெரியார்க்குத் துன்பம் வந்துற்ற வழி, முன்னோடிச் செய்யும் உதவியாலும் அவர்க்குப் பொருட் குறை உண்டாயது அறிந்து, போதும் என அவரே மறுக்கும் அளவு மிக்க பொருள் தருவதாலுமே உண்டாம்.

“உதவுவதாலும் உறுபொருள் கொடுப்பதாலும் மட்டுமே, அம்மாற்றத்தினை உண்டாக்கி விடுதல் இயலாது. மேலும் ஒன்று தேவை. கல்வியுடையார் குலத்தால் கீழோராய், அவர்பால் கற்கவரும் மாணவன் மேற்குலத்தானாக, வந்த மாணவன், ‘யானோ மேற்குலத்து வந்தவன்; பணிந்து நின்று பழகியறியேன்! என்று எண்ணுவானாயினும், கல்வி தரும் ஆசிரியன் வறியனாக, கற்க வரும் மாணவன் மாநிதிச் செல்வ முடையனாக, வந்த மாணவன், யானோ செல்வச் சீமான்! ஆசிரியனோ, அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் வறியன்! அவரைப் பணிந்து நிற்பது பழியாம்!’ என எண்ணுவானாயினும் அத்தகையாரால் வேண்டிய கல்வியை விரும்பியாங்குப் பெறுதல் இயலாது. தன்னைத் தாழ மதிக்கும் மனம் மாணவர் பால் உளது என்பதை ஆசிரியன் அறியின், அவன் உள்ளம் வாடும்; வாடிய அவன் உள்ளத்தினின்றும் விழுமிய கல்வி வாராது. ஆகவே கற்க விரும்புவார், பணிந்து, பின்னின்று கற்றற்குச் சிறிதும் பின்னடைதல் கூடாது.”

இவையனைத்தும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அறிவு பெறும் கல்வியின் சிறப்பும், அதைப் பெறுதற்காம் அரிய வழியும் குறித்துக் கூறிய அறவுரைகளாம். அவன் கூறிய நெறியில் நின்று, ஆசிரியரைப் பணிந்து, கலை பல கற்று, நிலை பல பெற்று உயர்வோமாக!


11

பசும்பூண் பாண்டியன்



தமிழகத்தைக் கடைச் சங்க காலத்தில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னர்களில், பசும்பூண் பாண்டியன் தலைசிறந்தவனாவான். சேரவேந்தர்களுள் செங்குட்டுவனும், சோழ வேந்தர்களுள் திருமாவளவனும் சிறந்து விளங்கியதைப் போலப், பாண்டிய வேந்தர்களுள் பாருளோர் போற்ற வாழ்ந்தவன் பசும்பூண் பாண்டியன். இவன் நெடுஞ்செழியன் எனவும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனவும் அழைக்கப் பெறுவான்.

பசும்பூண் பாண்டியன், நனிமிக இளையனாய் இருக்கும் காலத்திலேயே நாட்டாட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்; அவன் இளமைத் தோற்றம் எழில் பெறக் காட்சி அளிப்பதில் குன்றவில்லை. தாய் தந்தையர், குழவிப் பருவத்தில் அணிவித்த கிண்கிணியினை நீக்கி விட்டு, வீரக்கழல் புனைவதையும் அப்பொழுதுதான் மேற்கொண்டான்; பிறந்த மயிர்களையும் பெருவிழாவும் அண்மையிலேயே கொண்டாடினான்; வளை களைந்து வில்லேந்தும் வன்மையினை அவன் கை பெற்றதும் அப்பொழுது தான்; ஐம்படைத் தாலியை நீக்கிவிட்டு, வேம்பு அணிந்ததும், அவன் ஆட்சிக்கு வந்த அன்றுதான் நிகழ்ந்தது. அரியணை ஏறுவதற்கு முன்னாள்வரையும் அறுசுவை உணவினை உண்டு அறியான்; அந்நாள் வரை அவன் பாலுணவு உண்டே பழகி இருந்தான். அரியணை ஏறும் பசும்பூண் பாண்டியன் அத்துணை இளையனாய் விளங்கினான்.

பாண்டிய நாட்டில் பாராண்டிருப்பவனோ பச்சிளஞ் சிறுவன்; ஆனால், அவன் ஆட்சிக்குட்பட்ட பாண்டி நாடோ, கொற்கைத் துறை அளிக்கும் முத்தும், பொதியமலை அளிக்கும் ஆரம் முதலாம் பல பொருள்களும் நிறைந்து செல்வத்தால் செழித்திருந்தது. அப்பெரும் பொருள்பால் பேராசை கொண்ட பாண்டிய நாட்டுப் பகைவர்கள், பசும்பூண் பாண்டிய னின் இளமைக் காலத்தை வாய்ப்பாகக் கொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுக்கத் துணிந்தனர். அவ்வாறே யானைக்கண் சேய்மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற பெயருடைய சேரன் ஒருவனும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மா, பொருநன் என்பாரும் ஒன்றுகூடி, “நாற்படை உடையோம் நாம்; நல்ல திறமும் உண்டு நம்பால்; பசும்பூண் பாண்டியனோ பாலகன்; ஆகவே அவனை வெல்லுதல் எளிது; வென்றால் பெறும் பொருளோ பெரிது!” என்று எண்ணித் தம் படையொடும் வந்து மதுரைமா நகரை வளைத்துக் கொண்டனர்.

பால் மனம் அறாச் சிறுவனே எனினும், பேராற்றலும், போர் வன்மையும் வாய்க்கப் பெற்ற பசும்பூண் பாண்டியன், பகைவர் செயல்கண்டு கலங்கினானல்லன்; வந்து எதிர்த்த பகைவரைப் பாழ்செய்தல்லது வறிது மீளேன் என வஞ்சினம் உரைத்துப் போருக்கு எழுந்தான்; வழிவழிவந்த தன் குலத்தோர் அணிந்த வேப்பந்தாரை விரும்பி அணிந்தான்; மதுரைமா நகரின் வாயிற்கணுள்ள குளத்தில் மூழ்கி எழுந்தான்; போர்ப்பறை முழங்க, மதமிக்க களிறேபோல், மாற்றார் படை நோக்கிச் சென்றான்; சென்று களம் புகுந்த செழியன் தன் களிற்றுப் படையால், பகைவர் முன்னணியைப் பாழ்செய்தான். தம் முன்னணிப் படையின் தளர்ச்சி கண்ட பகைவர் செய்வதறியாது சிந்தை கலங்கினர். அந்நிலையில் அவர் மீது வின்ரந்து பாய்ந்து பசும்பூண் பாண்டியன் பெரும் போர் செய்தான். பாண்டிப் படைமுன் நிற்கமாட்டாத பகைவர், புறமுதுகு காட்டி ஒடினர்; ஒடும் பகைவரை ஓடி உய்ய விட்டானல்லன்; அவரை அம்மட்டோடு விடின் அவர் ஆணவம் அழியாது; மீண்டும், வேண்டும் படை கொண்டு வரினும் வருவர்; ஆகவே அவர்களை அறவே அழித்தல் வேண்டும் என்று எண்ணினான். உடனே தோற்றோடும் பகைவரை விடாது துரத்திச் சென்று, அப்பகைவருள் ஒருவனாகிய சோழனுக்குரிய ஆலங்கானம் எனும் ஊர் அருகே, அப்படையை அறவே அழித்துச் சேரமான் யானைக்கண் சேய்மாந்தரஞ் சேர லிரும்பொறையைச் சிறைசெய்து, அவ்வேழரசர்களின் முரசுகளையும், குடைகளையும் கைப்பற்றிக் கொண்டு, தன் வெற்றிப் புகழை மக்களும் புலவரும் வியந்து புகழப் பாண்டிய நாடு மீண்டான்.

தன்னை வந்தெதிர்த்த ஏழரசர்களையும், நனி இளையனான காலத்தில், தனியே நின்று வென்ற பசும்பூண் பாண்டியன் பேராண்மை தமிழர்களின் உள்ளத்தில் தனியிடம் பெற்று விட்டது. ஆனதால் அவ்வெற்றிச் சிறப்பினை, அவன் பெயரோடு இணைத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அழைத்துச் சிறப்பித்தார்கள். அவன் காலத்தே வாழ்ந்து, தமிழ் வளர்த்திருந்த நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடிக் கிழார் முதலாம் புலவர் பெருமக்கள், தலையாலங் கானப் போரையும், அப்போரில் பசும்பூண் பாண்டியன் பெற்ற வெற்றிப் புகழையும், தாம் பாடிய பாக்களில் வைத்துப் பாராட்டினார்கள். ஒருவனை ஒருவன் தாக்குவதும், ஒருவனை ஒருவன் வெற்றி கொள்வதும் உலகத்தின் இயல்பு: அஃது எங்கும் நிகழக்கூடியது; அத்தகைய போர் உலகிற்குப் புதியது மன்று; ஆனால், ஏழு பேரரசர்கள் கூடி ஒருவனை எதிர்ப்பதும், அவ்வொருவன், பிறர் எவர் துணையும் வேண்டாமலே விரைந்து சென்று, அவ்வேழரசர் களையும் வென்று அழிப்பதும், அதுவும், தன்னாட்டுட் புகுந்தாரைத் துரத்திச் சென்று அவர் நாட்டில் அழிப்பதும், அம்மம்ம! அதிசயம்! அதிசயம்! இதுபோன்ற நிகழ்ச்சி, இதுவரை நிகழ்ந்ததாக யாம் கண்டதும் இலம்; கேட்டதும் இலம்!” என்று புலவர் இடைக்குன்றுார்க் கிழார் பாடிப் பாராட்டினார்.

தன் நாட்டுள் புகுந்து போரிட வந்த பகைவரைப் பாழ்செய்து வென்ற பசும்பூண் பாண்டியன், அதன் பின்னர்ப் பகைவர் நாடுகளுள் தான் புகுந்து போரிடத் தொடங்கினான். தமிழகம் எங்கும் சென்று, தமிழ் நாட்டின் அரசியல் அமைதியைக் குலைத்து வாழ்ந்து வந்த கொங்கர் எனும் போர்வீரர் கூட்டத்தைக் கொங்கு நாடு சென்று கொன்று திரும்பினான்; சேர நாடு சென்று, வெளிநாட்டு வாணிகச் செல்வத்தால் வளம் சிறந்து விளங்கிய முசிறித் துறையை முற்றி, அதைத் காத்திருந்த சேரனது யானைப் படையை அழித்து மீண்டான்; தன் தலைநகருக்கு அண்மையில் அர்சாண்டிருந்த, நீடூர்க்குரிய எவ்வி எனும் குறுநிலத் தலைவனை வென்று, அவனுக்குரிய முத்துர்க் கூற்றத்தையும், மிழலைக் கூற்றத்தையும் வென்று தனதாக்கிக் கொண்டான்.

வெற்றிமேல் வெற்றி பெற்று விழுப்புகழ் நிறைந்த வேந்தனாய் வாழ்ந்த பசும்பூண் பாண்டியன், தன் பாண்டிப் படையின்பால் பேரன்புடையனாவன். பாண்டியன் பாசறை வாழ்வின் ஒருநாள் நிகழ்ச்சி, அவன் தன் படை வீரர் பால் காட்டும் பரிவு எத்துணைப் பெரிது என்பதை எடுத்துக் காட்ட வல்லது. பகைவர் படையின் முன்னணியில், அப்படையின் பேரரணாய் நின்று காத்த யானைப் படைகளை அழித்து வெற்றி பெற்ற போரில், அவன் படை வீரர் பலர், புண் பெற்று வருந்துகின்றனர் என்பதை ஒருநாள் அறிந்தான்; அறிந்த நேரமோ, இரவில் நடுயாமம்; குளிர்ந்த வாடைக் காற்று வீசிக் கொண்டே இருந்தது; மழைத் துளிகள் விடாது வீழ்ந்து கொண்டே இருந்தன; என்றாலும், அக்காலத்தின் அருமையினை எண்ணினானல்லன், பகற் காலத்தே சென்று காண எண்ணின் அதற்கு அப்போது ஒய்வு கிடைக்காது; போர்க்கள நிகழ்ச்சிக்கே பகற்காலம் பற்றாது; ஆகவே அவரைச் சென்று காண்டது அப்பகற் காலத்தே இயலாது. அதனால் அவரை அந்நள்ளிரவிலேயே சென்று காணத்துணிந்தான். வாட் புண் பட்ட வீரரைக் கண்டு, ஆறுதல் உரைத்து, அன்பு காட்ட வேண்டும் என்ற வேட்கை, காலத்தின் கொடுமையை மறக்கச் செய்தது. பாண்டில் விளக்கேந்திப் பலர் முன்னே செல்ல, மழைநீர் மன்னன் மீது படாவாறு வெண் கொற்றக் குடையேந்திய ஒருவன் பின்னே வர, காற்றால் அலைப்புண்டு கீழே வரும் தன் மேலாடையினை இடக்கையால் பற்றிக்கொண்டு, வலக்கையில் வாளேந்தி, வழியில் வரிசையாக நிற்கும் குதிரைகள் உடலை ஆட்டுவதால், அவற்றின் உடல்மேல் உள்ள மழைநீர் தெறித்துத் தன்மீது விழுவதையும் பொருட்படுத்தாது, சேறு நிறைந்த தெரு வழியே நடந்து சென்று, பசும்பூண் பாண்டியன் பாசறை புகுந்தான். ஆங்கே படைத் தலைவன், முன்னே கடந்து சென்று, புண்பெற்ற போர் வீரர்களையும், அவர்கள் பெற்ற அப்புண்களின் நிலைமையினையும் கூறிக் கொண்டே செல்ல, அவ்வீரர்களுக்கு அன்புரை வழங்கி ஆறுதல் உரைத்துக் கொண்டே செழியன் சென்றான். பேயும் உறங்கும் நடுயாமம் என்றும் பாராது, படை வீரர்டால் பரிவு காட்டும் பசும்புண் பாண்டியனின் போர் நுணுக்க அறிவு பாராட்டற்குரியதாம்.

பேராண்மை கொண்டு பேரரசு செலுத்தும் பசும்பூண் பாண்டியன் நாட்டவர் போற்றும் நல்ல பல பண்புகளும் பெற்றிருந்தான்; பெற்ற அப்பண்புகளைப் பிறர் அறியக் காட்டி அறம் உரைக்கும் அரசனும் ஆவான்; பகைவர் படை பாண்டி நாட்டுத் தலைநகரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அஃது அறிந்த பசும்பூண் பாண்டியன், தன் அரசவையில் உள்ளார் முன்னிலையில், “யாமோ பெரும் படை யுடையோம்; இவனோ இளையன்!” என எண்ணி, என். ஆற்றல் அறியாது வந்து எதிர்த்த அவ்வரசர்களை ஒரு சேர அழித்து, அவர்களையும், அவர்கள் குடைகளையும், முரசுகளையும் கைப்பற்றி மீள்வேன்; அவ்வாறின்றி, வறிதே மீள்வேனாயின், என் ஆட்சியின் கீழ் வாழும் என் நாட்டு மக்கள், ஆட்சியாளரால் அல்லல் பல அடைந்து, ஒடி உய்யும் இடம் அறியாது, கண்ணிர் விட்டுக் கலங்கி நின்று, ‘எங்கள் நாட்டு அரசன் நனிமிகக் கொடியவன்! யாம் என் செய்வோம்? எவ்வாறு உய்வோம்?’ எனச் செயலற்றுப் பழிதுiற்றப் பண்பிலா அரசு செலுத்தும் பழியுடையேனாவேன்! என் அரசவை இருந்து, அறவுரை பல வழங்கி வருவதோடு என்னைப் போற்றிப் புகழும் பண்புடையராய் மாங்குடி மருதன் முதலாம் புலவர் பெருமக்கள் என்னைப் பாடாது விடுமாறு, பழிமிகு செயலுடையனாவேன்! பல பொருள் கொடுத்துப் பாராட்டிப் பேண வேண்டியவர்களாய பாணன், பொருநன், கூத்தன் முதலாம் பரிசிலர்கள், வறுமையால் வாடி, வாயிலில் வந்து நின்று, கண்ணிர் விட்டுக் கலங்கும் காட்சியைக் கண்டும், அவர்க்குப் பொருள் கொடுத்து உதவ மாட்டாமைக்கும் ஏதுவாகிய வறுமை வாழ்வில் வாடுவேனாவேன்!” என வஞ்சினம் உரைத்து, அதன் வழியே, குடிபழி தூற்றக் கோலோம் பல் கூடாது; பழிபல நிறைந்து, புலவர் பாராட்டைப் பெறாது விடுத்தல் பெரும் பேதைமையாம்; வாயில் வந்து இரந்தார்க்கு வழங்கி வாழ்தலே வாழ்வாம் என்பன போலும் அறவுரை வழங்கிய பசும்பூண் பாண்டியன் புகழ் பாரெல்லாம் பரவுக!




12

பூதப் பாண்டியன்



பண்டு தனியரசு செலுத்தி, அண்மையில் திருச்சி மாவட்டத்தோடு இணைந்து போன புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலிய மங்கலம் என்ற ஊரும், அதைச் சூழ உள்ள நாடும் கடைச் சங்க காலத்தில் முறையே ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் பெயர் பெற்றிருந்தன. சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடையே அவ்விரு நாடுகட்கும் எல்லையாக ஓடுவது வெள்ளாறு. அவ்வெள்ளாற்றின் தென்கரை நாடுகள் தென்கோனாடு என அழைக்கப் பெறும். இத் தென்கோனாட்டின் மேற்பால் பகுதியே ஒல்லையூர் நாடு. எனவே ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடுகளில் ஒன்றாகும்.

ஒரு காலத்தில், அவ்வொல்லையூர் நாட்டைப் பாண்டியர்களின் குலப் பகைவராய சோழர் கைப் பற்றிக் கொண்டனர். பாண்டிய நாட்டின் வடவெல்லையில் பகைவர் வந்துவிட்டதால், பாண்டிய நாட்டின் பாதுகாப்பிற்குக் கேடுண்டாகிவிட்டது. அது பொறுக்க மாட்டாது பாண்டி நாட்டார் பெரிதும் கவலைகொண்டிருந்தனர். அக்காலத்தில், அப்பாண்டியர் குடியில் வந்து பிறந்தான் பூதப் பாண்டியன். ஒல்லையூர் நாட்டிழப்பால், தன் நாட்டிற்கு உண்டாம் கேட்டையும் தன் குடிக்கு உண்டாம் பழியையும் உணர்ந்தான்; அந்நாட்டை வென்று கைக்கொண்டு, நாட்டின் புகழையும், குடியின் பெருமையையும் குன்றாமல் காக்கத் துணிந்தான். உடனே பெரும் படையோடு சென்று, அந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டிருந்த சோழனை வென்று துரத்தினான். ஒல்லையூர் நாடு மீண்டும் பாண்டியர்க்கு உரியதாயிற்று. பாண்டியர்க்குப் பன்னெடு நாட்களாக இருந்த பழியைப் போக்கிப் புகழ்விளைத்த பூதப் பாண்டியன் செயலைப் பாண்டி நாட்டார் புகழ்ந்து பாராட்டினர்; அவனுக்கு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். அம்மட்டோ! இழந்த ஒல்லையூர் நாட்டை வென்று தந்த அவ்வெற்றிச் செயலை அவன் பெயரோடு இணைத்து, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என அவனை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

பூதப் பாண்டியன் பெருவீரன் மட்டும் அல்லன்; - தன் போலும் வீரரைப் பாராட்டும் பெருங்குணமும் உடையவனாவான். பாம்பறியும் பாம்பின் கால் என்ப, வீரன் ஒருவன் பெருமையை அவன்போலும் பிறிதொரு வீரனே பாராட்டல் பொருந்தும். அவன் காலத்தில் அவன் ஆட்சிக்குரிய பொதிய மலையில் திதிய்ன் என்பானொரு வீரன் ஆட்சி புரிந்திருந்தான். விற்போர் வல்லவன்; தேர்ப்படை உடையவன்; தன் ஆட்சியின் கீழ் இருந்து வெற்றிக்கெல்லாம் பெருந்துணையாய் வாழ்ந்த அவனைத் தன்னைப் பணிந்து வாழும் ஒரு சிற்றரசன் எனப் பழித்து விடாது, தான் பாடிய பாட்டொன்றில், அவனையும், அவன் வில்லாற்றலை யும், தேர்ப்படையின் பெருமையினையும் பாராட்டிப் புகழ்ந்துள்ளான்! என்னே அவன் பெருந்தகைமை!

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்”



என்றார் வள்ளுவர். பேராண்மையும், பெருஞ்செயலும் உடையவனாய் வாழ்ந்த ஒல்லையூர் தந்தான், புலவரும் பாராட்டும் புலமையும், ஆன்றோரும் வியக்கும் அருங்குணமும் வாய்க்கப் பெற்ற ஒருவரை மனைவி யாகப் பெற்ற மாண்பும் உடையவனாவான். பேராலவாயர் முதலாம் பெரும் புலவர்களும் பாராட்டும் பேறு பெற்றாராய, கற்பு இஃது என்பதை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டினாராய பெருங்கோப் பெண்டே, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் உயிர்த்துணைவியாராவர். மாட்சி நிறைந்த மனைவி யாரைப் பெற்ற பேறுடையான் பூதப்பாண்டியன்.

இவ்வாறு எல்லா வகையாலும் இணையிலாப் புகழ் உடையோனான பூதப் பாண்டியன், அறமல்லன. புரிதலே ஆண்மையாளர்க்கு அழகாம் என்பாரை இருத்தி ஆட்சி புரிதல் அரசர்க்கு அடாது என அரசனுக்கும், நண்பரோடு அன்புகொண்டு வாழ்வதே நல்லோர் நாட்டமாம் என நண்பர்களுக்கும், உயர் குடிப்பிறப்பே உரவோர்க்கு அழகு எனக் குடிப் பிறந்தார்க்கும் உரைத்த அறவுரைகள் அறிந்து பாராட்டற்குரியனவாம்.

சேரனும், சோழனும், பாண்டியர் குடியோடு பகை உடையவர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், ஒரு காலத்தே தாம் பற்றி ஆண்டிருந்த ஒல்லையூர் நாட்டை மீளவும் கைப்பற்றிக் கொண்டதால், சோழர் அவன் மீது பகை கொண்டனர். பூதப் பாண்டியன் படைக்கு ஆற்றாது தோற்ற சோழர், சேரர் துணையை வேண்டினர். இருவர் படையும் ஒன்று கூடின. தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல பெரும்படை உடைய சேரரும், சோழரும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து எழுந்துவிட்டனர். அஃதறிந்த ஒல்லையூர் தந்தானும், அவர்மீது சென்றான். செல்லுமுன் அவன் உரைத்த வஞ்சினம் அவன் பெருமையினை உணர்த்துவதோடு ஒல்லையூர் தந்தான் நல்லறம் உரைக்கும் நல்ல ஆசானுமாவான் என்ற உண்மையினையும் உணர்த்துவதாகும்.

“என்னோடு போரிட வருவோர் யாவரேயா யினும் அவரைப் போர்க்களத்தே அலற அலறத் தாக்கி அழித்துத் தம் தேர்ப்படைகளோடு தாமும் தோற்று ஓடி ஒளியச் செய்வேன்; இஃது உறுதி. அவ்வாறு செய்யேனாயின், என் அரியணையில் என்னோடு அமர்ந்திருக்கும் அழகே உருவென வந்த என் மனைவியை விட்டுப் பிரிந்து, மனையாளைத் துறந்த மாண்பிலார் போல் பழியுடையனாவேன், நடுநிலை தவறாது, காய்தல், உவத்தல் அகற்றி, குறை கூறியும் முறை வேண்டியும் வருவார் கூறுவன கேட்டு, அறம் வழங்கும் என் அறங்கூர் மன்றத்தே, அவ்வியல்பற்றான் ஒருவனை வைத்து, அமைதியைக் குலைத்த கொடுங் கோலன் எனக் குடிவாழ்வார் தூற்றும் பழியுடைய னாவேன்! மாவன், ஆந்தை, அந்துவன்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் போன்ற என் நண்பர்களைஇதுகாறும் என் கண்கள் போல் கருதிக் காத்துவந்த என் நண்பர்களை- இழந்து, நட்பாடல் தேற்றா நயமிலி என நாட்டவர் கூறும் பழியுடையனாவேன். உலகெலாம் போற்ற ஊராளும் உயர்ந்த புகழ் வாய்ந்த பாண்டியர் குடியில் பிறக்கும் பெருமை இழந்து, வாழ்வும் வளமும் வனப்பும் அற்று, வறுமையும், வாட்டமும் விளங்கும் வன்னிலத்தே வறிதே ஆண்டு கிடக்கும் ஆண்மையற்றார் குடியிற் பிறந்து, பிறந்த குடியாலும் பழியுடையனாவேன்!” இவ்வாறு ஒல்லையூர் தந்தான் அன்று வஞ்சினம் உரைத்தான். அக்கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுப் படிப்போர்க்குப் பெருவீரத்தை ஊட்டுகின்றது.


13

மாக்கோதை



தமிழ் மன்னர் தாம் வெற்றி பெற்ற போர்க்களப் பெயர்களைத் தம் பெயர்களோடு இணைத்து வழங்கிப் பெருமை கொண்டாடுவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம். இதனைப் போன்றே அம்மன்னர்கள், இறந்த இடங் களையும் அவர் பெயர்களோடு இணைத்து வழங்கு தலும் உண்டு. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம்.

சேர நாட்டில் கோட்டம்பலம் என்றோர் ஊர் உண்டு. அஃது இப்போது அம்பலப்புழை என வழங்குகிறது. இவ்வூர் பழங்காலச் சிறப்பு வாய்ந்தது. இதையடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெயருடைய ஒர் ஊரும் இருக்கின்றது. மாக்கோதை என்னும் சேர மன்னன் ஒருவன் தன் இறுதிக்காலத்தில் அக்கோட்டம் பலத்தில் வாழ்ந்து உயிர் விட்டான். எனவே, அவனைக் ‘கோட்டம் பலத்துத்துஞ்சிய’ மாக்கோதை என மக்கள் அழைக்கலாயினர். சில ஏடுகளில் ‘கோட்டம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடருக்குப் பதில் ‘கூத்தம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடர் காணப்படுகிறது. "சேர நாடு கூத்துகளுக்குப் பேர் பெற்ற நாடாகும். கூத்து நடைபெறும் கூத்தம்பலங்கள் பல அந்நாட்டிலிருந் திருத்தல் கூடும். மன்னன் மாக்கோதை அத்தகைய கூத்தம்பலத்தே யிருந்து ஆங்கு நடைபெற்ற கூத் தொன்றைக் கண்டிருக்குங்கால் உயிர் துறந்தனன். அதனால் அவன் பெயர் கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவதாயிற்று,” என்று சிலர் கூறுவர். கிள்ளி, வளவன் என்பன சோழர்களைக் குறிப்பன போல, வழுதி, மாறன் என்பன பாண்டியர்களைக் குறிப்பன போலக், கோதை என்பது சேரர்களைக் குறிக்க வரும் பெயர்களுள் ஒன்றாகும்.

மன்னன் மாக்கோதை பாடிய புறநானூற்றுப் பாடல், அவன் தன் மனைவிபால் கொண்டிருந்த பேரன்பைப் புலப்படுத்தும். மாக்கோதையின் மனைவியாராகிய அரசமாதேவியார் இறந்தார். அவர் உடலை ஈமத்தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். அவர் உடல் எரிகின்றது. அதைக் கண்டு நிற்கும் மாக்கோதையின் உள்ளம் கடந்த காலத்தை எண்ணித் துயர் உறுவதாயிற்று. “பிரியேன்; பிரியின் உயிர்தரியேன்!” எனக் கூறிய உரைகளை எண்ணிப் பார்த்தான்; அவன் உள்ளம் நாணிற்று. “இன்று அவள் இறந்து விட்டாள். அவளுடல் என் கண் முன்னரே இதோ பற்றி எரிகின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனினும் என் உயிர் போய் விடவில்லை. வாழ்கிறது என் உயிர். இந்நிலை என்னைப் பெரிதும் வருத்துகின்றது. அவள் இறந்ததால் நான் பெற்ற நோய் அத்துணைப் பெரிதன்று. பிரிவுத் துயர் உண்மையில் மிகப் பெரிதாயின் அஃது என் உயிரையுமன்றோ கொண்டு போயிருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லையே! என்னே இவ்வுலகியல்! என்னே இவ்வியற்கையின் திருவிளை யாடல்!” என்றெல்லாம் கூறி வருந்தினான். இக்கருத்துக் களமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. உள்ளத் துயரத்தை உயர்ந்த முறையில் வெளியிடும் சிறந்ததொரு புறப்பாடலாக அது திகழ்கின்றது.


14

பெருங்கோப் பெண்டு



பகைவர் கைப்பற்றி ஆண்ட தன் நாட்டின் ஒரு பகுதியாய் ஒல்லையூர் நாட்டை, அப்பகைவரை அழித்து வென்று, மீட்டும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்து, அச்சிறப்பால், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என அழைக்கப் பெற்ற அரசன் வரலாறு முன்னர் உரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரனும், நிறைந்த குணமுடையோனுமாய அப்பூதப் பாண்டியன் மனைவியே பெருங்கோப் பெண்டு. பெருங்கோப் பெண்டு எனும் பெயர் பேரரசன் மனைவியார் எனப் பொருள் தந்து, அரசர் மனைவி யரைக் குறிக்கும் பொதுப் பெயராய் வழங்குமேனும், பெருங்கோப் பெண்டு எனும் பெயரால் சிறப்பாக அறியத் தக்கவர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவியராய இவர் ஒருவரே.

"சிறந்த பேரமர் உண்கண் இவள்!" எனத் தன் கணவனாலேயே பாராட்டப் பெறும் பேறுடையளாய பெருங்கோப்பெண்டு, பேரழகும், பெருங்குணமும் உடையளாவாள். கணவன்பால் பேரன்புடைய இவள், அவன் பேரன்பையும் குறைவறப் பெற்றிருந்தாள். ‘பகைவரை வென்று துரத்தேனாயின், என் அரியணை என்னுடன் அமர்ந்திருக்கும், அழகும், அறிவும் நிறைந்தவளாய என் மனைவியைப் பிரிவேனாகுக!” என அவன் கூறும் உரையால், இவள்பால் அவன் கொண்டிருந்த அன்பு எத்துணை ஆழமும், அக்லமும் அளக்கலாகாப் பெருமையும் உடைத்து என்பது விளங்கும்.

ஒருநாள், அரசியல் அலுவல் காரணமாகத் தன் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை பூதப் பாண்டியனுக்கு ஏற்பட்டது. இவள் தன்னைப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழாள் என்பதை அவன் உணர்வான். முழவோசை இடைவிடாது முழங்கிக் கொண்டே உளது. மேலும் காவலர் கண் இமையாது காத்துக் கொண்டும் உள்ளனர். ஆகவே சிறிது அச்சம் அற்று இருத்தலும் இயலும்! என்று எண்ணிப் பிரிந்து சென்றான்; சென்றவன் சென்ற இடத்திலேயே நெடிது நின்றானும் அல்லன், விரைந்து வீடுவந்து சேர்ந்து விட்டான். என்றாலும், அத்துணை ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்று, அத்துணை விரைவில் வந்தானாயினும், அச்சிறு பிரிவினையும் இவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உளம் தளர்ந்து உறுதுயர் உற்றாள். அத்துணை அன்புடையாள் இவள்.

இவ்வாறு அன்பால் பிணைப்புண்டு அறவாழ்வு மேற்கொண்டு வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையில் பெரும் பிரிவு குறுக்கிட்டு விட்டது. தன்னை வந்து எதிர்த்த சேர சோழ வேந்தர்களோடு செய்த போரில் பூதப்பாண்டியன் இறந்து விட்டான். பிரியாது வாழ்ந்தரிடையே பிரிவு தோன்றிவிட்டது; தோன்றிய பிரிவு சிறிது நாள் கழித்துக் கூடலாம் சிறு பிரிவாகாது, மீண்டும் கூடலாகாப் பெரும் பிரிவாகி விட்டது. களத்தில் கணவன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டாள், பெருங்கோப் பெண்டு. கலங்கினாள்; கண்ணிர் விட்டுக் கதறி அழுதாள்; சிறிது நிலை தெளிந்து சிந்தித்தாள்.

“கணவன் இறந்தால், இறந்தான் கணவன் என்ற செய்தி அறிந்த அந்நிலையே, ‘அவன் சென்ற இடத்திற்கே யானும் செல்க!’ என அறிவிப்பார் போல், அவன் உயிரைப் பின்பற்றித் தம் உயிரையும் இழக்கும் இயல்புடையாரே, தலையாய கற்புடையராவர். அவ்வாறு உயிர்விடும் ஆகூழ் அற்றவிடத்து, அவன் உடல் எரிபுக்கு அழிந்ததேபோல், தம் உடலையும் எரியில் வீழ்த்தி அழித்துவிட்டுத் தம் உயிரை இழப்பவர் இடையாய கற்புடையராவார். அத்துணை மனவலி அற்றவர், அல்லது, கணவனை இழந்தும் உயிர்வாழ வேண்டிய இன்றியமையாக் கடமை உடையவர், இப்பிறவியில் இழந்த உடனுறை வாழ்வு, வரும் பிறவியில் வந்து வாய்க்குமாக என வேண்டி, வெள்ளரிக்காய் விதைகளைப் போன்று நீரில் மிதந்து கிடக்கும் பழஞ்சோற்றைப் பிழிந்தெடுத்து, நெய் கலவாம்ல் வெந்த வேளைக் கீரையைக் கலந்து கொண்டு, எள் துவையல் துணை செய்ய உண்டு, பரற்கற்கள் உறுத்தும் பாழ்ந்தரையில் பாய் இல்லாமல் படுத்து உறங்கி, உள்ள நாளளவும், உறுதுயர் பொறுத்து நோன்பு மேற்கொண்டு வாழ்பவர் கடையாய கற்புடையாராவர். அவருள் தலையாய கற்புடையார் வரிசையில் வைத்துப் போற்றும் வாய்ப்பு எனக்கு இல்லாது போயிற்று. அவ்வாய்ப்பு இழந்த யான், அவருள் இடையாயர் பெறும் பெருநிலையினையாவது பெறுதல் வேண்டும்; அவர் உயிரோடு போதல்செல்லா உயிரோடு இருந்து பழியுற்ற யான், போகாத அவ்வுயிரைப் போக்கியேனும் புகழ் பெறுதலே பின்பற்றத் தகுவதாம்; அதுவே பேரறமாம்!” எனத் துணிந்தாள்.

காட்டின் நடுவே அமைந்திருந்த காடுகிழாள் கோயில் முன், கரிய கட்டைகளைக் கொண்டு பிணப் படுக்கை ஒன்று அமைக்கப் பணித்தாள். அவ்வாறே ஆங்கு அவள் தீப்பாய்தற்காம் பெருந்தீ எழுப்பப் பட்டது. உயிர் மாசு துடைக்கத் துணிந்த பெருங் கோப்பெண்டு, உடல் மாசு போகக் குளித்துவிட்டு, நீர் ஒழுகும் மயிர் இரு பக்கமும் தொங்கச் சுடுகாடு நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

பாண்டியன் அவைக்களப் புலவர்களுள் ஒருவராய பேராலவாயர் அக்காட்சியைக் கண்டார். காடுகிழாள் கோயில் முன், அக்காட்டு வாழ் மக்கள், யானைகள் கொண்டு வந்த விறகினால் தீ மூட்டி வாழ்ந்ததையும், காட்டுக் கொடுவிலங்குகளுக்கு அஞ்சும் மானினங்கள் ஆங்குவந்து அத்தீயின் ஒளியில் அச்சம் ஒழிந்து உறங்கியதையும், அவ்வாறு உறங்கும் மானினங்களுக்கு அத்தீயால் ஊறு ஒன்றும் இலதாகவும், தீங்கு வந்துறுமோ என அஞ்சிய மந்திகள் அத்தீயை அழித்ததையும் கண்டு மகிழ்ந்தவர் புலவர். அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், தீப்பாய்வான் எண்ணி ஆங்கு மெல்ல அடியிட்டு வரும் பெருங்கோப் பெண்டினைக் கண்டார்; அவர் கலக்கம் பெரிதாயிற்று. மானினம் பிழைக்க, மந்திகள் நெருப்பழித்த நிகழ்ச்சியை நினைந்தார். மந்தி செய்ததைத் தம்மால் செய்ய முடியவில்லையே, அரசமாதேவி உயிரிழப்பதை உணர்விழந்து பார்த்திருப்பதல்லது, தடுத்து நிறுத்த இயலவில்லையே என எண்ணி எண்ணித் துயர் உற்றார். அந்நிலையில், பூதப்பாண்டியன் இறந்தமை யால் அரசிழந்து அல்லல் உறும் பாண்டி நாட்டு மக்களின் அவல நிலை அவர் நெஞ்சில் நிறைந்தது. உடனே, தீயில் குதிக்கத் துணிந்து நிற்கும் பெருங்கோப் பெண்டின் அண்மையிற் சென்றார். நாட்டின் நிலையினை எடுத்துக் காட்டிக் கடமைக்காகக் கணவனைப் பிரிந்து வாழ்தலும் ஒரு வகையில் கவின் உடையதே என மெல்ல எடுத்துரைத்தார்.

புலவர் கூறுவனவற்றைக் கேட்டாள், பெருங் கோப்பெண்டு. அந்நிலையே பெருங்கோபம் உற்றாள். “இறந்த கணவனோடு பிரிந்து போகும் உயிர் உடையவரே கற்புடையராவர்; அவ்வாய்ப்பு வாய்க்கப் பெறாதார், தம் உயிரை யாதானும் ஒருவகையில் விடுத்து உயர்ந்து அக்கற்பு நெறியில் நிற்றல் வேண்டும் என மகளிர்க்குரிய கடமைகளை மறவாது எடுத்துரைப்பதே மாண்புடையார் கடனாம். தாங்கள் அக்கடமையில் தவறி விட்டீர்; அவ்வறவுரை கூறாது விட்டதே தங்கள் சான்றாண்மைக்கு இழுக்காம்; அங்ங்னமாகவும், தாங்கள் கூறாத அவ்வற நெறியினைக் கணவன்பால் கொண்ட என் அன்பையும் என் கடமையையும் காட்ட மேற்கொண்டு தீப்பாயத் துணிந்து நிற்கும் என் செயல் கண்டு, என்னைப் போற்றி, அக்கடமையில் வழுவா வாறு நின்று காப்பதையும் விட்டுத் தடுத்து நிறுத்துகிறீர்! தம் கடமை மறந்து, கடமை உணர்ந்து செய்வாரையும் தடுத்து, அக்கடமையினின்றும் வழுவுதற்காம் வழிகாணும் தங்களின் சான்றாண்மையின்பால் ஐயங் கொள்கிறேன். ஏனைப் பெண்களைப் போன்றே என்னையும் எண்ணி விடாதீர்கள். கணவன் இறந்த பின்னர்க் கைம்மை நோன்பு நோற்று வாழும் அவ்வாழ்வு வேண்டேன். கணவனோடு இறந்து கடமையிற் பிறழாக் கற்புநெறி நிற்கும் துணிவுடையேன். அத்தகைய துணிவுள்ளம் உடைய என் உடலை இத்தீத் துயர் உறுத்தாது; கணவனை இழந்து கைம்மை நோன்பு நோற்கும் அவர்க்குத் தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை, காட்டுத் தீப்போல் கடுந்துயர் உறுத்தலும், கடமை உணர்ந்து கணவனோடு உயிர் துறக்கத் துணிந்தார்க்குக் காட்டுத் தீ, தாமரை மலர்ந்த தண்ணிர்ப் பொய்கை போல் குளிர்ந்து காட்டலும் உலகியல். கணவனை இழந்தார்க்குக் காட்டுத் தீயும், தாமரைப் பொய்கையும் ஒரு தன்மையவே. ஆகவே, இந்த ஈமத் தீயால் துயர் உறுவேன் என்று உள்ளம் கவலற்க! தீப்பாய்ந்து உயிர் போக்கி உயர்வடையத் துணிந்த என்னை, இடைநின்று தடுத்தல் ஒழிக கூறி, விடைபெற்று விரைந்து தீப்புகுந்து விழுப்புகழ் பெற்றாள்.

கணவன் பாராட்டக் காதல் வாழ்வு வாழ்வதும், அக்கணவன் இறந்த பின்னரும் இருந்து உயிர்வாழ விரும்பாமையும், கற்புடைய மகளிர்க்குப் பொற்புறு அணிகலன்களாம் எனச் சொல்லால் உரையாது, செயலால் செய்து காட்டிய பெருங்கோப் பெண்டு, ‘அறம் கூறுதல் ஆன்றோர் கடன், அவ்வாறு தவறிய அவரைக் கடமை உணர்ந்தார், அவர் தவறு காட்டித் திருத்தி நல்வழிப்படுத்தலே நன்னெறி!’ என எடுத்துக் கூறும் அறிவுரைகள் அறிந்து மேற்கொள்ளத் தக்கனவாம்.


15

கிள்ளி வளவன்



சோழ நாடு திருமாவளவன் ஆட்சிக்குப் பின் இரு கூறுபட்டு இரு திறத்தாரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றிற்குப் புகார் தலைநகர். மற்றொன்றிற்கு உறையூர் தலைநகர். சோழன் கரிகாலனுக்குப் பின்னர் உறையூரும் உறையூர்ச் சோழரும் சிறந்து விளங்கினர். உறையூரையாண்ட சோழ அரசர்களுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறந்தவனாவன். இவன் புலவர் பாராட்டும் புகழுடையவன். “இவன் பேராண்மை பகைவரும் அஞ்சும் தன்மையது. இவன் கை வண்மை மாரியும் தோற்கும் இயல்பினது. இவன் செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடையவன்!” எனப் புலவர் கூறும் பாராட்டுக்கள் பல.

இவனது நாட்டு வளம் குறித்து ஒரு புலவர் மிகவும் நயம்படப் பாடியுள்ளார். நீர் வளம் நிறைந்தமையால் ஒரு பெண் யானை படுத்து உறங்குவதற்காம் நிலம், ஏழு ஆண் யானைகளைக் காப்பாற்ற வல்ல பெரும் உணவினைத் தரும் என்ற பொருள்படும்படி, “ஒரு பிடி படியும் சீறிடம்

எழுகளிறு புரக்கும் நாடு”



எனப் பாடிப் புகழ்ந்துள்ளார்.

நற்குடிப் பிறந்தாரிடையே ஒழுக்கமும், வாய்மை யும், நாணும் இயல்பாகவே பொருந்தியிருக்கும். அடுக்கிய கோடி பெறினும், குன்றுவ செய்யாக் குணம் குடிப் பிறந்தாரிடையேதான் உண்டு என்பர். ஆதலின் உயர் குடியினராதல் ஒருவர்க்குக் கருவிலேயே வாய்த்த திருவாகும். கிள்ளி வளவன் பிறந்த சோழர்குடி வழி வழிச் சிறப்புடைய குடியாம். அவன் பெருமைக்கு அவன் குடிப் பெருமையே காரணம். இதை மாறோக்கத்து நப்பசலையார் விளக்குந் திறம் போற்றத் தக்கது. “கிள்ளி வளவ! நீ கொடையாற் சிறந்தவன் எனக் கூறுகின்றனர். அதனால் உனக்கொரு புகழுமில்லை; அது நீ பிறந்த குடியின் பண்பு. அடைக்கலம் புகுந்த புறாவின் பொருட்டுத் துலை புகுந்து புகழ் கொண்ட சிபியினை முதல்வனாகக் கொண்டது உன்குடி கொடைக் குணத்தை இயல்பாகக் கொண்டது சோழர் குடி. அக்குடி வந்தார் அனைவருமே அக்குணமுடையாராவர். ஆகவே அக்குணம் உன்பாலிருப்பது உனக்கே உரிய புகழன்று. அஃது உன் குடிப்புகழ்.

“கிள்ளி வளவ! நீ பகைவரும் அஞ்சும் பேராண்மையுடையவன் என்று கூறுகின்றனர். அதுவும் உனக்குப் புகழ் அளிக்காது. உன் குடி, தேவர் பொருட்டு ஆகாயத்தே திரிந்து கேடு விளைக்கும் கோட்டைகளை வாழ்விடமாகக் கொண்ட அரக்கர்களை அழித்துப் புகழ் பெற்ற தொடித்தோட் செம்பியனை முன்னோ னாகக் கொண்டது. ஆதலின் வெற்றி சோழர் பண்பு. ஆகவே வெற்றி வீரனாவதில் உனக்குத் தனிப் புகழில்லை.

“கிள்ளி! முறை வேண்டினார்க்கும், குறை வேண்டினார்க்கும் அரச மன்றத்தில் நீ சான்றோரோடு காண்டற் கெளியனாய் இருந்து முறை செய்வாய் எனக் கூறுகின்றனர். இதனாலும் உனக்குப் புகழில்லை. உன் தலை நகராகிய உறையூர்க்கண் அமைந்துள்ள அவையில் அறம் என்றும் நின்று நிலை பெற்றிருக்கும் என்ப. ஆகவே அறங் கூறுதல் சோழர் குடிக்கு இயல்பாம். ஆதலின் அதிலும் உனக்குப் புகழில்லை.”

மேற்கூறியவாறு மாறோக்கத்து நப்பசலையார் சோழர்குடி இயல்பாகவே சிறந்தது, கொடையிற் புகழ் பெற்றது, அறத்தில் நின்றது என்று அவன் குடிப்புகழ் போற்றினார்.

புகழ் மிக்க மன்னனாய்த் திகழ்ந்த கிள்ளி வளவன் புலவர் பலர் சூழ வாழும் நல்வாய்ப்புப் பெற்றிருந்தான். எனவே, அவனும் ஒரு புலவனாய் விளங்கியதில் வியப்பொன்று மில்லையன்றோ கிள்ளி வளவன் பண்ணன் என்பானைப் பற்றிப் பாடிய பாடல் மிகவும் சுவையுடையதாகும்.

பண்ணன் என்பான் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்று புலவர் பாராட்ட வாழ்ந்தவன். புலவர் பலரின் பாராட்டைப் பெற்ற கிள்ளி வளவனே இவனைப் பாராட்டினான் எனில் இவன் பெருமைக்கோர் எல்லையுண்டோ? பண்ணன் பேராண்மையும், பெருங்கொடையும் உடையவன். சோழ நாட்டில் காவிரிக் கரையிலிருந்த சிறுகுடி என்னும் சிறந்த ஊரின் தலைவன். வள்ளல் ஒருவன் சிறப்பினை அவன்பால் பரிசில் பெறும் புலவர் பாடுவதிலும், அவனைப் போன்ற பிறிதொரு வள்ளல் பாராட்டுவதே உண்மைச் சிறப்பாகும். அத்தகைய பெருஞ் சிறப்புடையவன் பண்ணன். பெருங்கொடை வள்ளல் தலைவனாகிய கிள்ளி வளவன் பண்ணனைப் பாராட்டியுள்ளான்.

பண்ணன்பால் பரிசில் பெறக் கருதிய பாணன் ஒருவன், அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கின்றான். பண்ணன்பால் பரிசில் பெற்ற இளைஞரும் முதியவருமாய பாணர்கள் வேறு வேறு திசை நோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்றனர். இக்காட்சியைப் பாணன் காண்கின்றான். பழுமரம் ஒன்றில் பழம் உண்ணுவதற்கு வந்து கூடிநிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலிபோல் பண்ணன் அறச்சாலையில் உணவு பெறுவோர் எழுப்பும் ப்ேரொலி கேட்கலாயிற்று. அவன் சிறுகுடி அண்மையில் உள்ளது என்பதனை அஃது உணர்த்தியது. பாணனும் சிறுகுடி அண்மையில் உள்ளதை உணர்ந்தான்; உணர்ந்த பின்னும், தன் பசிக்கொடுமையால், “பண்ணன் சிறுகுடி யாண்டுளது? பண்ணன் சிறுகுடி யாண்டுள்ளது?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தான். பரிசில் பெற்றுத் திரும்பும் பாணர் சிலரை நெருங்கி, “ஐய, பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் யாண்டுள்ளது? அண்மையிலா? சேய்மையிலா?” என்று கேட்கலாயினன். பாணன் ஒருவன் இவ்வாறு பண்ணன் சிறுகுடி நோக்கிச் செல்லும் காட்சியை அப்படியே படம் எழுதிக் காட்டுவது போன்று கிள்ளி வளவன் பாடிக் காட்டியுள்ளான்.

கிள்ளி வளவன் பாடியுள்ள புறநானூறு 173ஆம் பாடலில் பண்ணன் அறச்சாலையில் எழும் ஒலிக்குப் பழமரம் சேர்ந்த பறவையினங்கள் எழுப்பும் ஒலியினை உவமையாகக் கூறியுள்ளான். அறச்சாலையினின்றும் உணவு பெற்று மீளும் பாண் சிறுவர் வரிசை வரிசையாகச் செல்லும் காட்சிக்கு, மழை வரும் என அறிந்து, முட்டைகளை ஏந்திக்கொண்டு, மேட்டு நிலம் நாடி வரிசை வரிசையாக எறும்புகள் செல்லும் காட்சியினை உவமையாகக் கூறியுள்ளான். இவ்வுவமைகளின் அழகும் எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் தப்பாது மழை பெய்யும் என்ற உண்மை உரையினை எடுத்தாளும் சிறப்பும் மிகச் சிறந்தனவாம். பாணர்க்குப் பரிசில் அளித்து, அவர் பசி போக்கித் துணை புரியும் பண்ணனைப் பசிப்பினி மருத்துவன் எனப் பெயரிட்டுப் பாராட்டும் பண்பு மிக உயர்ந்ததாம். இவ்வாறு கிள்ளிவளவன் பாடல் புதுமை நலத்தில் சிறந்து விளங்குகின்றது.

நாடாளுவதில் வல்ல காவலர்கள், நற்றமிழ் வல்ல பாவலர்களாகவும் திகழ்ந்த அவர்கள், புலமைச் சிறப்பினை அறிந்து, அவர்கள் பாடல்களின் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பயன் பெறுவோமாக!